அமெரிக்க ஐக்கிய நாட்டின்மாநிலம் என்பது தனது இறைமையைஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உடன் பகிர்ந்து கொண்டுள்ள 50 அங்க அரசியல் அமைப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூட்டரசிற்கும் இறையாண்மை பகிர்ந்து கொள்ளப்படுவதால் அமெரிக்கர்கள் கூட்டுக் குடியரசிற்கும் தாங்கள் வாழும் மாநிலத்திற்கும் குடியுரிமை பெற்றவர்களாவர்.[3] மாநில குடியுரிமையும் வாழ்விடமும் நெகிழ்வானவை; மாநிலங்களுக்கிடையே குடிபெயர எந்த அரசு அனுமதியும் தேவையில்லை. சில நீதிமன்றத் தடை பெற்றவர்கள் மட்டுமே குடிபெயர அனுமதி தேவை.
மக்கள் தொகையின்படி மிகச் சிறிய மாநிலமாக 600,000 மக்கட்தொகை கொண்ட வயோமிங்கும் மிகப்பெரிய மாநிலமாக 38 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவும் உள்ளன; பரப்பளவில் மிகச்சிறியதாக 1,214 சதுர மைல்கள் (3,140 km2) பரப்புள்ள றோட் தீவும் மிகப் பெரியதாக 663,268 சதுர மைல்கள் (1,717,860 km2) பரப்புள்ள அலாஸ்காவும் உள்ளன. நான்கு மாநிலங்கள் மாநிலம் என்பதை விட பொதுநலவாயம் என தங்கள் அலுவல்முறையான பெயர்களில் குறிப்பிடுகின்றன.
மாநிலங்கள் கவுன்ட்டி அல்லது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உள்ளாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பினும் இறையாண்மை இல்லை. மாவட்டக் கட்டமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. மாநில அரசுகளுக்கு மக்கள் அதிகாரம் வழங்குகின்றனர்; தங்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்துமே மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு மாநில அரசிற்கும் மூன்று பிரிவுகள் உள்ளன: ஆளுநர் (நிர்வாகம்), மாநில சட்டப்பேரவை (சட்டவாக்கம்), மாநில நீதிமன்றம் (நீதி பரிபாலனம்).[4]ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் மாநிலங்களுக்கு பல அதிகாரங்களும் உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன; அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை ஏற்கும் அதிகாரமும் இவற்றில் ஒன்றாகும். பொதுவாக, உள்ளக சட்ட ஒழுங்கு, பொதுக் கல்வி, பொதுச் சுகாதாரம், உட்கட்டமைப்பு, உள்ளக போக்குவரத்து மற்றும் மாநிலங்களிடையேயான வணிகக் கட்டுப்பாடு ஆகியவை மாநிலங்களின் பணிகளாகவும் பொறுப்புகளாகவும் கருதப்படுகின்றன; இருப்பினும் தற்காலத்தில் இவற்றில் கூட்டரசு கணிசமான அளவில் முதலீட்டை செய்துவருவதுடன் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது. காலவெள்ளத்தில், அமெரிக்க அரசியலமைப்பு திருத்தப்பட்டு வந்துள்ளது; அதன் பயன்பாடும் புரிதலும் மாறியுள்ளது. பொதுவாக மையப்படுத்தலை நோக்கிய பயணமாக இது உள்ளது. மாநிலங்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து உரையாடப்பட்டு வருகின்றது.
மாநிலங்களும் அவர்களின் குடிகளும் கூட்டரசின் பேராயத்தில் அங்கம் பெறுகின்றனர்; செனட் மற்றும் கீழவை என்ற ஈரவைகளைக் கொண்ட சட்டமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட்டர்களும் குறைந்தது ஒரு கீழவை உறுப்பினரும் ஒதுக்கப்பட்டுள்ளனர். கீழவையில் கூடுதல் உறுப்பினர்கள் அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை பொறுத்து வழங்கப்படுகின்றது. இதற்காக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசியலமைப்பின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் மாநிலத்தின் விகிதாச்சாரத்தின்படி உறுப்பினரிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.[5] தவிரவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவிற்கு தங்கள் மாநிலத்தின் செனட்டர்கள், கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு இணையான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.[6]
ஒன்றியத்திற்கு புதிய மாநிலங்களைச் சேர்க்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு பேராயத்திற்கு வழங்கியுள்ளது.[7] 1776இல் நிறுவப்பட்ட பிறகு துவக்கத்தில் பதின்மூன்றாக இருந்த மாநிலங்கள் தற்போது 50ஆக உயர்ந்துள்ளது. கடைசியாக 1959இல் அலாஸ்காவும்அவாயும் மாநிலங்களாக ஏற்கப்பட்டன.
மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான அதிகாரம் உடையவையா என்பது குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை. உள்நாட்டுப் போரை அடுத்து சில ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம், டெக்சாசு எ. வைட் வழக்கில், ஒரு மாநிலம் தன்னிச்சையாக அவ்வாறு செய்ய இயலாது எனத் தீர்ப்பு வழங்கியது.[8][9]
ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்
ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களின் அஞ்சல் குறியீட்டுச் சுருக்கங்களும் தலைநகரங்களும் எப்போது ஒன்றியத்தில் மாநிலமாக இணைக்கப்பட்டன என்னும் தகவல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
↑"United States Summary: 2000"(PDF). U.S. Census 2000. U. S. Census Bureau. ஏப்ரல் 2004. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)