அட்லான்டா

அட்லான்டா
மேலே இருந்து கீழே வலம்: Buckhead, பாக்ஸ் தியேட்டர், ஜோர்ஜியா மாநிலம் கேபிடல், நூற்றாண்டு ஒலிம்பிக் பார்க், மில்லினியம் கேட், விதானம் வாக், ஜோர்ஜியா மீன், பீனிக்ஸ் சிலை, மற்றும் மிட்டவுன் வானலைகளில் இருந்து பார்த்த அட்லாண்டா வானலைகளில்
மேலே இருந்து கீழே வலம்: Buckhead, பாக்ஸ் தியேட்டர், ஜோர்ஜியா மாநிலம் கேபிடல், நூற்றாண்டு ஒலிம்பிக் பார்க், மில்லினியம் கேட், விதானம் வாக், ஜோர்ஜியா மீன், பீனிக்ஸ் சிலை, மற்றும் மிட்டவுன் வானலைகளில் இருந்து பார்த்த அட்லாண்டா வானலைகளில்
அட்லான்டா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அட்லான்டா
சின்னம்
அடைபெயர்(கள்): ஹாட்லான்டா,[1] ATL,[2] The City in a Forest,[3] The A,[4] The Gate City.[5]
குறிக்கோளுரை: Resurgens (லத்தின் மொழியில் "மீண்டும் எழுவது")
ஃபுல்டன், டிகேப் மாவட்டங்களிலும் ஜோர்ஜியா மாநிலத்திலும் இருந்த இடம்
ஃபுல்டன், டிகேப் மாவட்டங்களிலும் ஜோர்ஜியா மாநிலத்திலும் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாநிலம்ஜோர்ஜியா
மாவட்டம்ஃபுல்டன், டிகேப்
டர்மினஸ்1837
மார்தாஸ்வில்1843
அட்லான்டா நகரம்1847
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஷர்லி ஃப்ராங்க்லின் (D)
பரப்பளவு
 • நகரம்132.4 sq mi (343.0 km2)
 • நிலம்131.8 sq mi (341.2 km2)
 • நீர்0.7 sq mi (1.8 km2)
 • நகர்ப்புறம்
1,962.9 sq mi (5,084 km2)
 • மாநகரம்
8,376 sq mi (21,690 km2)
ஏற்றம்
738−1,050 ft (225−320 m)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்4,86,411
 • அடர்த்தி3,690.5/sq mi (1,220.5/km2)
 • நகர்ப்புறம்
34,99,840
 • பெருநகர்
51,38,233
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிழக்கு)
இடக் குறியீடு(கள்)404, 678, 770தொலைபேசிக் குறியீடு
FIPS குறியீடு13-04000[6]
GNIS அடையாளம்0351615[7]
விமான நிலையம்ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம்- ATL
இணையதளம்http://www.atlantaga.gov/

அட்லான்டா (Atlanta) அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அமெரிக்காவில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி 9 ஆவது மிகப்பெரிய மாநகரம் ஆகும். இது ஃபுல்டன் மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது, ஆனால் இந்த நகரின் ஒரு சிறிய பகுதி டிகேப் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. 2006ன் கணக்கெடுப்பின் படி அட்லான்டா நகரில் 486,411 மக்கள் வாழ்கிறார்கள்; அட்லான்டா புறநகரப் பகுதியையும் சேர்த்து மொத்தம் 5,138,223 மக்கள் வாழ்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் பல ஆண்டுகளாக முதன்மையாக விளங்கிய நகரங்களில் ஒன்றாக இருந்த அட்லான்டா, அண்மைக் காலத்தில் உலகளாவிய செல்வாக்கு பெற்ற நகரமாக மாறியுள்ளது. 2000 முதல் 2006 வரை அட்லான்டா மாநகரத்தின் மக்கள் தொகை 20.5% என்னும் அளவில் வளர்ந்தது; இதே காலப்பகுதியில் வேறு எந்தவொரு அமெரிக்க மாநகரமும் இந்த அளவு வளர்ச்சி பெறவில்லை. இந்த விரைவான மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக மாநகரப் பரப்பளவும் விரிவடைந்தது; அண்மைய ஆண்டுகளில் அட்லான்டா மாநகராட்சி இந்த பெருநகர விரிவை (urban sprawl) அடைந்திருந்த பொழுதும், இணக்கமான சுற்றுச்சூழலியல் கொள்கைகளும் கொண்டிருப்பதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் பாராட்டுகின்றன[8].

வரலாறு

அட்லான்டா இன்று இருக்கும் இடத்தில் ஐரோப்பியர்கள் குடியேற்றத்துக்கு முன், கிறீக் மற்றும் செரோக்கீ மக்கள் இவ் இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தோற்றத்துக்கு பிறகு, 1836இல், ஜோர்ஜியா மாநில சட்டமன்றம் (Georgia General Assembly) ஜோர்ஜியாவிலிருந்து அமெரிக்காவின் நடுப் பகுதிக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க வாக்களித்து ஒப்புதல் அளித்தது. கண்ணீர்ப் பாதை என்று பின்னர் அழைக்கப்பட்ட நிகழ்வில், அங்கிருந்த படி பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக துரத்திவிட்டு, இந்த தொடர்வண்டிப் பாதையை கட்ட தொடங்கினார்கள். முதலில் இப்பாதையின் கிழக்கு நிறுத்தம் அல்லது "டெர்மினஸ்" (Terminus) என்று கூறப்பட்ட பகுதி வளர்ச்சி அடைந்து, இன்றுள்ள அட்லான்டா பகுதி உருவானது. 1842இல் இந்த ஊருக்கு "மார்த்தாஸ்வில்" (Marthasville) என்று பெயர்வைக்கப்பட்டது. 1847இல் இந்நகரத்தின் பெயர் மீண்டும் "அட்லான்டா" என்று மாற்றப்பட்டது. மேலும் பல தொடர்வண்டிப் பாதைகள் இப்பகுதிகளில் அமையவே அட்லான்டாவின் மக்கள் தொகை இன்னும் கூடி வளர்ந்தது. 1860இல் இந்நகரத்தில் 7,741 மக்கள் குடியிருந்தார்கள்.

உள்நாட்டுப் போரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒரு நடுச்சிறப்பான நகரமாக இருந்தது. கூட்டமைப்பு இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கும் ஒரு முக்கியமான, நடுவான நகரமாக, இருந்தது. 1864இல் ஐக்கிய அமெரிக்க படைத்துறை (இராணுவ) ஜெனெரல் வில்லியம் ஷெர்மன் அட்லான்டாவை நான்கு மாத முற்றுகைக்குப் பின் கைப்பற்றி, அந்நகரின் மருத்துவ மனைகள் வழிபாட்டுக் கோயில்களைத் தவிர மற்ற எல்லாக் கட்டடங்களை எரித்து தரைமட்டமாக்கச் செய்தார்

உள்நாட்டுப் போருக்கு பிறகு முன்னாள் அமெரிக்க கூட்டமைப்பு மாநிலங்களில் மீட்டுருவாக்கம் செய்யும்பொழுது அட்லான்டாவிலும் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கி, அடிமைகளாக முன்னாள் இருந்தவர்களின் விடுதலைக்கும் சில உரிமைகளும் கொடுக்கப்பட்டன. 1868ல் ஜோர்ஜியா மாநிலம் தலைநகரத்தை அட்லான்டாவுக்கு மாற்றப்பட்டது. 1865 முதல் 1880கள் வரை பல பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் நிறுவனங்கள் இந்நகரத்தில் உருவாக்கப்பட்டன.

இவ் வளர்ச்சியின் காரணமாக நிறைய பேர் அட்லான்டாவுக்கு வந்து இனக்குழு எதிர்ப்புகால் தொடங்கப்பட்டன. 1906இல் அட்லான்டா இனக்கலவரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 1913ல் ஒரு வெள்ளை குழந்தை கொல்லப்பட்டார் என்று ஒரு யூத கடைக்காரர் லியோ ஃப்ராங்க்கை குற்றம்சாட்டி ஒரு வெள்ளைக்கார கூட்டம் இவரை படுகொலை செய்ததின் விளைவாக அட்லான்டாவின் பெரும்பான்மையான யூதர்கள் அட்லான்டாவிலிருந்து வெளியேறிப் போனார்கள்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியின் படைத்துறை (இராணுவ) வீரர்கள் பயிற்சிக்காக அட்லான்டாவுக்கு வந்தார்கள். இதுனால் நிறைய போர் நிறுவனங்கள் அட்லான்டாவில் உருவாக்கப்பட்டு அட்லான்டாவின் பொருளாதாரம் வளர்ந்தது.

1954ல் Brown v. Board of Education என்ற முக்கியமான நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் "தனித்தனி ஆனால் ஒன்று" (separate but equal) சட்டங்களை மாற்றி அமெரிக்க சமூக உரிமை இயக்கம் தொடங்கப்பட்டது. இதுனால் அமெரிக்கா முழுவத்திலும், முக்கியமாய் தென் பகுதியில் புது இனப்பிரச்சினைகள் வந்தது. சமூக உரிமை இயக்கத்தில் அட்லான்டா ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. இந்நகரத்தில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்து வளந்து 1960களில் சமூக உரிமை போராட்டங்களை இங்கே நடத்தினார். இந்த காலத்தில் அமெரிக்க தென் பகுதியில் நிறைய வெள்ளை அரசியல்வாதிகள் பள்ளிகளை இனக்குழுக்கள் படி தனித்தனியாக இருக்கவேண்டும் என்று கூறும்பொழுது அட்லான்டா மாநகரத் தலைவர் ஐவன் ஆலன் மாநகராட்சி பள்ளிகளை ஒன்றாக படைத்தார். அட்லான்டாவின் சமூக உரிமை முன்னேற்றம் என்றால் மிக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அட்லான்டாவுக்கு வந்தார்கள். இன்று வரை "அமெரிக்காவின் கறுப்பு தலைநகரம்" என்று அட்லான்டா அழைக்கப்பட்டது.

1990இல் பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம் அட்லான்டாவில் 1996 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்கள். இதுக்காக அட்லான்டாவின் அரசு போக்குவரத்து, பூங்காக்கள், மைதானங்கள், கட்டடங்களை வளர்ச்சி செய்தார்கள். அட்லான்டா 1996 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் இரண்டு அமெரிக்க நகரங்களில் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

புவியியல்

அட்லான்டாவின் இன்மன் பார்க் பகுதி

ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த ஜோர்ஜியா மாநிலத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள அடலான்டாவின் பரப்பளவு 343 கி.மீ.². கடல் மட்டத்திலிருந்து 320 மீட்டர் உயரத்தில் அமைந்த அட்லான்டா டென்வருக்கு கிழக்கில் இருந்த பிரதான நகரங்களில் மிக உயரமானதாகும். அமெரிக்காவின் கிழக்குக் கண்டப்பிரிவு (Eastern Continental Divide) அட்லான்டா வழியாக போகிறது; இந்த பிரிவின் கிழக்கு விழும் மழை அட்லான்டிக் பெருங்கடலுக்கு பாய்கிறது, மேற்கு விழும் மழை மெக்சிகோ வளைகுடாவுக்கு பாய்கிறது. அட்லான்டா வடகிழக்கில் ஹால் மாவட்டத்தில் அமைந்த லெனியர் ஏரியிலிருந்து சாட்டஹூச்சி ஆறு அட்லான்டா வழியாக மெக்சிகோ வளைகுடாவுக்கு பாய்கிறது.

ஆப்பலேசிய மலைத்தொடரின் சிறுமலைகளுக்கு தென்கிழக்கின் பீட்மாண்ட் பீடபூமி பகுதியில் அட்லான்டா அமைந்துள்ளது.

அட்லான்டாவிலுள்ள பீட்மாண்ட் பூங்கா

கோப்பென் வகைப்பாட்டு பிரகாரம் அட்லான்டா ஈரக் கீழ்வெப்ப (humid subtropical) காலநிலை பகுதியில் அமைந்துள்ளது. ஜூலை மிக வெப்பமான மாதமாகும்; சராசரியாக பகலில் 31 °C -க்கு மேல், இரவில் கிட்டத்தட்ட 19 °C வெப்பநிலை இருக்கும். மிகவும் குளிரான மாதம் ஜனவரி; இந்த மாதத்தில் சராசரியாக பகல், இரவு வெப்பநிலைகள் 10 °C, -2 °C. சில நாட்கள் வெய்யில்காலத்தில் 38 °C (100 °F) -க்கு மேல் போகும்; குளிர்காலத்தில் சில நாட்கள் இரவில் -6 °C -க்கு கீழே போகும். பல மாதங்களிலும் மழை பெய்யும்; சராசரியாக ஒரு ஆண்டில் 128 ச.மீ. அளவில் மழை, 5 ச.மீ. அளவில் பனித்தூவி விழும்.

நகரப் பரவமைப்பு

மிட்டவுன் அட்லான்டா

அட்லான்டாவில் டவுன்டவுன் (Downtown), மிட்டவுன் (Midtown), மற்றும் பக்ஹெட் (Buckhead) ஆகிய மூன்று பிரதான பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அட்லான்டாவின் வியாபாரப் பகுதிகளும் வானளாவிகள் உள்ளன. புறநகரங்களிலும் "பெரிமிட்டர் சென்டர்" மற்றும் "கம்பர்லன்ட்" இரண்டு இடத்தில் உயர கோபுரங்கள் உள்ளன. டவுன்டவுனில் முதன்மையாக கட்டின கோபுரங்களும் சில புதுமையாக கோபுரங்களும் கட்டப்பட்டன. இப்பகுதியில் ஜோர்ஜியா மாநிலத்தின் அரசு கட்டடங்களும், ஜோர்ஜியா மாநிலப் பல்கலைக்கழகமும் உள்ளன. 191 பீச்ட்றீ கோபுரம், வெஸ்டின் பீச்ட்ரீ பிளாசா, சன்ட்ரஸ்ட் பிளாசா டவுன்டவுனின் சில பிரதான கோபுரங்கள் ஆகும். அமெரிக்காவின் பிரதான நகரங்களுடன் அட்லான்டாவின் மொத்த பூங்கா பரப்பளவு குறைவு, ஆனால் பீட்மாண்ட் பூங்கா, சாஸ்டெயின் பூங்கா, நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா மற்றும் வேறு சில பூங்காகள் உள்ளன.

1980கள் முதல் வணிக நிறுவனங்கள் டவுன்டவுனின் வடக்கில் இருக்கும் மிட்டவுன் பகுதியுக்கு போக ஆரம்பித்தன. பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா, அட்லான்டாவின் மிக உயரமான கட்டடமும் உலகில் 29ஆம் மிக உயரமான கோபுரம் இப்பகுதியில் உள்ளது. ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பாக்ஸ் நாடகமன்றம் மிட்டவுன் பகுதியில் அமைந்துள்ளன.

மிட்டவுன் பகுதியின் வடக்கில் அமைந்த பக்ஹெட் பகுதி அமெரிக்காவிலேயே மிகவும் செல்வம் மிகுந்த மக்கள் வசிப்பும் நகரங்களில் ஒன்றாகும். 1993ல் இப்பகுதி வழியாக ஜோர்ஜியா 400 நெடுஞ்சாலையை கட்டினத்துக்கு பிரகு பக்ஹெட் வேகமாக வளர்ந்தது. இப்பகுதியில் நிறைய கடைகள் உள்ளன; லெனக்ஸ் சதுக்கம் (Lenox Square), ஃபிப்ஸ் பிளாசா (Phipps Plaza), மற்றும் வேறு சில அங்காடிகள் (shopping malls) உள்ளன. வணிக நிறுவனங்களுக்கும் மக்கள் வசிப்புக்கும் பல உயர கோபுரங்கள் இப்பகுதியில் உள்ளன.

இந்த மூன்று பகுதியுக்கு தவிர 50க்கு மேலும் பகுதிகள் உள்ளன; இதில் சிலது புருக்ஹேவென் (Brookhaven), பேன்க்ஹெட் (Bankhead), சிறு ஐந்து திக்குக்கள் (Little Five Points), வர்ஜினியா-ஹைலன்ட் (Virginia-Highland) ஆகும்.

மக்கள்

மக்கள்தொகை வரலாறு
ஆண்டு நகரம்[9] மாநகரம்[10]
1850 2,572 N/A
1860 9,554 N/A
1870 21,789 N/A
1880 37,409 N/A
1890 65,533 N/A
1900 89,872 419,375
1910 154,839 522,442
1920 200,616 622,283
1930 270,366 715,391
1940 302,288 820,579
1950 331,314 997,666
1960 487,455 1,312,474
1970 496,973 1,763,626
1980 425,022 2,233,324
1990 394,017 2,959,950
2000 416,474 4,112,198
2010 420,003 5,729,304
*Estimates[11][12][13]
Region: Combined Statistical Area (CSA)

2006 கணக்கெடுப்பும் படி அட்லான்டா மாநகர மக்கள் தொகை 5,138,223 ஆகும். மதிப்பீட்டின் படி நகரத்திலேயே 486,411 பேர் வசிக்கிறார்கள். ஒரு சதுர கிலொமீட்டரில் 1,221 மக்கள் வசிக்கிறார்கள். நகர மக்களில் 59.39% ஆபிரிக்க அமெரிக்கர்கள், 33.22% வெள்ளை அமெரிக்கர்கள், 2.93% ஆசியர்கள், 0.18% அமெரிக்கப் பழங்குடி மக்கள், 0.04% பசிபிக் தீவு நாட்டிலிருந்து வந்தவர்கள், 1.99% வேறு இனங்கள் மக்கள், 1.24% பல இனங்கள் மக்கள். மக்கள் தொகையில் 6.49% இஸ்பானியர்கள் ஆவார். நூறு ஆண்களுக்கு 98 பெண்கள் உள்ளனர். 2000 முதல் இன்று வரை ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளின் மிக வேகமாக வளரும் மாநகரம் அட்லான்டா மாநகரம் ஆகும். ஒரு குடும்பத்தின் நடுவாம் சம்பளம் $55,939; மக்களின் 24.4% வறுமை கோடுக்கு (Poverty line) கீழ் இருப்பார்கள்.

அட்லான்டாவில் ஆயிரக்கணக்கான சமய இல்லங்கள் உள்ளன. மக்களின் பெரும்பான்மை பிராடெஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆகும்; இதில் பெரும்பான்மை பாப்டிஸ்ட் மற்றும் மெத்தடிஸ்ட் சபைகள் ஆகும். இஸ்பானிய மக்கள் பெரும்பான்மையாக கத்தோலிக் சபையில் உள்ளனர். பல ஆபிரிக்க-அமெரிக்க கிறிஸ்தவ ஆலயங்களும் அட்லான்டாவில் உள்ளன; புகழ் பெற்ற எபனீசர் பாப்டிஸ்ட் ஆலயத்தில் மார்ட்டின் லூதர் கிங் மேய்ப்பராக இருந்தார். அட்லான்டாவின் டுலூத் புறநகரத்தில் அட்லான்டா தமிழ் கிறிஸ்தவ சபை அமைந்தது. கிறிஸ்தவர்கள் தவிர, 120,000 யூதர்களும் 75,000 இஸ்லாமியர்களும் அட்லான்டாவில் வசிக்கிறார்கள். அட்லான்டா மாநகரத்தில் கிட்டத்தட்ட 35 மசூதிகள் உள்ளன.

அட்லான்டாவில் 69,000 தெற்காசியர்களும் வசிக்கிறார்கள். ஜோர்ஜியாவின் தமிழ் மக்கள் அட்லான்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி இச்சங்கம் ஆண்டுதோரும் தமிழர் விழாகளை கொண்டாடுகிறது. அட்லான்டாவில் சில இந்து கோயில்களும் உள்ளன. அட்லான்டா இந்து கோயில், இந்திய-அமெரிக்க பண்பாட்டுச் சங்கம், அட்லான்டா வேதக் கோயில், அட்லான்டா ஸ்ரீ சக்தி மந்திர் மற்றும் 2007இல் திறந்த அட்லான்டா சுவாமிநாராயண மந்திர் அட்லான்டா மாநகரில் சில புகழ்பெற்ற கோயில்கள் ஆகும்.

பொருளாதாரம்

புதிய கொக்கக் கோலா காட்சியகம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரம், ஹியூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு தவிர அட்லான்டாவில் மிக அதிகமாக ஃபார்சுன் 500 நிறுவனங்கள் (அமெரிக்காவில் 500 மிகப்பெரிய நிறுவனங்கள்) உள்ளன. கொக்கக் கோலா நிறுவனம், ஹோம் டிபோ, யூ.பி.எஸ்., மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களின் அடித்தளங்கள் அட்லான்டா மாநகரில் அமைந்தன. 1,250 பன்னாட்டு நிறுவனங்களின் ஆபிஸ்கள் அட்லான்டாவில் உள்ளன.

மிகவும் நிறையாக அட்லான்டா மக்களை தொழிலாக வைத்துக்கொள்கிற நிறுவனம் டெல்டா எயர்லைன்ஸ் ஆகும். டெல்டா மற்றும் எயர்ட்ரான் எயர்வேஸ் ஆகிய விமானசேவை நிறுவனங்கள் அட்லான்டா விமான நிலையத்தில் "ஹப்", அல்லது அடித்தளம் என்று குறிப்பிட்டதுக் காரணமாக இவ் விமான நிலையம் பயணிகளின் படி உலகில் மிகுந்த விமான நிலையமும் அட்லான்டா பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான நிறுவனமாகும்.

பல வங்கிகளும் ஊடக நிறுவனங்களும் அட்லான்டாவில் இருக்கின்றன. அமெரிக்காவின் கூட்டாட்சி சேமவங்கி முறையில் (Federal Reserve System) 12 வங்கிகளில் அட்லான்டாவில் ஒன்று அமைந்துள்ளது. அமெரிக்காவின் 7ஆம் மிகப்பெரிய வங்கி சன்ட்ரஸ்ட் பேங்க்கின் அடித்தளம் அட்லான்டாவில் உள்ளது. டெட் டர்னர் 1970இல் அட்லான்டாவில் தொடங்கப்பட்ட டர்னர் ஒளிபரப்பு முறையின் சி.என்.என்., கார்ட்டூன் நெட்வர்க், டி.என்.டி., டி.பி.எஸ். சில புகழ்பெற்ற ஒளிபரப்பாளர்கள் ஆகும். அமெரிக்காவின் ஒரு மிகப்பெரிய ஊடக நிறுவனம், காக்ஸ் என்டர்பிரைசெஸ், அட்லான்டாவிலும் அமைந்துள்ளது.

அட்லான்டாவுக்கு கிழக்கில் இருக்கும் டிகேப் மாவட்டத்தில் நோய் கட்டுப்படுத்தல் மற்றும் தடைப்படுத்தல் மையங்கள் (Centers for Disease Control and Prevention) அமைந்துள்ளன. எமரி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இருக்கும் இம்மையங்களில் 15,000 பொறியியலாளர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், மற்றும் பலரும் வேலைப் பார்க்கிறார்கள்.

போக்குவரத்து

மிட்டவுன் அட்லான்டாவில் நிலக்கீழ் மார்ட்டா தொடர்வண்டி நிறுத்தம்

அட்லான்டாவுக்கு 16 கிமீ தெற்கில் இருக்கும் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் பன்னாட்டு விமான நிலையம் அட்லான்டாவின் முக்கியமான விமான நிலையமும் உலகில் போக்குவரத்து மிகுந்த விமான நிலையமும் ஆகும். அட்லான்டா மாநகரத்தில் டிகேப்-பீச்ட்ரீ விமான நிலையம், ப்ரௌன் ஃபீல்ட் மற்றும் வேறு சில பொதுமக்கள் விமான நிலையங்களும் உள்ளன.

பொதுமக்கள் போக்குவரத்துக்காக அட்லான்டா மாநகர விரைவான போக்குவரத்து துறை (Metropolitan Atlanta Rapid Transit Authority, அல்லது "மார்ட்டா") ஃபுல்டன் மற்றும் டிகேப் மாவட்டங்கள் முழுவதிலும் தொடர்வண்டிகளும் பேருந்துகளும் செயல்படுகிறது. அட்லான்டா மாநகரில் அதிக மக்கள் தொகை இருக்கும் காப், குவினெட், கிளேட்டன் ஆகிய மாவட்டங்கள் மார்ட்டாவுக்கு இணைக்கும் பேருந்துகளை செயல்படுகின்றன. வெளி ஊர்களுக்கு போகும் ஆம்ட்ராக் தொடர்வண்டி மற்றும் கிரேஹௌண்ட் பேருந்துகளும் அட்லான்டா வழியாக போகும்.

அட்லான்டாவில் நடுவாக போகும் நெடுஞ்சாலை "டவுன்டவுன் கனெக்டர்"

ஐ-75, ஐ-85, மற்றும் ஐ-20 ஆகிய மூன்று இடைமாநில நெடுஞ்சாலைகள் அட்லான்டா வழியாக போகும். ஐ-75 அட்லான்டாவை வடமேற்கில் டென்னசி மாநிலத்துக்கும் தெற்கில் மேகன் நகரத்துக்கும் புளோரிடா மாநிலத்துக்கும் இணைக்கும். ஐ-85 அட்லான்டாவின் வடகிழக்கில் தென் கரொலைனா மாநிலத்தையும் தென்மேற்கில் அலபாமா மாநிலத்தையும் இணைக்கும். ஐ-20 அட்லான்டாவை மேற்கில் அலபாமா மாநிலத்துக்கும் கிழக்கில் தென் கரொலைனா மாநிலத்துக்கும் இணைக்கும். மேலும் அட்லான்டாவை சுற்றி ஐ-285 ஒரு 63-மைல் நீள வட்டமாக அமைந்துள்ளது. அட்லான்டா மாநகரத்தில் வேறு சில முக்கியமான சாலைகள் தேசிய நெடுஞ்சாலை 78, ஜோர்ஜியா 400, ஐ-675 ஆகும். அட்லான்டா நடு பகுதியில் ஐ-75-உம் ஐ-85-உம் சேர்ந்து "டவுன்டவுன் கனெட்கர்" (Downtown Connector) என்றழைக்கப்பட்ட ஒரே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையாக போகும். இச்சாலை உலகில் மிக அகலமான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.

பண்பாடு

அட்லான்டாவின் புதிய ஜோர்ஜியா நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
கல் மலையில் 17000 சதுக்க அடி பரப்பளவில் உலகில் மிகப்பெரிய சித்திரவேலை ஓவியம்

அட்லான்டாவில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. வரலாற்றை பற்றி மார்ட்டின் லூதர் கிங் தேசிய வரலாறு இடம், அட்லான்டா வரலாறு மையம், அட்லான்டா சைக்லோராமா மற்றும் உள்நாட்டுப் போர் காட்சியகம், மற்றும் வேறு சில அருங்காட்சியகங்களை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும். புதிய பெம்பர்ட்டன் ப்ளேஸ் என்றழைக்கப்பட்ட பகுதியில் உலகில் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, ஜோர்ஜியா நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலையும் கொக்கக்-கோலா அருங்காட்சியகமும் 2005இல் கட்டப்பட்டன. அட்லான்டா நடு பகுதியிலிருக்கும் நிலக்கீழ் அட்லான்டா ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமும் பேரங்காடியும் ஆகும். உயர் கலை அருங்காட்சியகம், பாக்ஸ் நாடகமன்றம், வுட்ரஃப் கலை மையம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கலைகளை ரசிக்கமுடியும்.

அட்லான்டாவின் கிழக்கில் அமைந்த 513 மீட்டர் உயரமான கல் மலை உலகில் மிகப்பெரிய கருங்கல் மலைகளில் ஒன்றாகும். இந்த மலையில் படைத்த சித்திரவேலை ஓவியம் உலகில் மிகப்பெரிய சித்திரவேலை ஓவியமாகும். இந்த ஓவியத்தில் மூன்று கூட்டமைப்பு நாடுகளின் வீரர்கள் இருக்கின்றன. இதற்கு சுற்றியிருக்கும் கல் மலை பூங்கா, சாஸ்டெயின் பூங்கா, பீட்மாண்ட் பூங்கா மற்றும் வேறு சில பூங்காக்களில் பண்பாடு இலக்குக்கள் நடைபெறும்.

அட்லான்டா சிம்ஃபனி கூட்டிசை, அட்லான்டா பாடல் நாடகம் போன்ற குழுமங்கள் தொன்மை இசையை காட்டுக்கின்றன. 1980களிலும் 1990களிலும் அட்லான்டாவில் த பிளாக் குரோஸ், செவென்டஸ்ட், கலெக்டிவ் சோல் போன்ற பல ராக் இசை குழுமங்கள் தொடங்கப்பட்டன. இன்று அட்லான்டா ராப் இசையில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். அமெரிக்காவின் தெற்கு பகுதி ராப் இசை அட்லான்டாவில் முதன்மையாக தொடங்கப்பட்டது. க்ரங்க் மற்றும் ஸ்னாப் ராப் இசை வகைகள் அட்லான்டாவில் தொடங்கப்பட்டன. ஔட்கேஸ்ட், ஜெர்மெய்ன் டுப்ரீ, டி.ஐ., லில் ஜான், லூடக்கிரிஸ், சோல்ஜ பாய் போன்ற புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்களும் குழுமங்களும் அட்லான்டாவிலிருந்து வெளிவந்தன.

விளையாட்டு

டர்னர் ஃபீல்ட், அட்லான்டாவின் பேஸ்பால் மைதானம்

அமெரிக்காவின் நாலு பிரதான வல்லுனர் விளையாட்டுச் சங்கங்களிலும் ஒரு அணி அட்லான்டாவில் உள்ளது. என். பி. ஏ.-யின் அட்லான்டா ஹாக்ஸ் கூடைப்பந்தாட்ட அணி, என்.எஃப்.எல்.-இன் அட்லான்டா ஃபால்கன்ஸ் அமெரிக்கக் காற்பந்தாட்ட அணி, எம்.எல்.பி.-யின் அட்லான்டா பிரேவ்ஸ் பேஸ்பால் அணி மற்றும் என்.எச்.எல்.-இன் அட்லான்டா திராஷர்ஸ் பனி ஹாக்கி அணி ஆகிய அணிகள் அட்லான்டாவில் விளையாடுகின்றன. ஜோர்ஜியா டோம் கட்டடத்தில் அட்லான்டா ஃபால்கன்ஸ் போட்டிகள் மற்றும் வேறு பல அமெரிக்கக் காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜோர்ஜியா டோம் பக்கத்தில் அமைந்த ஃபிலிப்ஸ் அரீனாவில் அட்லான்டா ஹாக்ஸ், அட்லான்டா திராஷர்ஸ், டபிள்யூ.என்.பி.ஏ.-யின் அட்லான்டா டிரீம் பெண்களின் கூடைப்பந்தாட்ட அணி போட்டிகள் மற்றும் கச்சேரிகள் நடைபெறுகின்றன. அட்லான்டா பிரேவ்ஸ் பேஸ்பால் போட்டிகள் 1996 ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்ட டர்னர் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறுகின்றன.

அட்லான்டாவின் கூடைப்பந்தாட்டம், பனி ஹாக்கி அரங்கம் ஃபிலிப்ஸ் அரீனா

அட்லான்டாவில் கல்லூரி விளையாட்டுக்களும் பிரபலமானதாகும். பல அட்லான்டா மக்கள் ஜோர்ஜியா டெக், யூ.ஜி.ஏ. கல்லூரி விளையாட்டுக்களை ரசிப்பார்கள். இவ் இரண்டு பல்கலைக்கழக விளையாட்டு அணிகள் இடையில் புகழ்பெற்ற எதிரிடை உள்ளன. ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாபி டாட் மைதானத்தில் இப்பல்கலைக்கழகத்தின் காற்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுகின்றன; அலெக்சாண்டர் நினைவகக் காலிசியத்தில் கூடைப்பந்த்தாட்டம், கைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன. யூ.ஜி.ஏ. விளையாட்டுக்களை பார்க்கிறதுக்கு நிறைய அட்லான்டா மக்கள் 117 கிமீ தூரத்தில் அட்லான்டா வடகிழக்கில் அமைந்த ஏத்தன்ஸ் நகரத்துக்கு செல்லுவார்கள். என்.சி.ஏ.ஏ.-யின் பீச் போல் காற்பந்தாட்டப் போட்டியும் ஆண்டுதோரும் ஜோர்ஜியா டோம் கட்டடத்தில் நடைபெறுகிறது.

கல்வி

ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பச் சதுக்கம்

ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், எமரி பல்கலைக்கழகம், ஜோர்ஜியா மாநிலப் பல்கலைக்கழகம் உள்ளிட அட்லான்டாவில் 30க்கு மேல் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உள்ளன. அட்லான்டா பல்கலைக்கழக மையத்தில் நாலு வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க கல்லூரிகள் -- மோர்ஹவுஸ் கல்லூரி, ஸ்பெல்மன் கல்லூரி, க்ளார்க் அட்லான்டா பல்கலைக்கழகம் மற்றும் இடைமதப்பிரிவு இறையியல் மையம்—உள்ளன. ஜான் மார்ஷல் சட்டக்கல்லூரி, தெற்கு பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம், அக்னெஸ் ஸ்காட் கல்லூரி, ஓகில்தார்ப் பல்கலைக்கழகம் வேறு சில அட்லான்டாவில் அமைந்த கல்லூரிகள் ஆகும்.

அட்லான்டா பொது பள்ளிகளில் 49,773 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த முறை 20 உயர்பள்ளிகள், 16 நடுப்பள்ளிகள், மற்றும் 58 அடிப்படை பள்ளிகளை செயல்படுகிறது. பொது பள்ளி முறை ஒரு வானொலி ஒலிபரப்பும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயல்படுகிறது. அட்லான்டா மாநகரில் சில தனியார் பள்ளிகளும் உள்ளன. வுட்வர்ட் அகாடெமி, வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி, அட்லான்டா மாநகர கிறிஸ்தவ பள்ளி போன்ற தனியார் பள்ளிகளில் சில அட்லான்டா குழந்தைகள் படிக்கிறார்கள்.

அரசியலும் நீதியும்

அட்லான்டா நகரச் சபை

தலைவர்-சபை பொறுப்பில் அட்லான்டா அரசு உருவாக்கப்பட்டது. தற்போது பதவியிலுள்ள மாநகரத் தலைவி ஷர்லி ஃபிராங்க்லின் உள்ளிட 1973 முதல் இன்று வரை பல அட்லான்டா மாநகரத் தலைவர்கள் ஆபிரிக்க-அமெரிக்கர்களாக இருக்கிறார்கள். 15 உறுப்பினர்கள் உள்ளிட மாநகரச் சபையில் அட்லான்டாவின் 12 ஆட்சிப் பகுதிகளுக்கு ஒரு உறுப்பினர் மற்றும் மீதி மூன்று "at-large" உறுப்பினர்கள் உள்ளனர். ஜோர்ஜியா மாநில சட்டச்சபையும் அட்லான்டாவில் ஜோர்ஜியா தலைநகர கட்டடத்தில் உள்ளது. மாநில ஆளுனரின் வீட்டும் பக்ஹெட் பகுதியில் உள்ளது.

அட்லான்டாவிலுள்ள ஜோர்ஜியா தலைநகரக் கட்டடம்

2005இல் அட்லான்டாவில் 2004 குறைந்து 90 பேர் கொல்லப்பட்டார்கள். ஆனால் வேறு அமெரிக்க நகரங்களுட அட்லான்டாவின் கொலை வீதம் ஒறு அளவு உயரமானது. 250,000 மக்கள் தொகையுக்கு அதிகமான அமெரிக்க நகரங்களில் அட்லான்டாவின் கொலை வீதம் 12ஆம் மிக அதிகமானது ஆகும்.

அட்லான்டா மாநகரப் புள்ளியியற் பரப்பளவில் 140 ஊர்களும் நகரங்களும் 28 மாவட்டங்களும் உள்ளன.

ஊடகம்

அட்லான்டாவின் முக்கியமான நாளிதழ் அட்லான்டா ஜர்னல்-கான்ஸ்டிட்டூசன் ஆகும். இந்த நாளிதழ் முன்னாள் இரண்டு இதழ்களாக இருந்து 1982இல் ஒன்றாக சேர்ந்தது. இது தவிர கிரியேட்டிவ் லோஃபிங், அட்லான்டா நேஷன் போன்ற வேறு வார இதழ்களும் நாளிதழ்களும் அச்சிலுள்ளன.

பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அட்லான்டாவில் ஒளிபரப்பு செய்கின்றன. 2,310,490 வீடுகள் உள்ளிட அட்லான்டா மாநகரம் அமெரிக்காவில் 8ஆம் தொலைக்காட்சி குறிப்பிட்ட சந்தை மண்டலம் ஆகும். WSB, WAGA, WXIA போன்ற பல உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர சிஎன்என், கார்ட்டூன் நெட்வர்க், டிஎன்டி போன்ற டர்னர் ஒளிபரப்பு முறையின் சலக்கங்களும் அட்லான்டாவிலிருந்து ஒளிபரப்பு செய்கின்றன. வானிலை சலக்கமும் அட்லான்டாவில் உள்ளது. பல பேச்சு, செய்தி, இசை வானொலி சலக்கங்களும் அட்லான்டாவில் இயக்குகின்றன. நீல் போர்ட்ஸ் மற்றும் கிளார்க் ஹவர்ட் அட்லான்டாவிலிருந்து ஒலிபரப்பு செய்து அமெரிக்கா முழுவதிலும் இவர்களை கேட்கமுடியும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Love it or loathe it, the city's nickname is accurate for the summer", Atlanta Journal-Constitution, June 16, 2008
  2. "The service, dubbed the Atlanta Tourist Loop as a play on the city's 'ATL' nickname, will start April 29 downtown." "Buses to link tourist favorites" The Atlanta Journal-Constitution
  3. ""Atlanta May No Longer Be the City in a Forest", WSB-TV". Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 2012-01-27.
  4. "Because we're the only city easily identified by just one letter". Creative Loafing. November 23, 2011 இம் மூலத்தில் இருந்து மே 12, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512230957/http://clatl.com/atlanta/because-were-the-only-city-easily-identified-by-just-one-letter/Content?oid=4291994. பார்த்த நாள்: October 7, 2012. 
  5. "Our Quiz Column". Sunny South: p. 5 இம் மூலத்தில் இருந்து 2014-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141218204849/http://atlnewspapers.galileo.usg.edu/atlnewspapers/view?docId=news%2Fssw1891%2Fssw1891-0021.xml. 
  6. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  7. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  8. வார்ப்புரு:Cite government agency
  9. Gibson, Campbell (1998). "POPULATION OF THE 100 LARGEST CITIES AND OTHER URBAN PLACES IN THE UNITED STATES: 1790 TO 1990". Population Division, U.S. Bureau of the Census. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  10. "CENSUS OF POPULATION AND HOUSING: DECENIAL CENSUS". U.S. Bureau of the Census. 2000. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  11. http://2010.census.gov/news/releases/operations/cb11-cn97.html
  12. "Annual Estimates of the Population for Incorporated Places Over 100,000, Ranked by July 1, 2008 Population" (அணித்தரவுக்கோப்பு). ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2010-03-07.
  13. "Annual Estimates of the Population of Combined Statistical Areas: April 1, 2000 to July 1, 2008". US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2010-03-07.

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Atlanta, Georgia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அட்லான்டா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!