இத்தீவின் தலைநகர் அகாத்னா ஆகும். மக்கள் அடர்த்தி அதிகமான நகரம் டெடேடோ ஆகும். 2017 கணக்கெடுப்பின்படி, குவாமில் 162,742 பேர் வசிக்கின்றனர். குவாம் மக்கள் பிறப்பினால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். குவாமின் மொத்தப் பரப்பளவு 210 சதுர மைல் (544 கிமீ2). மக்கள்தொகை அடர்த்தி 770/சதுரமைல் (297/சகிமீ). ஓசியானியாவில் அமைந்துள்ள இத்தீவு, மரியானா தீவுகளில் அமைந்துள்ள தீவுகளில் மிகவும் பெரியதும், மைக்குரோனீசியாவில் உள்ள மிகப்பெரும் தீவும் ஆகும். இத்தீவின் மிக உயர்ந்த புள்ளி லாம்லாம் மலை ஆகும். இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 406 மீட்டர்கள் ஆகும்.
இத்தீவின் ஆதிகுடிகளான சமோரோக்கள் கிமு 2000 ஆம் ஆண்டுகளில் இங்கு குடியேறினர். போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெர்டினென்ட் மகலன் 1521 மார்ச் 6 இல் இங்கு முதன் முதலில் வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். 1668 இல் எசுப்பானியர்கள் குடியேறினர். எசுப்பானியக் கத்தோலிக்க மதப்பரப்புனர் தியேகோ லூயிசு டி சான் விட்டோரெசு என்பவரே முதலில் இங்குவந்தார். 16-ஆம் நூற்றாண்டிற்கும், 18-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எசுப்பானிய மணிலா வணிகர்கள் இங்கு வந்து தங்கிச் செல்லும் இடமாக இருந்தது வந்தது. எசுப்பானிய அமெரிக்கப் போர்க் காலத்தில், ஐக்கிய அமெரிக்கா 1898 சூன் 21 இல் குவாமை எசுப்பானியர்களிடம் இருந்து கைப்பற்றியது. 1898 பாரிசு உடன்படிக்கையின் படி, 1998 திசம்பர் 10 இல் எசுப்பானியா குவாமை அமெரிக்காவுக்குத் தந்தது. ஐக்கிய நாடுகள் அவையின் 17 சுய-ஆட்சியற்ற பிராந்தியங்களில் குவாமும் ஒன்றாகும்.[3]
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், குவாம், அமெரிக்க சமோவா, ஹவாய், வேக் தீவு, பிலிப்பீன்சு ஆகிய ஐந்து பிரதேசங்களும் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களாக இருந்தன. 1941 திசம்பர் 7 இல், பேர்ள் துறைமுகத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தின் பின்னர், குவாம் சப்பானியரால் கைப்பற்றப்பட்டது. சப்பான் இரண்டரை ஆண்டுகள் குவாமைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சப்பானியரின் ஆட்சிக் காலத்தில் குவாம் மக்கள் சப்பானியர்களிடம் இருந்து பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தனர். பலர் கொல்லப்பட்டனர். மேலும் கட்டாயவேலை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.[4][5] 1944 சூலை 21 இல் அமஎரிக்கா குவாமை மீண்டும் கைப்பற்றியது.[6] 1960கள் முதல், குவாமின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையிலும், அமெரிக்கப் படைத்தளங்களிலும் தங்கியுள்ளது.[7]
வரலாறு
குவாம், மற்றும் வடக்கு மரியானா தீவுகளின் ஆரம்பகால குடியேறிகள் தென்கிழக்காசியாவில் இருந்து கிமு 2000 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரனேசிய மக்கள் என நம்பப்படுகிறது.[8]:16 இவர்களே தற்போதைய சமோரோ மக்கள் என இனங்காணப்படுகின்றனர்.
பண்டைய சமோரோ சமூகத்தில் நான்கு பிரிவினர் இருந்தனர்: சமோரி (தலைவர்கள்), மட்டுவா (மேல்குடி), அச்சோட் (நடு வகுப்பு), மனாச்சங்கு (கீழ்ப்பிரிவு) ஆகியோர்.[8]:20–21மட்டுவா என்ற மேல்குடியினர் மீன்பிடி வளங்கள் நிறைந்த கரையோரப் பகுதிகளில் வாழ்ந்தனர். கீழ்ப்பிரிவினர் குவாமின் உட்பகுதிகளில் வாழ்ந்தனர். இவர்களை விட மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றோர் "மக்கானா" என அழைக்கப்பட்டனர். குவாம் சமூகம் தாய்வழி வம்சத்தைக் கொண்டவர்கள்.[8]:21
மேற்கோள்கள்
↑"U.S. Territories". DOI Office of Insular Affairs. Archived from the original on February 9, 2007. பார்க்கப்பட்ட நாள் February 9, 2007.