ஜாம்பவதி, இராமாயண காவிய மாந்தரான ஜாம்பவானின் மகள். ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு மனைவியர்களில் இரண்டாமவர். கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த பத்து மகன்களில் முக்கியமானவரான சாம்பன், துரியோதனின் மகளான லட்சனாவின் கணவன் ஆவார்.
சூரியதேவன், யாதவ குல முக்கிய பிரமுகர் சத்யஜித்துக்கு வரமாக வழங்கிய, செல்வத்தை வாரி வழங்கும் சியாமந்தக மணியை, அவன் தம்பி பிரசேனன் அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றவிடத்து சிங்கத்தால் கொல்லப்பட்ட நேரத்தில், அவ்வழியே வந்த ஜாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று சியமந்தக மணியைக் கைப்பற்றி அதனை தன் மகள் ஜாம்பவதிக்கு அளித்தார்.
கிருஷ்ணர் பலமுறை கேட்டும் சியாமந்தக மணியை தான் தராததால், கிருஷ்ணரே தன் தம்பி பிரசேனனைக் கொன்று மணியை கவர்ந்ததாக சத்யஜித் வதந்தி பரப்பினான். தன் மீது விழுந்த வீண் பழியை துடைக்க, கிருஷ்ணர், பிரசேனன் வேட்டைக்கு சென்ற காட்டிற்குச் சென்று தேடுகையில், பிரசேனனும் ஒரு சிங்கமும் குகைக்கருகில் இறந்து கிடப்பதைக் கண்டார். மேலும் சியாமந்தக மணி பிரசேனனிடம் இல்லாததையும் கண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் இருந்த குகையில் சென்று பார்க்கையில் ஒளி வீசும் சியாமந்தக மணியையும், அதை வைத்திருந்த ஜாம்பவதியையும் கண்டார்.
கிருஷ்ணர் ஜாம்பவானுடன் மோதி வென்று, ஜாம்பவதியை திருமணம் செய்து கொண்டு, சியாமந்தக மணியை சத்யஜித்திடம் ஒப்படைத்தார்.[1][2][3]. இதனால் மனம் மகிழ்ந்த சத்யஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.[4]