விருஷ்ணி குலம் (Vrishnis) பண்டைய பரத கண்டத்தின்குரு நாட்டின் பேரரசர் யயாதியின் மகன் யதுவின் வழிவந்த விருஷ்ணி என்பாரின் வழித்தோன்றல்கள் ஆவார்.
விருஷ்ணியின் இரண்டு மனைவியர்கள் காந்தாரி மற்றும் மாத்திரி ஆவார். மனைவி மாத்திரி மூலம் விருஷ்ணிக்கு தேவமிதுசா என்ற மகன் பிறந்தான். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவர் தேவமிதுசாவுக்குப் பிறந்தவர் ஆவார்.[1] இந்துப் புராணங்களின் படி, விருஷ்ணியின் குலத்தவர்கள் துவாரகையை வாழிடமாகக் கொண்டவர்கள் ஆவார்.
வரலாறு
யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் யது ஆவார். தன் மகள் தேவயானிக்கு துரோகம் செய்து, தேவயானியின் தோழிப் பெண்னான சர்மிஷ்டையுடன், யயாதி புணர்ந்து குழந்தைகளை பெற்ற காரணத்தினால், சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதி தனது தவறுக்கு வருந்தியதால், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு கொடுத்து, இழந்த கிழத்தன்மை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என யயாதிக்கு சாபத்திற்கான பரிகாரம் கூறினார்.
யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால்,யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர்.[2]
காலப்போக்கில் யது குலத்தில், விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள் என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன.[3][4]
விருஷ்ணிகள் துவாரகைக்கு குடிபெயர்தல்
கம்சனின் மாமனாரும், மகத நாட்டு மன்னனுமான ஜராசந்தன், கம்சனின் இறப்பிற்கு காரணமான கிருஷ்ணர் வாழ்ந்த மதுரா மீது பலமுறை பெரும் படைகளுடன் முற்றுகையிட்டான். கிருஷ்ணரும், பலராமரும் ஜராசந்தனின் படைகளை விரட்டி அடித்தனர். பின்னர் காலயவனன் என்ற அசுரன் பெரும் படைகளுடன், மதுராவை சூழ்ந்து கொண்டு அடிக்கடி தொடர் தாக்குதல்கள் நடத்தினான். பாதுகாப்பு காரணங்களால் கிருஷ்ணர், தனது குல மக்களான விருஷ்ணிகளை, மதுராவிலிருந்து துவாரகையில் குடியமர்த்தினார்.[5]
கிருஷ்ணரின் குடும்பம்
கிருஷ்ணரின் குடும்ப மரத்தை காட்டும் அட்டவணை:[6][7]
குருச்சேத்திர போரில்துரியோதனன் கொல்லப்பட்ட துயரத்தின் விளைவால் காந்தாரி, கிருஷ்ணரின் விருஷ்ணி குலம் விரைவில் அழியும் என வஞ்சினம் உரைத்தாள்.
காந்தாரி சாபத்தின் படி, குருசேத்திரப் போர் முடிந்த 36வது ஆண்டில், கிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு முனிவர்கள் இட்ட சாபத்தின் விளைவாக, கிருஷ்ணரின் மகன்கள், பேரன்கள் மற்றும் விருஷ்ணி குலத்தவர்கள், அளவிற்கு மேல் மது அருந்தி ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு மடிந்தனர்.
விருஷ்ணி குல பெண்கள், குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் பலராமர் மட்டும் உயிருடன் எஞ்சியிருந்தனர். விருஷ்ணி குல பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களை அத்தினாபுரம் கூட்டிச் செல்லுமாறு கிருஷ்ணர், குரு நாட்டுஅருச்சுனனுக்கு ஓலை அனுப்பினார்.
விருஷ்ணி குலத்தினரின் நிலை கண்டு வருந்திய பலராமர் ஜீவசமாதி அடைந்தார்.
கிருஷ்ணர் பிரபாச பட்டினம் நகரத்திற்குச் சென்று காட்டில் ஓய்வு எடுக்கையில், வேடன் எய்திய அம்பு கிருஷ்ணரின் காலில் குத்தியதால், கிருஷ்ணர் உயிர் துறந்து வைகுந்தம் சென்றார்.
அருச்சுனன் விருஷ்ணி குல பெண்களையும், குழந்தைகளையும் அத்தினாபுரம் கூட்டிச் செல்லும் வழியில், ஆபிரர்கள் எனும் கூட்டத்தினர் [8] தாக்கி, பொருட்களை கொள்ளையடித்து விருஷ்ணி குல பெண்களையும், குழந்தைகளையும் கவர்ந்து சென்றனர்.[9] ருக்குமணி முதலான கிருஷ்ணரின் எண்மனையாட்டிகள், கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தனர். பின்னர் கடல்நீர் துவாரகை நகரத்திற்குள் புகுந்து உள்வாங்கிக் கொண்டது.
பண்டைய இலக்கியங்களில் விருஷ்ணிகள்
பாணினியின் அஷ்டத்யாயி எனும் சமசுகிருத நூலில் (IV.1.114, VI.2.34) அந்தகர்களுடன் விருஷ்ணி குலம் ஒப்பிடுகிறது.
கௌடில்யரின்அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் விருஷ்ணி குலத்தினரை சங்கா எனும் பழங்குடி மக்களின் கூட்டமைப்புடன் ஒப்பிடுகிறது. மகாபாரத காவியத்தின் துரோண பருவத்தில் (துரோண பருவம், 141.15) விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் விராத்தியர் இன மக்களுடன் ஒப்பிடுகிறது.[10]
யதுவின் வழித்தோன்றல்களான விருஷ்ணிகளைப் போன்று குகுரர்கள், போஜர்கள், அந்தகர்களை சங்கம் வளர்த்து வாழ்ந்தவர்கள் என்றும், இச்சங்கத்திற்கு வசுதேவ கிருஷ்ணன் சிறப்புடையவன் என மகாபாரத காவியத்தின் சாந்தி பருவம் 81.25-இல் குறிப்பிடுகிறது.
விருஷ்ணிகளின் வெள்ளி நாணயம், தற்கால பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் தற்போது பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டனில் உள்ளது.[13] பின்னாட்களில் விருஷ்ணிகளின் செப்பு நாணயங்கள், களிமண் முத்திரைகள் லூதியானா அருகே கண்டெடுக்கப்பட்டது.[14]