எண்மனையாட்டி அல்லது அஷ்டபார்யா என்பது கண்ணனின் மனைவியராகச் சொல்லப்படும் எட்டுத் தேவியரையும் மொத்தமாகக் குறிப்பிடப் பயன்படும் பதம் ஆகும். நூலுக்கு நூல், இந்தப் பட்டியலில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அறுபதினாயிரம் தேவியர், ராதை மற்றும் தமிழ் வழக்கு நப்பின்னை தவிர, இந்த எட்டு மகளிரே கண்ணனின் முக்கியமான தேவியர் என்ற குறிப்பு, பெருவாரியான வைணவப் பெருநூல்களிலும் சொல்லப்படுகின்றது.எனினும், ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரையும் கண்ணனுடன் இணைத்துச் சொல்வதே, பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கின்றது.[1]
பட்டியல்
மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், பத்ம புராணம் முதலான நூல்கள் இத்தேவியர் பற்றிய கதைகளைக் கொண்டிருக்கின்றன.
விஷ்ணு புராணம், அரிவம்சம் என்பவற்றில் சொல்லப்படும் பட்டியலில் சில மாறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாக, பாகவதம் கூறும் பட்டியலே எண்மனையாட்டியராகக் கொள்ளப்படுகின்றது. மித்திரவிந்தை, காளிந்தியின் இன்னொரு பெயர் எனும் அரிவம்சம், மித்திரவிந்தை இடத்தில் சைப்பியை எனும் வேறொரு இளவரசியைச் சொல்கின்றது. ரோகிணி, மாத்திரி எனும் வேறு இரு இளவரசிகளை, பத்திரைக்குப் பதிலாக அரிவம்ம்சம், விஷ்ணுபுராணம் என்பன பட்டியற்படுத்துகின்றன.பொதுவான வழக்கில்[2][3][4][5][6][7] கூறப்படும் பட்டியல் வருமாறு:
ருக்மணி, சத்தியபாமை, ஜாம்பவதி தவிர்ந்தோர், அவ்வளவாகத் தமிழ் மரபில் அறியப்பட்டதில்லை.நக்னசித்தியே தமிழ் மரபு நப்பின்னை என்று சொல்வதுண்டு.[12][13] ஆனால், பத்தொன்பதாம் நூறாண்டின் இறுதியில் எழுந்த "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்"எனும் நூலில் கண்ணனின் எட்டு மனைவியர் பற்றிய குறிப்பொன்று வருகின்றது. கண்ணன் நப்பின்னையை மணந்தபின், கமலை,நீளை, ராதை, அளகவல்லி, பூரணை, இந்துவல்லி, மணிச்சோதி ஆகிய எழுவரை மணந்ததாக, அதில் பாடப்படுகின்றது.[14] எனினும், வேறு பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் எண்மனையாட்டிகள் பற்றிய குறிப்பெதையும் காணக் கூடவில்லை.
புதினங்களில்
எழுத்தாளர் ஜெயமோகன் தனது "வெண்முரசு" நாவல் வரிசையின் ஏழாம் நூலான "இந்திரநீலம்" புதினத்தை, கண்ணன் இவ்வெட்டு மனைவியரை மணந்ததைக் கருவாகக் கொண்டு புனைந்திருக்கின்றார்.[15] , இப்புனைவில் எண்மனையாட்டியர் எண்மரும் எட்டுத் திருமகள்களின் அம்சங்களாக சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.[16]