சியாமந்தக மணி (Syamantaka mani) (சமஸ்கிருதம்: श्यामन्तक मणि) இந்து தொன்மவியலில் மிக உயர்ந்த சக்தி மிக்க ரத்னமாக கருதப்படும் அதிசய அணிகலன் ஆகும். சூரியன் கழுத்தில் இருப்பது இந்த சியாமந்தகமணி. சியாமந்தகமணியை கழுத்தில் அணிந்திருப்பவரின் நாட்டில் பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படாது, எப்போதும் செழிப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். இம்மணி நாள் ஒன்றுக்கு 170 பவுண்டு தங்கம் உற்பத்தி செய்யும். [1][2] சூரிய தேவனின் திகைப்பூட்டும் தோற்றத்தின் மூலமும் இதுதான்.
தோற்றம்
சியாமந்தக மணி குறித்தான செய்திகள் பாகவதம், அரி வம்சம் மற்றும் விஷ்ணு புராணங்களில் உள்ளது. துவாரகையில், யாதவ குல பிரபு, சத்திரஜித்து என்பவன் இருந்தான். அவன் கடற்கரையில் நின்று கொண்டு மிக்க பத்தியோடு சூரியனை வழிபட்டுத் துதித்தான். சத்திரஜித்தின் பக்தியை பாரட்டும் விதமாக சூரிய பகவான் அவனுக்கு எதிரே வந்து காட்சி அளித்தான். ஒளி வடிவமாக வந்த அந்தத் தெய்வத்தை சத்திரஜித் வணங்கினான். தன்னிடம் உனக்கு என்ன கேட்டார் சூரிய தேவன். சூரிய தேவன் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த ஒளிமிக்க சியாமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். சூரிய தேவனும் அவ்வாறே சியாமந்தக மணியை சத்திரஜித்திற்கு வழங்கிச் சென்றார். சத்திரஜித், ஒளிமிக்க சியாமந்தக மணியைத் தன் மார்பில் பதக்கமாகத் தொங்கவிட்டுக் கொண்டான்.
சத்திரஜித் சியாமந்தக மணியை கழுத்தில் அணிந்து துவாரகை நகரத்திற்கு வருகையில், சூரிய தேவனே நேரில் வருகிறார் என பொதுமக்கள் வியந்தனர். சியாமந்தமணியை யாதவத் தலைவரான துவாரகை மன்னர் உக்கிரசேனருக்கு வழங்கிட கிருஷ்ணன், சத்தியஜித்திற்கு ஆலோசனை கூறினார். ஆனால் சத்தியஜித் அவ்வாலோசனையை மறுத்துவிட்டார்.
சியாமந்தக மணி திருட்டும், மீட்பும்
ஒருநாள் சத்திரஜித், சியாமந்த மணியை தனது இளைய சகோதரரான பிரசேனருக்கு அணிந்து கொள்ள வழங்கினார். பிரசேனன் சியாமந்தகமணியை அணிந்து கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் ஒரு சிங்கம் பிரசேனனை தாக்கி, சியாமந்தமணியுடன் புதருக்குள் இழுத்துச் சென்றது. அவ்வழியே வந்த கரடிகளின் அரசன் ஜாம்பவான், சிங்கத்தைக் கொன்று, சியாமந்தமணியை தன் மகளான ஜாம்பவதியிடம் தருகிறார்.
இதனிடையே சியாமந்தக மணியுடன் காணாமல் போன தனது தம்பி பிரசேனரை, கிருஷ்ணனே கொன்று, சியாமந்தகமணியை தக்க வைத்துக் கொண்டார் என சத்திரஜித் குற்றம் சாட்டினார். தன் மீதான குற்றசாட்டை நீங்கும் பொருட்டு, பிரசேனர் மற்றும் சியாமந்தமணியுடன் வருவதாக கிருஷ்ணர் சூளுரைத்தார்.
காட்டில் பிரசேனரின் இறந்த உடலும், அங்கேயே நின்றிருக்கும் அவனது குதிரையையும் கிருஷ்ணர் கண்டுபிடித்தார். பின்னர் சியாமந்தமணியை கண்டுபிடிக்க, அருகில் உள்ள இடங்களில் தேடும் போது, ஒரு குகையில் ஜாம்பவதி சியாந்தக மணியுடன் அமர்ந்திருப்பதை கண்டு விவரம் அறிந்தார். ஜாம்பவதியின் தந்தையான சாம்பவானுடன் கிருஷ்ணர் 28 நாள் போரிட்டார். களைப்படைந்த ஜாம்பவான் போரில் தான் தோற்றதை ஒத்துக் கொண்டு, சியாமந்தக மணியுடன், தனது மகளை கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.
கிருஷ்ணர் சியாமந்தக மணியை அதன் உரிமையாளரான சத்திரஜித்திடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரின் செயலைப் பாரட்டும் விதமாக, தன் மகள் சத்யபாமா, கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார். [3]
சத்திரஜித் மற்றும் சத்தன்வா இறப்புகள்
சில காலம் கழித்து கிருஷ்ணரும், பலராமரும் பாண்டவர்களைக் காண அத்தினாபுரத்திற்கு சென்றிருக்கையில், கிருதவர்மன், அக்ரூரர் மற்றும் சத்தன்வா ஆகியோர் சத்திரஜித்தின் சியாமந்தகமணியை அடைய ஆசை கொண்டனர். சத்தன்வா முந்திக்கொண்டு, ஒரு இரவில் வீட்டில் படுத்துக்கொண்டிருந்த சத்திரஜித்தைக் கொன்று, சியாமந்தகமணியை திருடிக் கொண்டான். இச்செயலை அறிந்த சத்தியபாமா, நடந்த நிகழ்வுகளை, அத்தினாபுரத்தில் இருக்கும் கிருஷ்ணருக்கு தூதர் மூலம் ஓலை அனுப்பித் தெரியப்படுத்தினாள்.
கிருஷ்ணரும், பலராமரும் தன்னை பிடிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த சத்தன்வா, சியாமந்தக மணியை அக்ரூரிடம் கொடுத்து விட்டு, ஒரு குதிரையில் ஏறி பாய்ந்து சென்றுவிட்டார். சத்தன்வாவை பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணர் மற்றும் பலராமர் சத்தன்வாவை இடைமறித்துக் கொன்றனர். பின்னர் அக்ரூரிடமிருந்த சியாமந்தக மணியை துவாரகை நலனை முன்னிட்டு அரண்மனையில் பாதுகாப்பாக வைத்தனர்.