வேத கால மன்னர் புருவின் ஏழு மகன்களில் மூவர் சால்வர்களாகவும்; நால்வர் மத்திரர்களாகப் பிரிந்து நாட்டை பங்கிட்டு ஆண்டதாக மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது (1:121).
சால்வ நாட்டு இளவரசனும் பீஷ்மரும்
சால்வ நாட்டு இளவரசன் (5:179) காசி நாட்டின் இளவரசிகளில் ஒருவரான அம்பாவின் காதலன் ஆவார். குரு நாட்டின் இளவரசன் விசித்ரவீரியனுக்கு, காசி நாட்டு இளவரசிகளை திருமணம் செய்து வைக்க வேண்டி, சுயம்வர மண்டபத்தில் இருந்த காசி நாட்டு இளவரசிகளான அம்பா, அம்பிகை மற்றும் அம்பாலிகா ஆகியவர்களை பீஷ்மர் தனது தேரில் வைத்து கடத்திச் செல்கையில், சால்வ நாட்டு இளவரசன் தனது காதலியான அம்பாவை மீட்க, பீஷ்மருடன் போரிட்டு தோற்கிறான். அம்பா, சால்வ இளவரசனின் காதலி என அறிந்த பீஷ்மர், அம்பாவை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் சால்வ இளவரசன் அம்பாவை மணக்க மறுத்தான். தன் காதலனை அடைய தடையாக இருந்த பீஷ்மரை அடுத்த பிறவியில் கொல்லச் சபதம் மேற்கொண்டு தீக்குளிக்கிறாள். அம்பா மறுபிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மரைக் கொல்கிறாள்.
சால்வனும் கிருஷ்ணரும்
தந்தவக்ரன் மற்றும் உருக்மியின் கூட்டாளியான மற்றொரு சால்வ நாட்டு மன்னர் ஒன்று சேர்ந்து (3:12, 7:11) துவாரகை நகரை தாக்க வந்த போது, சால்வன், கிருட்டிணால் கொல்லப்படுகிறான். சால்வ நாட்டு மன்னன் வானில் பறக்கும் சௌபம் எனும் விமானத்தை வைத்திருந்தான் எனக் கூறப்படுகிறது.[1]
குருச்சேத்திரப் போரில் சால்வ நாட்டவர்கள்
குருச்சேத்திரப் போரில் சால்வ நாட்டுப் படைகள் கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர் (5: 161). சால்வ நாட்டின் வேறு ஒரு இளவரசன், பாண்டவர் அணியில் போரிட்டதாக கூறப்படுகிறது (7: 23).