உலக சுகாதார அமைப்பு (World Health Organisation)ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும். தற்போதைய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனராக டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் பதிவில் இருந்து வருகிறார். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் 8வது இயக்குநர் ஆவார்.[1]
நோக்கம்
"உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்".[2] இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
உருவாக்கம்
உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.[3]
இந்த அமைப்பின் சட்டத்தை உலகின் 61 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையில் கையெழுத்திட்டன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்குல் தீர்வு காண்பதும் ஆகும். உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட், இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது.
இதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் அஸ்லெப்பியசின் தடி ஏற்கப்பட்டுள்ளது.[4]
இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது. இது 1966 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.
கிளை அலுவலகங்கள்
1949 - 1952 ஆண்டுகளுக்கு இடையில், மண்டலப் பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவை இந்த அமைப்பின் 44வது பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு முடிவுகள் மண்டல அளவில் எடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டலக் குழு உண்டு. இது ஆண்டுக்கு ஒரு முறை கூடும். ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதியும் கலந்துகொள்வார். அங்கிகரிக்கப்படாத நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்பர். மண்டலங்களுக்கு தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகத்தின் தலைவராக மண்டலக் குழுவால் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பணியில் இருப்பார்.
[5]
இந்த மண்டலக் குழுவிற்கு, ஒவ்வொரு உறுப்பு நாட்டின் உடல்நலத் துறைத் தலைவர்கள் பங்கேற்பர். உலக சுகாதார அவையின் திட்டங்களை மண்டல அளவில் செயல்படுத்துவதும் மண்டலக் குழுவின் பொறுப்பாகும்.
(10) சுகாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் குழுக்களை ஊக்குவித்தல்
(11) சட்டங்கள், ஆலோசனைகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தல்
நாடுகளும் அலுவலகங்களும்
இந்த அமைப்பு 147 நாடுகளில் இயங்குகிறது.[13]. இது சில உதவி அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம். ஆகியவற்றிற்காக இவை செயல்படுகின்றன. கேன்சர் தடுப்பிற்கான சர்வதேச ஆய்வு மையம், பிரான்சில் லியோன் நகரில் உள்ளது.
சுகாதார மேம்பாட்டிற்கான மையம், ஜப்பானின் கோபே நகரில் உள்ளது.[14]
ஒவ்வொரு நாட்டிலும் ஓர் அலுவலகம் இருக்கும். சில நாடுகளில் மண்டலத்திற்குத் துணை அலுவலகங்களும் உள்ளன.
இந்த அமைப்பிற்கான நாட்டின் பிரதிநிதி, அந்த நாட்டின் அலுவலகத் தலைவராக இருப்பார்.
இது 147 நாடுகளில் 8,500 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.[15]
சட்டசபை
உலக சுகாதார அவை, இந்த அமைப்பின் உயரிய பொறுப்பைக் கொண்டதாகும். இதன் தலைமையகம், ஜெனிவா நகரில் உள்ளது. ஆண்டுக்கொருமுறை மே மாதம் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவையின் தலைவராக, ஐந்தாண்டு காலம் பதவி ஏற்பார். இந்த அவை செயலாக்க அவையின் செயற்பாடுகளை மீள்பார்வையிடுகிறது.
சுகாதாரத்துறையில் சிறந்த 34 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயலாக்க அவையில் இடம்பெறுவர். சட்டசபையின் கொள்கைகளுக்கு உட்பட்டு திட்டங்களை வகுப்பது செயலாக்க அவையின் பொறுப்புகளில் ஒன்று.
[16]
நிர்வகித்தல்
இந்த அமைப்பின் பதின்மூன்று கொள்கைகள் இதைச் சார்ந்தே உள்ளன.
”ஐக்கிய நாடுகள் சபை, நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, சுமுகமான உறவை மேம்படுத்தி, உலக சுகாதார மேம்பாட்டிற்கு உழைத்தல்” என்பது இதன் முதல் கொள்கை. "இந்த அமைப்பை சிறப்பாகச் செயல்படச் செய்ய ஏதுவாக இருத்தல்” என்பது இதன் இரண்டாவது கொள்கை.
உறுப்பினர்கள்
2013 ஆம் ஆண்டு வரையில், இந்த அமைப்பிற்கு 194 உறுப்பு நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாக உள்ளன. லீச்டென்ஸ்டெயின், குக் தீவுகள், நியுவே ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர்கள் இல்லை.[17]புவேர்ட்டோ ரிக்கோ, டோக்கெலாவ் ஆகியன இதன் துணை உறுப்பினர்களாக உள்ளன.[18] பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக ஏற்கப்பட்டுள்ளன.[19]
இதன் சட்டத்தின்படி, அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் இதன் உறுப்பினராகத் தகுதி உடையன. ஐநா சபையில் இல்லாத பிற நாடுகளும், ஐநா சபையின் வாக்கெடுப்பில் தேர்வானால் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றன.
[17]