Union postale universelle
அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்அனைத்துலக அஞ்சல் ஒன்றியக் கொடி |
நிறுவப்பட்டது | அக்டோபர் 9, 1874 |
---|
வகை | ஐநா முகமை |
---|
சட்டப்படி நிலை | இயங்குகிறது. |
---|
தலைமையகம் | பேர்ண், சுவிட்சர்லாந்து |
---|
இணையதளம் | www.upu.int |
---|
அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் கொள்கைகளையும், உலகளாவிய அஞ்சல் முறைமைகளையும் ஒருங்கிணைப்பதில் ஈடுபடுகின்றது. அனைத்துலக அஞ்சல் ஒன்றியம், பேரவை, நிர்வாக அவை, அஞ்சல் செயற்பாட்டு அவை, பன்னாட்டுப் பணியகம் என்னும் நான்கு அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. இதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் பன்னாட்டு அஞ்சல் பணிகளை ஒரே வரையறைகளுக்கு உட்பட்டுச் செய்வதற்கு ஒத்துக்கொண்டு உள்ளன. அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்தின் பணியக மொழி பிரெஞ்சு ஆகும். 1994 ஆம் ஆண்டில் ஆங்கிலமும் வேலைகளைச் செய்வதற்கான ஒரு மொழியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலோட்டம்
அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு நாடும், அது அஞ்சல் சேவைகளை நடத்த விரும்பும் ஒவ்வொரு பிற நாட்டுடனும் தனித்தனியான அஞ்சல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனை எளிமையாக்கும் நோக்கில் 1863 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா ஒரு பன்னாட்டு அஞ்சல் மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து, 1874 ஆம் ஆண்டில், முன்னர் பிரசியாவினதும், பின்னர் செருமனியினதும் அஞ்சல் அமைச்சராக இருந்த ஈன்றிக் வொன் இசுட்டீபன் (Heinrich von Stephan) என்பவர் பொது அஞ்சல் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். இது 1874 அக்டோபர் 9 ஆம் தேதி கைச்சாத்தான பேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. ரைனில் கப்பலோட்டுவதற்கான மைய ஆணையம், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பழைமையான பன்னாட்டு அமைப்பு இதுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒன்றியத்தின் பெயர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என மாற்றப்பட்டது[1].
முன்னர் அஞ்சல்கள் ஒவ்வொரு நாடுகளினூடாகவும் செல்லும்போது அந்த நாடுகளின் அஞ்சல்தலைகள் ஒட்டப்படவேண்டும். அனைத்துலக அஞ்சல் ஒன்றிய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் உறுப்பு நாடொன்றின் அஞ்சல் தலை ஏனைய உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அஞ்சல்கள் பயணம் செய்யும் முழுத் தூரமும், அது அஞ்சலில் இடப்பட்ட நாட்டு அஞ்சல்தலையுடன் எடுத்துச்செல்ல வழியேற்பட்டது. இது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்றாகும்.
1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை அமைக்கப்பட்ட பின்னர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அதன் சிறப்பு முகமை நிறுவனமாக ஆனது. 1969 ஆம் ஆண்டில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் புதிய கட்டண முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன்படி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான அஞ்சல் போக்குவரத்தின் மொத்த நிறைகளுக்கு இடையிலான வேறுபாட்டுக்கு அமையக் கட்டணம் செலுத்த வேண்டும். அஞ்சல் போக்குவரத்து ஒரு திசையில் மறு திசையைவிட அதிகமாக இருக்கும் நிலையில் இம்முறை நியாயமானதாக அமைந்தது. இந்த முறையினால், சஞ்சிகைகள் போன்றவற்றை அனுப்புவதற்கான கட்டணம் அதிகரித்தது. இந்த நிலையைச் சீர் செய்யும் முகமாக 1991 ஆம் ஆண்டில் புதிய முறை ஒன்று அறிமுகமானது. இதன்படி, ஆண்டொன்றுக்கு 150 தொன்களுக்கு மேற்பட்ட அஞ்சல்களைப் பெறும் நாடுகளுக்கு கடிதங்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் தனித்தனியான கட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன[2].
குறிப்புகள்