பெசன்ட் நகர் (ஆங்கிலம்: Besant Nagar), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். சென்னை மாநகராட்சியில் உள்ள கடலை ஒட்டிய ஒரு பகுதியாகும். பெசன்ட் நகர் சுற்றுப்புறத்தில் அதிக வசதி படைத்த மக்கள் வசிக்கின்றனர்.
மெட்ராஸின் முன்னாள் கவர்னரான எட்வர்ட் எலியட்டின் பெயரிடப்பட்ட எலியட்ஸ் கடற்கரை, இந்த பகுதியின் பிரபலமான இடமாகும். இது இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு கவர்ச்சியான இடமாக மாறிவிட்டது.
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், பெசன்ட் நகர் அமைந்துள்ளது.
இது சின்ன வேளாங்கன்னி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மிகவும் பிரசிதிபெற்றது.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில், 85 வெவ்வேறு பேருந்துகள் தினமும் 500 பயணங்களை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அக்டோபர் 2012 இல், பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை, ஒரு பணிமனையாக மாற்ற மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) முடிவு செய்தது. பணிமனை, பேருந்து நிலையத்தை விட 70 சதவீதம் பெரியதாக இருக்கும். 5 மில்லியன் டாலர் செலவில் இந்த பேருந்து பணிமனை கட்டி முடிக்கப்பட்டது.[3]