அண்ணா நூற்றாண்டு நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010-ஆம் ஆண்டு செப்டெம்பர் 15-ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16-ஆம் நாள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டது.
நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
3.75 லட்சம் சதுரடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும்.
நூலக அமைப்பு
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாகச் செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.
- சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு: பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனிப்பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.
- மெய்ப்புல அறைகூவலர் பிரிவு : மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500-இக்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400-இக்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.
- நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு : நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும் பருவ இதழ்களும் உள்ளன. தமிழில் வெளியிடப்படும் அனைத்துப் பருவ இதழ்களும் இங்கு உள்ளது என்பது தனிச்சிறப்பு. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குப் பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் நிலைப்பேழையில் (அலமாரியில்) வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாகப் பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- குழந்தைகள் பிரிவு : முதல் தளத்தில் 15000 சதுரடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம். குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும்மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாகக் குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும் விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- தமிழ் நூல்கள் பிரிவு : இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
- 'அ' பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.
- 'ஆ' பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக்கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
- ஆங்கில நூல்கள் பிரிவு : மூன்றாவது முதல் ஏழாம் தளம் வரை ஆங்கில நூல்கள் பாட வாரியாகப் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
- மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன. பொது அறிவு, கணினி அறிவியல், நூலகம் & தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அறவியல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன.
- நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிருவாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.
- ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல்,, வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.
- ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.
- ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா & பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.
- ஏழு தளங்கள் உள்ளன.
படக் காட்சியகம்
-
முகப்பு
-
இலச்சினையற்ற முகப்பு
-
இலச்சினையுடன் கூடிய முகப்பு
-
அண்ணா நூற்றாண்டு நூலக, தள விவரம்
-
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முன்தோற்றம்
-
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கல்வெட்டு
சர்ச்சை
நவம்பர் 2, 2011 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நூலகம் கல்லூரிச் சாலையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அமைக்கப்படும் அம்மருத்துவமனை இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அரசின் இம்முடிவை எதிர்த்து மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 4, 2011 அன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து அரசின் பதிலை எதிர்பார்த்து அறிக்கை அனுப்பி வழக்கை ஆறு வாரங்கள் தள்ளிவைத்தது.[1]
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2012 செப்டம்பர் 9ம் தேதி திருமண விழா நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[2] அதே போன்று நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[3]
மேலும் பார்க்க
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ http://tamil.oneindia.in/news/2011/11/04/madras-hc-stays-shifing-anna-centenary-library-aid0174.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
- ↑ http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1207/02/1120702041_1.htm
|
|