தற்போதைய இந்தியா, பாகித்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைசிராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சம்மு காசுமீர் இராச்சியம், ஐதராபாத் இராச்சியம் போன்ற 526 சமசுதானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன.
1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமசுதானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. சம்மு காசுமீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த சம்மு காசுமீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.
1950ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் படி 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 14 மாநிலங்கள் நிறுவப்பட்டது.
இதே அடிப்படையில் மகாராட்டிராவில் இருந்து குசராத்து (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீசுகர், உத்தராகண்டம் மற்றும் சார்க்கண்டு என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.