சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் / சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு (Chennai Mass Rapid Transit System, MRTS) அல்லது பறக்கும் இரயில் என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து (இரயில்) சேவையைக் குறிக்கும். இது இந்தியாவின் முதல் உயர்மட்ட தொடருந்துத் தடமும் நாட்டின் நீளமான உயர்மட்டத் தடமும் (17 கி.மீ.) ஆகும்.[2][3]
1980-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னையின் நகர மையத்தை இணைக்கும் விதமாக ஒரு இருப்பு பாதையை அமைக்க அரசாங்கம் ஆலோசித்தது. 1985-ஆம் ஆண்டில் பறக்கும் தொடருந்து திட்டத்திற்கு முறையான திட்டமிடல் செய்யப்பட்டு, 1991-ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணியானது மிகுந்த கால தாமதத்திற்குப்பின் 1997-ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இரண்டாம் கட்ட பணியானது 2007-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.
வடிவமைப்பு
ஒவ்வொரு பறக்கும் தொடருந்து நிலையமும் வெவ்வேறு கட்டிடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 பெட்டிகளைக்கொண்ட ஒரு முழு நீள மின் தொடர் இணைப்புப்பெட்டிகளை தன்னகத்தே உள்ளடக்கும் விதமாக, ஒவ்வொரு நிலையமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பறக்கும் தொடருந்து வழித்தடத்தில் வெறும் ஆறு மின் தொடர் இணைப்புப்பெட்டிகள் மட்டுமே உடைய தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.
கட்டங்கள்
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம், மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு, கட்டப்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அத்திட்டங்களின் விளக்கங்களை காணலாம்.
முதல் கட்டம் மிகுந்த தாமதத்திற்குப் பிறகு 1997-ஆம் ஆண்டு பொதுப் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. முதல் கட்டத்தின் முதல் மூன்று நிறுத்தங்கள் தரை மட்டத்தில் அமைந்துள்ளன. பூங்கா நகர் நிறுத்தத்திலிருந்து, மின் தொடருந்து மெல்ல மேலே ஏறி சிந்ததரிபேட்டை நிறுத்தத்தை அடையும் போது, தொடருந்து முழுவதும் மேலே பயணிக்கும். அந்த நிறுத்தத்திலிருந்து, திருமயிலை நிறுத்தம் வரை, தொடருந்து மேலேயே பயணிக்கும்.
இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த விரிவக்கத்தின்படி, வேளச்சேரி நிலையம், பரங்கி மலை புற நகர் தொடருந்து நிலையத்தோடு இணைக்கப்படும்.
வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் 2.5 கி.மீ. நீளம் ஆகும், இதில் ஆதம்பாக்கம் மற்றும் மவுண்ட் இடையே கடந்த 500 மீட்டர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள் காரணமாக நிறைவடையாமல் உள்ளது.
மவுண்ட் வரையிலான இணைப்பை முடிக்க நிலம் கையகப்படுத்துவதற்காக காலவரையின்றி காத்திருப்பதற்கு பதிலாக, முடிந்த நிலையங்களுக்கு ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
வேளச்சேரியிலிருந்து அடுத்த இரண்டு நிலையங்களான புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் வரை ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
மூன்றாம் கட்டம்
மூன்றாம் கட்டப்பணியானது, பரங்கி மலை நிறுத்தத்திலிருந்து, சீராக உள் வட்ட சாலை வழியாக வில்லிவாக்கம் வரை சென்று, சென்னை-அரகோணம் புற நகர் தொடருந்து வழித்தடத்தில் இணைவது போல் திட்டமிடப்பட்டது. ஆனால் பிற்பாடு திட்டமிடப்பட்ட சென்னை மெட்ரோ வழித்தடத்தோடு இந்தத் தடம் ஒத்துப்போவதால், மூன்றாம் கட்டத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.