செயப் பிரகாஷ் நாராயண் வானூர்தி நிலையம் (Jay Prakash Narayan Airport, (ஐஏடிஏ: PAT, ஐசிஏஓ: VEPT) பீகார் மாநிலத்தின் தலைநகரம் பட்னாவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது பட்னாவிற்கு தென்மேற்கே 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) தொலைவில் அமைந்துள்ளது.[4] இந்திய விடுதலை இயக்க வீரரும் புகழ்பெற்ற சமூகநீதி அரசியல்வாதியுமான செயப் பிரகாஷ் நாராயணனின் பெயர் இந்த வானூர்தி நிலையத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள இரண்டு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் இது ஒன்றாகும்; மற்றது கயையில் உள்ள கயை வானூர்தி நிலையம் ஆகும். [5]. இருப்பினும், பட்னா வானூர்தி நிலையம் கட்டுப்படுத்தப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது; இங்குள்ள ஓடுபாதைகள் சிறியதாக, பெரிய வானூர்திகள் வந்து செல்ல தகுந்தவையாக இல்லை.[6][7] 2015-16 ஆண்டில் பயணிகள் போக்குவரத்து 32& வளர்ச்சியடைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் நெருக்கடிமிக்க இந்திய வானூர்தி நிலையங்களில் 17ஆம் இடத்தில் உள்ளது. [8] கூடிவரும் போக்குவரத்தைச் சமாளிக்க இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்த வானூர்தி நிலையத்தின் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறது. இந்த விரிவாக்கம் 2021இல் முடிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9]. இது தவிரவும் பித்தா வான்படை வானூர்தித் தளத்தில் குடிசார் வளாகமொன்றை உருவாக்கி அதனை பட்னாவிற்கான இரண்டாவது மாற்று வானூர்தி நிலையமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது..[10]
விரிவாக்கம்
பட்னா வானூர்தி நிலையத்திற்கு அடுத்து உலகத்தர இரண்டடுக்கு கட்டிடம் கட்டிட 13 ஏக்கரா நிலத்தை மாநில அரசு கொடுக்கவுள்ளது; இதற்கு மாற்றாக பட்னாவின் அனிசாபாத்தில் தன்னிடமுள்ள 11.35 ஏக்கர் நிலத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பீகார் அரசுக்கு திருப்பியளிக்கும். [11]இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் 2035ஆம் ஆண்டு வரையாவது வான் இயக்கங்களை தக்கவைக்கத் தேவையான அளவில் தற்போதைய முனையத்தை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது; ஆண்டுக்கு 30 இலக்கப் பயணிகளை மேலாளும் திறன் கொண்டதாக இருக்கும். புதிய முனையக் கட்டிடம் தற்போதுள்ள முனையக் கட்டிடத்துடன் விண்பாலத்தால் இணைக்கப்பட்டிருக்கும். தவிரவும், 20 கிமீ தொலைவில் இந்திய வான்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பீதா வான்தளத்தில் குடிசார் வளாகமொன்றைக் கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது பெரிய வானூர்திகள் வந்து செல்லுமளவில் இருக்கும்.[8] அக்டோபர் 2016 இல் புதிய வானூர்தி நிலையத்தை பித்தாவில் அமைக்கும் திட்டத்தை பட்னாவின் பெருந்திட்டத்தின் அங்கமாக்க பீகார் ஆய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.[12] இங்கு புதிய வானூர்தி நிலையம் அமைக்க மாநில அரசு 126 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது.[13] தற்போதைய ஓடுபாதையின் நீளம் 2,286 மீட்டராக இருந்தாலும் இடச் சிக்கல்களால் வானூர்திகள் எழும்ப 1,954 மீட்டர் நீளமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. முனையக் கட்டிடத்தின் பரப்பு தற்போதுள்ள 7,200 சதுர மீட்டர்களிலிருந்து 57,000 சதுர மீட்டர்களாக விரிவாக்கப்படும்.[14] புதிய முனையக் கட்டிடம் இரண்டடுக்கு கட்டிடமாக அமையும். இதில் ஆறு வானூர்திபாலங்களும் ஒரேநேரத்தில் 14 வானூர்திகளை நிறுத்துமளவில் வான்பக்கத் தளப் பரப்புடன் அமைக்கப்படுகின்றது. தற்போதைய வானூர்தி நிலையத்தில் நான்கு வானூர்திகளே நிறுத்த இயலும். இந்த விரிவாக்கத்தின்போது தற்போதுள்ள பல கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன; இவற்றில் வானூர்தி நிலைய ஊழியர் குடியிருப்புகள், ஐஏஎஸ் பவன், வானிலை ஆய்வுமையம், பீகார் பறக்கும் சங்கம் ஆகியனவும் அடங்கும். புதிய வான்க் கட்டுப்பாடு கோபுரம் கட்டமைக்கப்படும்; இது பிர்லா தொழில்நுட்பக் கழகத்தின் பட்னா வளாகத்தை அடுத்து அமைக்கப்பட உள்ளது.
கட்டமைப்பு
இந்த வானூர்தி நிலையம் 261 ஏக்கர்கள் (106 ha) பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 170 அடிகள் (52 m) உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரே ஓடுபாதைக்கு 07/25 என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 1,954 by 45 மீட்டர்கள் (6,411 அடி × 148 அடி) நீளமுள்ள இந்த ஓடுபாதைத் தளம் அசுபால்ட்டால் இடப்பட்டுள்ளது.[15][16]
17 சூலை 2000: ஏர் இந்தியாவின் வட்டாரப் போக்குவரத்து நிறுவனமான அல்லையன்சு ஏர் வான்பறப்பு 7412, இந்த வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் தரையில் மோதியது; இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.[17]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன