லைனசு கார்ல் பாலிங் (Linus Carl Pauling, பிப்ரவரி 28, 1901 – ஆகஸ்ட் 19, 1994)[3] ஓர் அமெரிக்க வேதியலாளரும் உயிரி வேதியலாளரும் அமைதி ஆர்வலரும் எழுத்தாளரும் கல்வியாளருமாவார். லின்னஸ் பாலிங் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க அறிவியலறிஞராவார்.[4][5] 1954 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் அமைப்பையும், வேதிப்பிணைப்புகளையும் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர். லின்னஸ் பாலிங் 1962 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும் பெற்றவர். இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்களுள் நால்வரில் ஒருவராகவும் (மற்றவர்கள்: மேரி கியூரி, ஜான் பார்டீன், பிரடெரிக் சேனர்) இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற இருவரில் (மற்றொருவர் மேரி கியூரி- வேதியல் மற்றும் இயற்பியல்) ஒருவராகவும் உள்ளார்.[6]