கிறித்தோபர் கொலம்பசு

கிறித்தோபர் கொலம்பசு
Christopher Columbus
கொலம்பசின் இறந்தபின்னரான உருவப் படம் (வரைந்தவர்: ரிடொல்ல்ஃபோ கேர்லாண்டையோ
பிறப்புஆகத்து-அக்டோபர் 1451
ஜெனோவா, இத்தாலி
இறப்பு(1506-05-20)மே 20, 1506
வல்லடோலிட், எசுப்பானியா
கல்லறைசெவீயா பெருங்கோவில்
தேசியம்ஜெனோவியர்(சர்ச்சைக்குரியது)
மற்ற பெயர்கள்கிறித்தோபரோ கொலம்பசு
கிறித்தோபல் கொலோன்
பட்டம்பெருங்கடல் ஆட்மிரல்
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
பிலிப்பா மோனிஸ்
பிள்ளைகள்டியேகோ
பெர்னாண்டோ
உறவினர்கள்பார்த்தலோமியோ (உடன்பிறந்தவர்)
டியேகோ (உடன்பிறந்தவர்)
கையொப்பம்

கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[1][2][3][4]

எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின.

புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார்.

கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.[5]) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.[1]

இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார்.[6][7][8] அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500இல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம்

கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.

உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

இளமைக்காலம்

கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார்.[9] அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி.

1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார்.[10] இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453 இல் கைப்பற்றியிருந்தனர்).

1476-இல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார்.

கிறித்தோபர் கொலம்பசு

1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர்.

கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார்.[1]

கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார்.[11] அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.

கொலம்பசின் தாய் நாடு

இலண்டனின் பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள கொலம்பஸ் சிலை

கொலம்பசின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். 1470க்கு முன்னரான கொலம்பசின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பசின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பசின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. நியூ யார்க் நகரத்தில், எதிரெதிர் இசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பசின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, கொலம்பஸ் வட்டம் மற்றும் மையப் பூங்கா போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன.

சில பாசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் பாசுக்கைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன கோர்சிகா தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் காத்தலோனியா அல்லது கிரீஸ் அல்லது போர்த்துக்கல்-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.

சிந்தனைத் தோற்றம்

ஜெனோவாவில் உள்ள கொலம்பஸ் நினைவுச்சின்னம்

1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக் ஊடாக இண்டீசுவிற்கு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத் தெரிகிறது(ஏனென்றால் அப்போதைய ஐரோப்பியர், புவி தட்டையானது என்று நம்பினர்). ஆனால் அக்காலத்தைய கடற்பயணிகள், வழிகாட்டிகள் புவி உருண்டையானது என்று அறிந்திருந்தனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் கொலம்பசு இண்டீசிற்கு எவ்வளவு தூரம் என்பதை அறுதியிடாததுதான். பல ஐரோப்பியர் தாலமி-யின் கருத்தான பெரு நிலப்பரப்பு(உரேசியாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து) 180 பாகை புவி அளவையும், மீதம் 180 பாகை நீர் அளவையும் கொண்டதாக நம்பினர். (உண்மையில் இது 120 பாகை நிலப்பகுதி, மீதம் அறியப்படாத பகுதி). கொலம்பசு டி'ஐல்லியின் அளவீடுகளை, அதாவது 225 பாகை நிலம், 135 பாகை நீர் என்பது, ஏற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக கொலம்பசு 1 பாகை என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அளவைவிட சற்று குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டார். கடைசியாக கொலம்பசின் வரைபடம் உரோமன் மைல் அளவில் (5000 அடிகளைக்கொண்டதாக), கடல் மைல் (6,082.66 அடி புவிநடுக்கோட்டுப் பகுதியில்) அளவைவிட இருந்தது. கொலம்பசு கேனரித் தீவுகளிலிருந்து சப்பான் 2,700 மைல்கள் இருப்பதாகத் தீர்மானித்தார். உண்மையில் இத்தொலைவு 13,000 மைல்கள், பெரும்பாலான ஐரோப்பிய கடற்பயணிகளும் வழிகாட்டிகளும் இண்டீசு என்பது தொலைதூரத்தில் இருப்பதாகத் தயங்கி வந்தனர்.

கடற்பயணங்கள்

கிறித்தோபர் கொலம்பசின் கடற்பயணங்கள்.

1492க்கும் 1503க்கும் இடையே கொலம்பசு எசுப்பானிவிலிருந்து நான்கு முறை அமெரிக்காக்களுக்கு பயணித்துள்ளார். இந்த நான்கு பயணங்களுக்கும் காசுட்டில் இராச்சியமே புரவலளித்தது. இவை ஐரோப்பியக் கண்டுபிடிப்பு காலத்திற்கும் அமெரிக்கக் கண்டங்களின் குடிமைப்படுத்தலுக்கும் துவக்கமாக அமைந்தன. எனவே இவை மேற்கத்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

சான்றுகள் எதிராக இருந்தபோதிலும் கொலம்பசு எப்போதும் தாம் கண்டறிந்த நிலப்பகுதிகள் மார்க்கோ போலோவாலும் பிற ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளாலும் விவரிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்தவை என்றே உறுதியாக இருந்தார்.[1] இந்த மறுப்புதான் புதிய கண்டங்களுக்கு இவர் பெயரை வைக்காது பிளாரென்சின் தேடலாய்வாளர் அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரை ஒட்டி அமெரிக்கா என பெயரிட அமைந்த காரணங்களில் ஒன்றாயிற்று.[12]

முதல் பயணம்

சாண்டா மரியா கப்பலின் நகல்

கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும்( பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பசு திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது.

அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார்[13]. முதலில் அவர் கேனரித் தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார்.

12 அக்டோபர் 1492 – எசுப்பானியாவிற்காக கொலம்பசு அமெரிக்காக்களைக் கண்டுபிடித்தல், ஓவியம் - ஜான் வாண்டர்லின்.

அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார்.

"அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது,அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்."

கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார்(அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார்.

சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார்.

அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது.

இரண்டாம் பயணம்

1492க்கு முந்தைய கொலம்பசின் கையொப்பம் (இடது);அமெரிக்க கண்டுபிடிப்பிற்குப் பிறகு தன்னை 'Al Almirante' என்று அழைத்துக்கொண்டார்.(வலது)

அவர் தனது இரண்டாம் பயணத்தை (1493–1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும், அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில்,1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார்.

இந்த முறை அவர் முன்னைவிட தெற்காகச் சென்றார். முதலில் டொமினிக்கா-வையும், பின்னர் வடக்காகக் கிளம்பி, குவாடெலோப், மோன்ட்செர்ராட், ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார். அத்தீவுகளில் இறங்கி அவற்றை ஸ்பெயினின் பகுதிகளாக கன்னித் தீவுகள் மற்றும் பியுர்டோ ரிகோ போல தானே கூறிக்கொண்டார். பின்னர் அவர் லா எசுப்பானியோலா-விற்குச்சென்று, அங்கே அவர் விட்டுச் சென்றவர்கள் அங்குள்ள ஆதிவாசிகளுடன் சண்டையில் ஈடுபட்டு கொல்லப்பட்டதை அறிந்தார். லா எசுப்பானியோலா தீவுகளில் வடகடற்கரையில் உள்ள இசபெல்லா தீவுகளில்(இங்கே முதன்முதலில் தங்கத்தைக்கண்டார்), இவர் குடியேற்றங்களை அமைத்தார். ஆனால் இங்கே இவர் நினைத்தது போல தங்கம் அவ்வளவாகக்கிட்டவில்லை. பின்னர் இவர் இசபெல்லாத்தீவின் உட்பகுதியில் தங்கத்தைத்தேடி சிறிது கிடைப்பதை அறிந்தார். அங்கே ஒரு சிறு கோட்டையைக் கட்டினார். கியூபா-வின் தென் கடற்கரையில் பயணித்து, பின்னர் அது ஒரு தீபகற்பம், தீவு அல்ல என்பதை அறிந்தார். பின்னர் ஜமைக்காவைக் கண்டுபிடித்தார்.

தன்னுடைய இரண்டாம் பயணத்தின் போது பெர்டினான்ட் மற்றும் இஸபெல்லாவினால் அங்குள்ள குடிகளிடம் நட்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் கொலம்பஸ் தன் இரண்டாம் பயணத்தில் அரசருக்கு ஒரு கடிதம் அனுப்பி அங்குள்ள குடிகளை அடிமைப்படுத்த உரிமை வழங்குமாறு கேட்டார். ஏனென்றால் கரிப்-இலிருந்த குடிகள் முரடர்களாக இருப்பதாக அவர் உணர்ந்திருந்தார். அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்ட போதிலும் கொலம்பஸ் பிப்ரவரி, 1495 -இல் கொலம்பசு ஆராவக்-ஐச்சேர்ந்த 1600 பேரை பிணையாளிகளாக்கினார். 550 பேர் எசுபானியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டனர். அவர்களில் 200 பேர் கப்பலிலேயே இறந்தனர் (நோயால் இருக்கக்கூடும்). எசுப்பானியாவை அடைந்த பாதிப் பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஆனால் எசுப்பானியா வந்தவர்கள் மறுபடியும் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறாக அமெரிக்கக் குடிகளை வளைத்து அடிமைகளாக்குவது எசுப்பானியர்களுக்கும், அங்குள்ள குடிகளுக்குமான சண்டைகளுக்கு வழிவகுத்தது.

கொலம்பசின் பயணத்தின் மிக முக்கியக் குறிக்கோள் தங்கமே. அதற்காக எயிட்டி-இலுள்ள சிகாவோ தீவுகளில் இருந்த குடிகளை ஒரு திட்டத்திற்கு ஆட்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தங்கத்தைக் கொண்டு வரவேண்டுமென்று அவர்களை மிரட்டினார். அவ்வாறு கொண்டு வராதவர்களின் கைகள் வெட்டப்படும் என்றும் மிரட்டினார்.அப்படியிருந்தும் அவரால் அவ்வளவாக தங்கத்தைப் பெற முடியவில்லை.

அவர் தன்னுடைய எசுப்பானிய அரசருக்கான கடிதங்களில் கொத்தடிமைப்படுத்துவதன் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்தினார். ஆனால் அவையாவும் அரசரால் மறுக்கப்பட்டன. அரச குடும்பத்தினர் அமெரிக்கக்குடிகள் கத்தோலிக்கத்திருச்சபையின் எதிர்கால உறுப்பினர்களாக அவர்கள் விரும்பினர்.

குறிப்பாக, கொலம்பஸ் என்கோமியென்டா எனப்படும் எசுப்பானியர்களின் 'அமெரிக்க குடிகளை கிறித்துவர்களாக மாற்றினால் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்' திட்டத்தைத் தன்னலக் கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினார். இந்தத் திட்டம் அமெரிக்கக்குடிகள் கொத்தடிமைகளாக மாற வழிவகுத்தது. சில சமயங்களில் இந்தியக்குடிகள் சாகும்வரை வேலை செய்தனர். சில சமயங்களில் அவர்கள் ஐரோப்பியர்களால் அவர்களுக்குப் பரப்பப்பட்ட நோயினாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் இறந்தனர். கொலம்பசிற்கு முன்னதான மக்கள் தொகை பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. 1496-இல் பார்த்தலோமே டி லாஸ் காஸாஸ் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார். 3,000,000 டையனோக்கள் இருந்ததாக அது தெரிவிக்கிறது. 1514-இல் எடுக்கப்பட்ட ஒரு எசுப்பானியக் கணக்கெடுப்பு 22,000 டையனோக்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றது. 1542-இல் 200 பேர் மட்டுமே இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கொலம்பசு தன்னுடைய உடன்பிறந்தவர்களை இந்தக்குடியிருப்புகளுக்கு அதிகாரிகளாக நியமித்து விட்டு ஹிஸ்பானியோலாவை விட்டு ஐரோப்பாவிற்கு மார்ச் 10, 1496 -இல் புறப்பட்டார். அவருடைய உடன்பிறந்தவர்களும் மற்ற எசுப்பானியர்களும் என்கோமியென்டா என்னும் கொலம்பசின் திட்டத்தை அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தினர்.

கொலம்பசு அவர் கண்டுபிடித்த தீவுகளின் ஆளுநராக அமர்த்தப்பட்டார். அத்தோடு அட்லாண்டிக் கடலில் பல்வேறு பயணங்களை அவர் மேற்கொண்டார். அவர் மிகப்பெரும் கடல் பயணியாக இருந்தபோதிலும் அவர் ஒரு மோசமான நிர்வாகியாகக் கருதப்பட்டார். அதனால் அவர் 1500-ல் ஆளுநர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.

மூன்றாம் பயணம் மற்றும் கைதுப்படலம்

1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு, இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பசின் குறிப்புக்களை தந்தவர்) உடன் , கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார். அத்தோடு தென் அமெரிக்காவின் நிலப்பகுதியையும் கண்டுபிடித்தார். அங்கே அவர் ஒரினோகோ ஆற்றையும் கண்டார். முதலில் இந்த நிலப்பரப்புக்கள் புதிய கண்டம் என்று கூறியவர், பின்னர் அவை ஆசியாவின் பகுதிகள் என்று மாற்றிச் சொன்னார்.

ஸ்பானிய குடியேற்றவாசிகள், கொலம்பசின் புதிய உலகைப்பற்றிய மிகைப்படுத்திய கூற்றுக்களால் ஏமாந்து போனார்கள்.கொலம்பஸ் குடியேற்றவாசிகளுக்கும், அமெரிக்கக்குடிகளுக்கும் இடையிலான சண்டைகளைத்தீர்க்க வேண்டியவரானார்.தன்னுடைய பேச்சைக் கேளாத ஸ்பெயின் நாட்டவர்களைத் தூக்கிலிடவும் செய்தார். இதனால் ஸ்பெயினுக்குத் திரும்பிய பலர் கொலம்பசைப் பற்றி அவதூறாகக் குற்றம் சாட்டினர். அரசரும் அரசியும், பிரான்சிஸ்கோ டி போபடில்லா என்ற ஒரு அரச நிர்வாகியை 1500-இல் அனுப்பினர். இவர் வந்து கொலம்பஸ் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்து ஸ்பெயினுக்கு அனுப்பினர். கொலம்பஸ் தன்னுடைய கைவிலங்கை ஸ்பெயின் திரும்பும்வரை கழற்ற மறுத்தார்.அப்போது அவர் ஸ்பெயின் அரசருக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அவர் ஸ்பெயினில் விடுவிக்கப்பட்டாலும், அவருடைய ஆளுநர் பட்டம் திரும்பத் தரப்படவில்லை. அத்தோடு வேதனையான விடயமாக, போர்த்துகீசியர்கள் இன்டீசுக்கான போட்டியில் வெற்றியும் பெற்றனர்: வாஸ்கோ ட காமா செப்டெம்பர் 1499-இல் இந்தியாவிற்குப்பயணம் மேற்கொண்டு திரும்பினார்(ஆப்பிரிக்கா வழியாக கிழக்கில் பயணித்து).

கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும்

கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9, 1502) மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், தன்னுடைய இளைய மகன் பெர்டினான்டுவையும் கூட்டிக்கொண்டு சென்றார். இப்போது நடு அமெரிக்கா-வின் பெலிஸ்-இலிருந்து பனாமா வரை பயணித்தார். 1502-இல் இப்போது ஹோன்டுராஸ் எனப்படும் தீவின் கரையில் ஒரு சரக்குக் கப்பலை எதிர்கொண்டார். இது ஸ்பானியர்களின் மீசோ அமெரிக்கா நாகரிகத்தின் அமெரிக்கக்குடிகள் உடனான முதல் சந்திப்பாகும். பிறகு கொலம்பஸ் ஜமைக்காவில் ஒரு வருடம் தவிக்கவேண்டியதாயிற்று. பிறகு அவர் இரண்டு பேரை கேனோவில் ஹிஸ்பேனியோலாவிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அமெரிக்கக்குடிகளிடம் மிகக் சரியாக சந்திரகிரகணத்தைக் கணித்துச்சொல்லி அவர்களது நன்மதிப்பைப்பெற்றார். கடைசியாக அவருக்கு உதவி கிடைத்ததூ. அதன்பின் ஸ்பெயினுக்கு 1504-இல் திரும்பச்சென்றார்.

கொலம்பஸ் கிறிஸ்துவரல்லாதவர்களைக் கிறிஸ்துவர்களாக்குவதற்காகவே இவ்வாறு கடற்பயணம் செய்வதாகச் சொல்லி வந்தார். தனது முதிர்ந்த வயதில் மிகவும் ஆன்மீகவாதியாக மாறினார்.அவர் தனக்கு தெய்வக்குரல் கேட்பதாகக் கூடச்சொல்லி வந்தார். ஜெருசலேம் நகரை மீட்கும் சிலுவைப்போரில் ஈடுபடப்போவதாகக் கூறி, பிரான்சிஸ்கன் அணிந்து வந்தார். தன்னுடைய கண்டுபிடிப்புகளை சொர்க்கம் என்றும் அவை கடவுளின் திட்டமென்றும் கூறிவந்தார்.

தனது கடைசிக் காலத்தில் கொலம்பஸ் தனக்கு ஸ்பானிய அரசிடமிருந்து பத்து விழுக்காடு புதிய தீவுகளிலிருந்து லாப ஈட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கேட்டு வந்தார். ஆனால் ஸ்பானிய அரசர் இதை நிராகரித்தார்.

மே 20, 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது. முதலில் வல்லாடோலிட்இலும், பின் செவில்-இலும் பின்னர் அவருடைய மகன் டியெகோ, அப்போதைய ஹிஸ்பானியோலாவின் ஆளுநர், அவரது முயற்சியில் ஸாண்டா டோமிங்கோவிற்கு அவரது உடல் 1542-இல் கொண்டு வரப்பட்டது. 1795-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால், ஹவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு கியூபா தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு செவிஜா (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர்.

பின்னாள் வாழ்க்கை

அவரது வல்லாடோலிட் இல்லத்தில் கொலம்பசு தனது முதல் கடற்பயணத்தில் பயன்படுத்திய சான்ட்டா மாரியா கப்பலின் சிறுவடிவம்[14]
செவீயா பெருங்கோயிலுள்ள கல்லறை. அவரது பூத உடலை காசுட்டைல், லியோன், அரகோன், நவரே அரசர்கள் தூக்குகின்றனர்.[15]

மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரிசியோவின் உதவியுடன் கொலம்பசு இரு நூல்களை வெளியிட்டார்: தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எசுப்பானிய அரசு தரவேண்டிய உரிமைகளை விவரித்த புக் ஆவ் பிரிவிலேசசு (1502), தனது கடலோடிப் பயணங்களின் சாதனைகளை விவிலிய முன்மொழிதலாக கருதி எழுதப்பட்ட புக் ஆவ் பிரொபெசீசு (1505).[1][16]

புதிய நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அனைத்து இலாபத்திலிருந்தும் 10% தமக்கு சேர வேண்டும் என எசுப்பானிய அரசரை வேண்டினார்; ஆனால் ஆளுநர் பதவியிலிருந்து அவரை விலக்கிய பிறகு அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது என்று அரசர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். கொலம்பசின் மறைவிற்குப் பின்னரும் அவருடைய வாரிசுகள் அரசர் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மிக நீண்டதாக இருந்தது. இந்த வழக்குகள் கொலம்பிய சட்டவழக்குகள் (pleitos colombinos) எனப்படுகின்றன.

உடல்நலக் கேடும் மறைவும்

தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார்; 41 அகவைகள் நிறைந்த கொலம்பசிற்கு அச்சமயம் கீல்வாதம் பற்றியது. தொடர்ந்த ஆண்டுகளில் இன்ஃபுளுவென்சா மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின.

கொலம்பசின் வாழ்முறையையும் நோய் உணர்குறிகளையும் கொண்டு தற்கால மருத்துவர்கள் அவருக்கு நேர்ந்தது கீல்வாதமல்ல என்றும் ரீய்ட்டரின் கூட்டறிகுறி என்றும் கருதுகின்றனர்.[17][18] ரீய்ட்டரின் கூட்டறிகுறி குடல் தொற்றுக்களால் ஏற்படும் ஓர் மூட்டு நோயாகும்; இது கிளமிடியா அல்லது கொணோறியா போன்ற பாலுறவு பரவு நோய்களிலிருந்தும் வந்திருக்கலாம். அவருடைய கடற்பயணங்களில் எங்காவது உணவு நச்சுமை தொற்றி இந்நோய் வந்திருக்கலாம் என டெக்சாசு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும் வாதவியலாளருமான மரு. பிராங்க் சி. ஆர்னெட் கருதுகிறார்.[17]

கொலம்பசு மரணம். லித்தோகிராப் - எல். பிராங் & கோ., 1893.

மே 20, 1506இல் தமது 54வது அகவையில் கொலம்பசு எசுப்பானியாவிலுள்ள வல்லாடோலிடில் இறந்தார்.

வெள்ளி நாவாய். கிறித்தோபர் கொலம்பசின் சாம்பல்[19]

கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லா எசுப்பானியோலாவின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி செவீயாவின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. 1542இல் காலனித்துவ சான்டோ டோமிங்கோவிற்கு (தற்கால டொமினிக்கன் குடியரசு) மாற்றப்பட்டது. 1795இல், லா எசுப்பானியோலாவை பிரான்சு கையகப்படுத்தியபோது மீண்டும் கூபாவின் அவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து கூபா விடுதலை பெற்றபோது மூண்டும் எசுப்பானியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு செவீயா பெருங்கோயிலில்[20] அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டது.

1877இல் சான்டோ டொமிங்கோவில் "டான் கிறித்தோபர் கொலம்பசு" என்று குறியிடப்பட்ட ஈயப்பெட்டி கிடைத்தது; இதனுள்ளே எலும்பு துண்டுகளும் துப்பாக்கி இரவையும் இருந்தன.

இதனால் தவறான உடலெச்சங்கள் அவானாவிற்கு மாற்றப்பட்டதோ என்ற குழப்பத்தை தீர்க்க சூன் 2003இல் செவீயாவிலிருந்த உடலின் டி. என். ஏ. கூறுகள் கொலம்பசின் தம்பி, மகன் ஆகியோரின் டி. என். ஏ கூறுகளுடன் ஒப்பிடப்பட்டன. துவக்கத்தில் கொலம்பசின் வயதிற்கும் உடற்கட்டுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய அளவில் எலும்புகள் இல்லை எனத் தோன்றியது;[21] டி.என். ஏ கிடைப்பதும் கடினமாக இருந்தது; இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியின் சிறு கூறுகளே கிடைத்தன. இந்த இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கூறுகள் கொலம்பசின் உடன்பிறப்பின் கூறுகளுடன் ஒத்திருந்தன; இருவரும் ஒரே அன்னைக்குப் பிறந்தவர்களாக உறுதி செய்யப்பட்டது.[22]

இச்சான்றும், பிற மானிடவியல், வரலாற்று பகுப்பாய்வுகளும் கொண்டு செவீயாவிலுள்ள எச்சங்கள் கொலம்பசினுடையதே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.[23] சான்ட்டோ டொமிங்கோவில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த உடலெச்சத்தை ஆய்வு செய்ய அகழ்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை; இதனால் அங்கிருப்பது கொலம்பசின் உடலின் பாகங்களாக என்பதை உறுதி செய்ய முடியவில்லை.[23][24] சான்டோ டொமிங்கோவில் இந்த கல்லறை "கொலம்பசு கலங்கரைவிளக்கத்தில்" (Faro a Colón) உள்ளது.

கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள்

கொலம்பசின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி, அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள், ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன.

புதிய நிலப்பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் வருகையும், அதன் பின்னர் பரவலான கிறிஸ்தவ மற்றும் ரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகளைப் பற்றிய ஒருவரின் கருத்தைக் பொறுத்து,கொலம்பஸ் நல்ல விதமாகவும் மோசமாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டடைந்து 400 ஆண்டுகள் ஆன 1892 வாக்கில், கொலம்பசை கொண்டாடும் போக்கு அதன் உச்சத்தை அடைந்தது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அவருடைய உருவச் சிலைகள் நிறுவப்பட்டன.

தன் சம காலத்தவர்களைப் போலன்றி,கொலம்பஸ் மட்டுமே உலகம் உருண்டையானது என்று கருதினார் என்ற வாதம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்த வாதம், கொலம்பஸ் மிகவும் முற்போக்கானவர் என்றும் சிறந்த அறிவாளர் என்றும் எடுத்துரைக்கப் பயன்பட்டது. கொலம்பஸ், மரபை மீறி, கிழக்குப் பகுதியைச் சென்றடைய மேற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டது, அமெரிக்கப் பாணிப் படைப்பூக்கத்திற்குச் சான்றாகக் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க, இத்தாலிய-அமெரிக்க, இஸ்பானிக்க சமூகத்தினர் கொலம்பசின் புகழைப் பரப்புவதில் முனைப்புடன் இருந்தனர். அமெரிக்க ஆதிக்கக் கலாச்சாரத்தால் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தினர், நடுநிலக்கடற் பகுதிக் கத்தோலிக்கர்களாலும் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சிறந்த பங்காற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கொலம்பசின் சாதனைகளை சுட்டிக்காட்டினர்.

கொலம்பஸ் - மனித குல எதிரி

கொலம்பஸ் ஒரு முரண்பட்ட மனிதர். சிலர், குறிப்பாக அமெரிக்கப் பழங்குடிகள், அவரை அமெரிக்கா மீதான ஐரோப்பாவின் சுரண்டல் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் கொத்தடிமை இவற்றிற்கு நேரடியான அல்லது மறைமுகமான காரணமாகக் கருதுகின்றனர்.

பார்த்தலோம் டி லாஸ் காசாஸ் எனும் சமயத் தலைவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பற்றி எழுதியிருந்தார் என்றாலும், 1960களுக்குப் பிறகே, அவரை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களின் - கொத்தடிமைப்படுத்தல், இனப்படுகொலை, பண்பாட்டுச் சிதைப்புகள் - சின்னமாகக் கருதும் போக்கு பரவலானது.ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அனைத்து தவறுகளுக்கும் கொலம்பசை குற்றம் சாட்ட இயலாது என்றாலும், 1493-1500ல் ஸ்பெயின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வைஸ்ராய் (அரச சார்பாளர்) ஆகவும் ஆளுநராகவும் அவர் செய்த கொடுஞ்செயல்கள், அவரை இனப்படுகொலைகளுக்காகக் குற்றஞ்சாட்ட போதுமான காரணம் என்று சிலர் கருதுகின்றனர்.

சமீப காலங்களில்,கொலம்பசின் சாதனைகள் பற்றிய பிரச்சாரமும் கொலம்பஸ் தினக் கொண்டாட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 1992ல் கொலம்பஸ் முதல் கடல் பயணம் தொடங்கிய 500வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2002ல், வெனிசுலா அதிபர் குகொ சவெஸ் கொலம்பஸ் தினத்தை "உள்நாட்டு எதிர்ப்பு நாள்" என்று பெயர் மாற்றும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.

நினைவுக் கொண்டாட்டம்

~ கிறித்தோபர் கொலம்பசு ~
ஐ.அ. கொலம்பிய பதிப்பு, 1893.

1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட் எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதனை டியா டெ லா ராசா எனக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் இது கொலம்பசு நாள் எனவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரின் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடப்படுகின்றது.

1893இல் சிக்காகோவில் நடந்த உலக கொலம்பியக் கண்காட்சியில் கொலம்பசு வந்திறங்கிய நானூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.[25] ஆறு மாதங்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 27 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வருகை தந்தனர்.

ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு 16 தபால்தலைகள் அடங்கிய நினைவு தபால்தலைத் தொகுப்பை வெளியிட்டது; இவை கொலம்பசு, அரசி இசபெல்லா, மற்றும் அவரது கடற்பயணங்களின் வெவ்வேறு நிலைகளை குறித்தனவாக இருந்தன. ஒரு சென்ட் மதிப்பிலிருந்து 5 டாலர் மதிப்பில் இவை இருந்தன. இந்த நினைவுத் தபால்தலைகள் மிகவும் புகழ்பெற்று ஏராளமாக விற்கப்பட்டன. ஆறு மாதகாலத்தில் மொத்தமாக இரண்டு பில்லியன் தபால்தலைகள் விற்கப்பட்டன; இதில் இரண்டு சென்ட் மதிப்பிலான "கொலம்பசின் வந்திறங்கல்" தபால்தலை 72% ஆகும்.[26]

1992இல், 500வது நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டமாக இரண்டாம் முறை இத்தகையத் தபால்தலைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இவை முதல்முறை தபால்தலைகளின் நகலாக இருப்பின்ம் வலது மூலையில் தேதி மட்டும் மாற்றப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்காவுடன் இத்தாலி, போர்த்துகல் மற்றும் எசுப்பானியாவும் இத்தபால்தலைகளை அந்நாட்டு செலாவணியில் வெளியிட்டன.[27]

மரபுவழி எச்சம்

கொலம்பசு கலங்கரைவிளக்கம் (பரோ அ கொலான்), சான்டோ டொமிங்கோ[28]

அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக கொலம்பசு "அமெரிக்காவைக் கண்டறிந்தவர்" என்ற கருத்து இருப்பினும் உண்மையில் முதலில் கண்டறிந்தவர்கள் இங்கு பல காலமாக வாழ்ந்திருந்த உள்ளூர் குடிகளாகும். கொலம்பசு முதல் ஐரோப்பியர் கூடக் கிடையாது; வைக்கிங்குகள் தான் முதலில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள். ஆனால் கொலம்பசு தான் அமெரிக்காவை ஐரோப்பாவில் பிரபலப்படுத்தியவர். மேற்கத்திய கவனத்திற்கு புதிய நிலப்பகுதியைக் கொண்டு வந்ததன் மூலம் புவியின் இரு முதன்மையான நிலப்பகுதிகளுக்கிடையேயும் அங்கு வாழ்பவர்களிடையேயும் நிலைத்த தொடர்பை துவங்கி வைத்தார். வரலாற்றாளர் மார்ட்டின் துகார்டு "கொலம்பசின் பெருமை அமெரிக்காவை முதலில் சென்றடைந்தவர் என்பதல்ல, அங்கு முதலில் தங்கியவர் என்பதாகும்" எனக் கூறியுள்ளார்.[29]

கொலம்பசு தாம் கண்டறிந்த நிலப்பகுதி ஆசியாவின் அங்கமென்றே இறுதி வரை எண்ணியிருந்ததாக வரலாற்றாளர்கள் பொதுவாக கருதியபோதும்[30] கிர்க்பாட்றிக் சேல் கொலம்பசின் புக் ஆவ் பிரிவிலேஜசில் புதிய கண்டத்தைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டுகிறார்.[31] தவிரவும், மூன்றாம் கடற்பயணத்தின் பதிவேடுகளில் "பரியா நிலம்" , "இதுவரை காணாத" கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.[32] அதேவேளையில் கொலம்பசின் மற்ற ஆவணங்களில் சியாவை சென்றடைந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்; 1502இல் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டருக்கு எழுதியக் கடிதத்தில் கூபா ஆசியாவின் கிழக்குக் கடலோரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.[33] மேலும் புதிய கண்டமான தென்னமெரிக்கா ஓரியன்ட்டின் இறுதியிலிருக்கும் பூலோக சொர்க்கம் என்றார்.[32] எனவே, அவருடைய உண்மையான கருத்துக்கள் என்னவென்று அறுதியாகத் தெரியவில்லை.

உலக கொலம்பியக் கண்காட்சிக்கு எசுப்பானியாவிலிருந்து பயணித்த நினா, பின்டா, சான்டா மாரியா கப்பல்களின் நகல்கள்.

கொலம்பசின் முதல் கடற்பயணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்குப் பயணித்த அமெரிகோ வெஸ்புச்சி தான் முதலில் இந்த நிலப்பகுதி ஆசியா அல்லவென்றும் யூரேசியர்களுக்கு இதுவரைத் தெரியாத புதிய கண்டம் என்றும் கூறியவர். செருமன் நிலப்பட வரைவாளர் மார்ட்டின் வால்ட்சிமுல்லருக்கு இந்த முடிவை எட்ட 1502-04இல் வெளியான அமெரிகோ வெஸ்புச்சியின் பயணப்பதிவேடுகளே மூலமாக அமைந்தன. கொலம்பசு இறந்த அடுத்த ஆண்டு, 1507இல் வெளியிட்ட தமது உலக நிலப்படத்தில் வால்ட்சிமுல்லர் அமெரிக்கா என்று புதிய கண்டத்தை அழைத்திருந்தார்; இது வெஸ்புச்சியின் இலத்தீனப் பெயரான "அமெரிகசு" என்பதலிருந்து வந்தது.

கொலராடோவின் டென்வரில் மாநிலச் சட்டப்பேரவைக்கு அருகிலுள்ள கொலம்பசு நினைவகம்.[34]

பலகாலமாக, பிரித்தானியர்கள் கொலம்பசை அல்லாது வெனிசிய ஜான் கபோட்டை முதல் தேடலாளராக கொண்டாடினர். ஆனால் புதிய நாடாக வளர்ந்து வந்த ஐக்கிய அமெரிக்காவில் கபோட் தேசிய அங்கீகாரம் பெறவில்லை. குடிமைபடுத்திய காலங்களிலிருந்தே அமெரிக்காவில் கொலம்பசிற்கான வழிபாடு வளர்ந்தது. அமெரிக்காவிற்கு கொலம்பியா என்ற பெயர் 1738இல் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதங்களில் இடம் பெற்றது.[35] அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் புதிய உலகைக் கண்டறிந்தவர் கொலம்பசு என்றக் கருத்தாக்கம் அமெரிக்கா முழுமையிலும் பரவியது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுத் தலைநகருக்கும் (கொலம்பியா மாவட்டம்), இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் (ஒகையோ, தென் கரொலைனா), கொலம்பியா ஆற்றுக்கும் கொலம்பசின் பெயர் சூட்டப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே 1819இல் தற்கால கொலொம்பியாவின் முன்னோடிக்கு கிரான் கொலொம்பியா எனப் பெயரிடப்பட்டது. பல நகரங்கள், ஊர்கள், கவுன்ட்டிகள், சாலைகள், அங்காடி வளாகங்கள் இவரதுப் பெயரைத் தாங்கி உள்ளன. 1866இல் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக கருதப்பட நியமிக்கப்பட்டார். இத்தகைய வழிபாட்டின் உச்சமாக 1892இல் அமெரிக்காவை அடைந்த 400வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. சிக்காகோவில் கொலம்பியக் கண்காட்சியும் நியூயார்க் நகரத்தில் கொலம்பசு வட்டமும் நிறுவப்பட்டன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Christopher Columbus Encyclopædia Britannica. 2010. Encyclopædia Britannica Online. 8 June 2010.
  2. Scholastic Teacher – Christopher Columbus (1451–1506) பரணிடப்பட்டது 2011-09-20 at the வந்தவழி இயந்திரம் Teaching Resources, Children's Book Recommendations, and Student Activities. Milton Meltzer. Author, Columbus and the World Around Him.
  3. World Book – Columbus, Christopher பரணிடப்பட்டது 2012-12-03 at Archive.today "Columbus, Christopher". World Book Store has the encyclopedia, dictionary, atlas, homework help, study aids, and curriculum guides. 2010
  4. Questia – COLUMBUS, CHRISTOPHER "Columbus, Christopher". Questia – The Online Library of Books and Journals. 2010
    Memorials Of Columbus: Or, A Collection Of Authentic Documents Of That Celebrated Navigator (page 9) Country of origin: USA. Pages: 428. Publisher: BiblioBazaar. Publication Date: 2010-01-01.
    Native American History for Dummies (page 127) Authors: Dorothy Lippert, Stephen J. Spignesi and Phil Konstantin. Paperback: 364 pages. Publisher: For Dummies. Publication Date: 2007-10-29.
    The peoples of the Caribbean: an encyclopedia of archeology and traditional culture (p. 67) Author: Nicholas J. Saunders. Hardcover: 399 pages. Publisher: ABC-CLIO. Publication Date: 15 July 2006.
  5. "Parks Canada – L'Anse aux Meadows National Historic Site of Canada". 24 April 2009. பார்க்கப்பட்ட நாள் 29 July 2009.
  6. Hoxie, Frederick (1996). Encyclopedia of North American Indians. Boston: Houghton Mifflin Co. p. 568. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-395-66921-1.
  7. Philip Herbst (1997). The Color of Words: An Encyclopaedic Dictionary of Ethnic Bias in the United States. Intercultural Press. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-877864-97-1.
  8. David Wilton (2 December 2004). Word Myths: Debunking Linguistic Urban Legends. Oxford University Press. pp. 164–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517284-3.
  9. Phillips, William D., and Carla Rahn Phillips. The Worlds of Christopher Columbus. Cambridge: Cambridge University Press, 1992. Page 9.
    "Even with less than a complete record, however, scholars can state with assurance that Columbus was born in the republic of Genoa in northern Italy, although perhaps not in the city itself, and that his family made a living in the wool business as weavers and merchants...The two main early biographies of Columbus have been taken as literal truth by hundreds of writers, in large part because they were written by individual closely connected to Columbus or his writings. ...Both biographies have serious shortcomings as evidence."
  10. "Christopher Columbus". Thomas C. Tirado, PhD Professor History. Millersville University.
  11. "Christopher Columbus Biography Page 2". Columbus-day.123holiday.net. பார்க்கப்பட்ட நாள் 29 July 2009.
  12. "The Naming of America". Umc.sunysb.edu. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2011.
  13. "THE ORIGINAL NIÑA". The Niña & Pinta. British Virgin Islands: The Columbus Foundation. Archived from the original on 26 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
  14. "Columbus Monuments Pages: Valladolid". பார்க்கப்பட்ட நாள் 3 January 2010.
  15. "Columbus Monuments Pages: Sevilla". பார்க்கப்பட்ட நாள் 3 January 2010.
  16. Froom 1950, ப. 2.
  17. 17.0 17.1 "Christopher Columbus Suffered From a Fatal Form of Arthritis". University of Maryland School of Medicine. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
  18. Hoenig, LJ (February 1992). "The arthritis of Christopher Columbus". The Archives of Internal Medinal 152 (2): 274–7. doi:10.1001/archinte.1992.00400140028008. பப்மெட்:1472175. 
  19. John Boyd Thacher (1904). Christopher Columbus: his life, his works, his remains: as revealed by original printed and manuscript records, together with an essay on Peter Martyr of Anghera and Bartolomé de las Casas, the first historians of America. G. P. Putnam & Sons. பார்க்கப்பட்ட நாள் 27 December 2011.
  20. "Cristóbal Colón: traslación de sus restos mortales a la ciudad de Sevilla at Fundación Biblioteca Virtual Miguel de Cervantes". Cervantesvirtual.com. Archived from the original on 14 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2009.
  21. Tremlett, Giles. "Young bones lay Columbus myth to rest". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  22. "DNA verifies Columbus' remains in Spain". Associated Press. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  23. 23.0 23.1 Álvarez-Cubero, MJ; Martínez-González, LJ; Saiz, M; Álvarez, JC; Lorente, JA (8 March 2010). "New applications in genetic identification". Cuadernos de Medicina Forense 16 (1–2): 5–18. doi:10.4321/S1135-76062010000100002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1135-7606. http://scielo.isciii.es/scielo.php?pid=S1135-76062010000100002&script=sci_arttext. 
  24. DNA verifies Columbus' remains in Spain, அசோசியேட்டட் பிரெசு, 19 May 2006
  25. "Bird's-Eye View of the World's Columbian Exposition, Chicago, 1893". உலக மின்னூலகம். 1893. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  26. Haimann, Alexander T., "2-cent Landing of Columbus", Arago: people, postage & the post, National Postal Museum online, viewed 18 April 2014.
  27. "Columbian Exposition Souvenir Sheets", Arago: people, postage & the post, National Postal Museum online, viewed 18 April 2014.
  28. "Columbus Monuments Pages: Santo Domingo". பார்க்கப்பட்ட நாள் 3 January 2010.
  29. Dugard, Martin. The Last Voyage of Columbus. Little, Brown and Company: New York, 2005.
  30. Thomas F. McIlwraith; Edward K. Muller (2001). North America: the historical geography of a changing continent. Rowman & Littlefield. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7425-0019-8.
  31. Sale, Kirkpatrick (1991). The Conquest of Paradise: Christopher Columbus and the Columbian Legacy, pp. 204–209
  32. 32.0 32.1 Eviatar Zerubavel (2003). Terra cognita: the mental discovery of America. Transaction Publishers. pp. 90–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7658-0987-2.
  33. Phillips, William D., and Carla Rahn Phillips. The Worlds of Christopher Columbus. Cambridge: Cambridge University Press, 1992, p. 227.
  34. "Columbus Monuments Pages: Denver". பார்க்கப்பட்ட நாள் 3 January 2010.
  35. The Gentleman's Magazine, Vol. 8, June 1738, p. 285.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!