ஏகாதிபத்தியம் அல்லது பேரரசுவாதம் (Imperialism) என்பது, பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும்.
இது ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துதன் மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது.
இச் சொல், அடக்கப்பட்ட நாடு, தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விபரிக்கவே பயன்படுகின்றது.
"ஏகாதிபத்திய காலம்" ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது. பேரரசுவாதம் என்பது, தொடக்கத்தில், 1500 களின் பிற்பகுதியில், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆப்பிரிக்கா, அமெரிக்காவை நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது. ஆங்கிலேயப் பொருளாதாரவாதி ஜே.ஏ.ஹாப்சன் 1902ல் ‘ஏகாதிபத்தியம்‘ எனும் நூலை வெளியிட்டபின் இச்சொல் பிரபலமானது.[1]
முதலாளித்துவம், புதிய சந்தை வாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காகப் ஏகாதிபத்தியத்தை தூண்டிவிட்டதாகவும் இது முதலாளித்துவத்தின் இறுதியானதும் உயர்மட்ட நிலையும் ஆகுமென லெனின் வாதித்தார். தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு வெளியிலான முதலாளித்துவத்தின் அவசியம் கருதிய விரிவாக்கம் பற்றிய கொள்கையை ரோசா லக்சம்பர்க்கும் தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட்டும் (Hannah Arendt) ஏற்றுக்கொண்டனர்.
லெனின் பார்வையில் ஏகாதிபத்தியம்
உலகப்போர் சம்பந்தமான அணுகுமுறையைப் பற்றி சோஷலிஸ்ட்டுகள் மத்தியில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில் லெனின் ஏகாதிபத்தியம் என்ற நூலை எழுதினார் . அவர் ஏகாதிபத்தியம் என்ற சொல்லைப் பின்வருமாறு வரையறுத்தார்:[2]
...... ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டம் என்று சுருக்கமாகக் கூறலாம். அது பின்வரும் ஐந்து அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
உற்பத்தியும் மூலதனமும் குவிக்கப் பட்டு மிகவும் வளர்ச்சியடைந்த கட்டத்தை அடைகின்ற பொழுது ஏகபோகங்களைப் படைக்கின்றன. அவை பொருளாதார வாழ்க்கையில் தீர்மானகரமான பாத்தி ரத்தை வகிக்கின்றன.
வங்கி மூலதனம் தொழில் துறை மூல தனத்துடன் இணைந்து நிதி மூலதனத்தை, கோடீஸ்வர வர்த்தகர்களை உருவாக்குகிறது.
பண்டங்களின் ஏற்றுமதியிலிருந்து வித்தியாசமான மூலதன ஏற்றுமதி அதிகமான முக்கியத்துவத்தை அடைகிறது.
சர்வதேச ஏகபோகக் கம்பெனிகள் அமைக்கப்பட்டு அவை உலகத்தைத் தமக்குள் பிரித்துக்கொள்கின்றன.
பெரும் முதலாளித்துவ அரசுகள் உலகத்தைத் தமக்குள் கூறு போட்டுக் கொள்கின்றன.
வரலாறு
ஜப்பான், கொரியா, இந்தியா, சீனா, அசிரியா, பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம், உரோமைப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, பாரசீகப் பேரரசு, ஒட்டோமான் பேரரசு, பிரித்தானியப் பேரரசு மற்றும் பல பேரரசுகளின் வரலாற்றில் பேரரசுவாதம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மங்கோலிய சாம்ராஜ்ஜியத்தின் போது செங்கிஸ் கானின் வெற்றிக்கும் மற்றும் பல பேரரசர்களின் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பேரரசுவாதம் இருந்துள்ளது. வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிம் பேரரசுகளும். துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவ சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்லும் பன்னிரெண்டுக்கும் அதிகமான பேரரசுகள் இடம்பெற்றன. உதாரணமாக எத்தியோப்பியன் பேரரசு, ஓயோ பேரரசு, அசாந்த் யூனியன், லுபா சாம்ராஜ்ஜியம், லுண்டா சாம்ராஜ்ஜியம், மற்றும் முடாப்பிய பேரரசு ஆகியனவாகும். பண்டைய கொலம்பிய யுகத்தில் அமெரிக்கர்கள் ஆஸ்டெக் பேரரசு மற்றும் இன்க் பேரரசு போன்ற பெரிய பேரரசுகளைக் கொண்டிருந்தனர்.
ஒரு நாட்டில் வெளிநாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை கட்டாயமாக சுமத்தப்பட்ட அல்லது பொதுவாக ஒரு ஒன்றிப்பு அரசாங்கம் இல்லாத பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக “பேரரசுவாதம்” என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படும் என்றாலும் சில நேரங்களில் வலுவான அல்லது மறைமுக அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்கை விரிவாக்க பலவீனமான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் செயல்முறையை குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.[3]
கலாச்சார பேரரசுவாதம் என்பது மிகவும் தெளிவற்ற கருதுகோளாகும். அதில் ஒரு நாட்டின் பண்பாட்டு கலாச்சாரமானது அடுத்த நாட்டு கலாச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்துவதையே பண்பாட்டு பேரரசுவாதம் என்றழைக்கப்படுகிறது. மென்மையான அதிகார வடிவமாக கருதப்படும் இது ஒரு நாட்டின் நகர்புறங்களில் தார்மீக, கலாச்சார மற்றும் சமூகத்தின் உலக கண்ணோட்டத்தை மாற்றுகிறது.
இத்தகைய செயல்கள் ஏதோவொரு விதத்தில், பேரரசுவாதத்தின் கருத்தாக்கத்தை அர்த்தமற்றதாக கருதுவது போன்றதாகும்.வெளிநாட்டு இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இளந்தலைமுறையிர் இடையே பண்பாட்டு ரீதியிலான உள்நாட்டு கொள்கைகளுக்கு மாறான பழக்கவழக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்துவதும் இதற்குச் சான்றாகக் கூறலாம். உதாரணமாக, பனிப்போர் காலத்தில் ஓபரா டல்லாஸ் சோப்பின் ஆடம்பரமான அமெரிக்க வாழ்க்கைப் பாணியின் சித்திரங்கள் ருமேனியர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றின. மிக சமீபத்திய உதாரணம் வட கொரிய மக்களிடைளே மிகவும் செல்வாக்கு ஏற்படுத்திய கடத்தப்பட்ட தென்கொரிய நாடகத் தொடரினைப் குறிப்பிடலாம். ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், அரங்குகளையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந் நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்துபோகச் செய்தனர். பொதுக் கிரேக்க மொழியின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.[4]
நாடு வாரியாக பேரரசுவாதம்
இங்கிலாந்து
பிரித்தானிய பேரரசின் ஏகாதிபத்திய ஆர்வம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காணலாம். 1599 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டு அடுத்த ஆண்டில் ராணி எலிசபெத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.[5] > இந்தியாவில் வணிகப் மையங்களை நிறுவுவதன் மூலம், இந்தியாவில் ஏற்கனெவே வர்த்தக தளங்களை நிறுவியிருந்த
போர்த்துகீசியர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள இங்கிலாந்தால் முடிந்தது. 1767 ஆம் ஆண்டில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் சூறையாடப்பட்டதுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியில் நிகழ்ந்த சுரண்டல்கள் காரணமாக கம்பெனி திவாலாகியது. வெர்ஜீனியா, மாசசூசெட்ஸ், பெர்முடா, ஹொண்டுராஸ், அன்டிகுவா, பார்படோஸ், ஜமைக்கா மற்றும் நோவா ஸ்கொச்சியா ஆகியவற்றில் காலனிகளைக் கொண்டிருந்ததால் 1670 ஆம் ஆண்டளவில் பிரிட்டனின் பேரரசுவாத ஆர்வங்கள் அதிகரித்தன.
பிரான்சு
1814 ஆம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான முதலாம் காலனித்துவ பேரரசானது முடிவுக்கு வந்திருத்தது. இரண்டாவது காலனியாதிக்க பேரரசு ஆல்ஜீரியவை 1830 ஆம் ஆண்டு வென்றதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டவுடன் பெரும்பாலான காலனியாதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.[6] பிரான்சின் வரலாறு பெரியதும் சிறியதுமான பல போர்கள் மற்றும் உலகப் போர்களின் போது காலனித்துவ நாடுகளிலிருந்து பிரான்சிற்கு குறிப்பிடத்தக்க உதவிகள் கிடைத்தன.[7]
16 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸின் காலனித்துவத்தை அமெரிக்காவின் புதிய குடியேற்றம் மூலம் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டது
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு காலனியாதிக்க பேரரசானது பிரித்தானியப் பேரரசிசிற்கு அடுத்த படியாக இருந்தது. 12,347,000 கிமீ 2 (4,767,000 சதுர மைல்கள்) பரப்பளவில் விரிந்திருந்த பிரெஞ்சு காலனியாதிக்கம் உலக மக்கட்தொகையில் பத்தில் ஒரு பங்கினையும் இரண்டாம் உலகப்போரின் போது இது 110 மில்லியன் மக்கள் என்றளவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. ( இது உலக மக்கள் தொகையில் 5%).[8]
சப்பான்
1894 ஆம் ஆண்டில் முதல் சினோ-ஜப்பானியப் போரில் தைவான் உள்ளிட்ட நாடுகள் கைபற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் ரஷ்ய-ஜப்பானியப் போரை வென்றதன் விளைவாக, ஜப்பான் ரஷ்யாவின் சாகலின் தீவில் பங்கு பெற்றது. 1910 ஆம் ஆண்டில் கொரியா இணைக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜப்பான், சீனாவின் ஷாங்டோங் மாகாணத்திலும், மரினா, கரோலின், மார்ஷல் தீவுகள் ஆகியவற்றிலும் ஜேர்மனியின் குத்தகைக்குட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், பல்வேறு தீவுகளையும் நாடுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்க அழுத்தங்கள் காரணமாக சப்பான் ஷாங்டோங் பகுதியை சப்பான் திரும்ப ஒப்படைத்தது. 1931 ஆம் ஆண்டு சீனாவின் மஞ்சூரியன் பகுதியை சப்பான் கைப்பற்றியது.1937 ஆம் ஆண்டு சீன- ஜப்பானியப் போரின் போது ஜப்பானின் இராணுவம் மத்திய சீனாவை ஆக்கிரமித்ததுடன், பசிபிக் போரின் முடிவில் ஜப்பான், ஹாங்காங், வியட்நாம், கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தோனேசியா, நியூ கினி மற்றும் பசிபிக் பெருங்கடலின் சில தீவுகளையும் கைப்பற்றியது. கிழக்காசிய ஒத்துழைப்பு கோளத்தை உருவாக்கும் லட்சியத்தை சப்பான் பொண்டிருந்தது. இருப்பினும் 1945 ஆம் ஆண்டு வாக்கில் சப்பானின் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது.[9][10][11]
அமெரிக்கா
ஒரு முன்னாள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடாக பேரரசுவாத எதிர்ப்பி்னை வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா காலப்போக்கில் தனது கொள்கைகளிலிருந்து வலகி இன்று முக்கிய பேரரசுவாத சக்தியாக விளங்கி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், தியோடோர் ரூஸ்வெல்ட் மத்திய அமெரிக்காவில் செயல்படுத்திய தலையீட்டுக் கொள்கைகள் மற்றும் உட்ரோ வில்சன் அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டத்தில் "ஜனநாயகத்திற்காக உலகத்தை பாதுகாப்போம்" என்று முழங்கியது அமெரிக்காவின் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.[12][13][14] அமெரிக்கா பெரும்பாலும் இராணுவப் படைகளால் ஆதரவளிக்கப்பட்டு அவை திரைக்குப் பின்னால் இருந்து பெரும்பாலும் இயக்கப்பட்டன. வரலாற்று பேரரசுகளின் ஆதிக்கம் மற்றும் மேலாதிக்கத்தின் பொதுவான கருத்துடன் இது ஒத்திருக்கிறது. 1898 இல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அமெரிக்கர்கள் பிலிப்பைன்ஸிலும் கியூபாவிலும் பேரரசுவாத எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கினர்.[15] ்
2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 இராணுவ தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது.[16]
↑"சொல்". தீக்கதிர். 8 ஏப்ரல் 2012. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
↑"Imperialism." International Encyclopedia of the Social Sciences, 2nd edition.