இந்து சமயத்தின் வைணவப் பிரிவு சமூகத்தினர் இடையே ஸ்ரீதரன் என்ற பெயர் பரவலாகப் புழங்கும் பெயர்களுள் ஒன்று. இது விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு நாமங்களில் ஒன்பதாவது பெயர். குருக்ஷேத்திரப்போர் முடிந்தபின் பீஷ்மர் அரசன் யுதிஷ்டிரனுக்கு பல நீதிகளையும் சொல்லி முடிவில் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற அரிய தோத்திரத்தையும் சொல்லி வைக்கிறார். அதில் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் பட்டியலிடப்படுகின்றன. ஸ்ரீதரன் என்றபெயர் 610-வது பெயராக வருகிறது. அதில் ஶ்ரீ கிருஷ்ணரைஶ்ரீதரகிருஷ்ணா என்றும் ஶ்ரீதரா என்றும் கூறிப்பிட்டுள்ளார். இப்பெயர் 'லட்சுமி' தேவியைத் திருமால் தனது நெஞ்சில் தாங்குபவர் என்பது பொருள். தேவி என்றால் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பவள்.
'மணிக்கு ஒளி போலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்திற்குச்சுவை போலவும், இயற்கையாகவுள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியைச் சேர்ந்திருப்பவர்' என்று பராசர பட்டர் உரை எழுதுகிறார்.
எல்லா இந்து இலக்கியங்களிலும், குறிப்பாக நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்திலும் எல்லா வைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது. ஓரிரு எடுத்துக் காட்டுகள்:
திருப்பாணாழ்வார் இயற்றிய அமலனாதிபிரானில் [1] 'திருமகள் உறையும் மார்பே என்னை ஆட்கொண்டது' என்கிறார் ஆழ்வார். 'திருவுக்கும் திரு ஆகிய செல்வா'[2] என்று தொடங்கும் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் 'திருமார்பா' என்றே வடமொழிப் பெயர் 'ஸ்ரீதரா'வின் மொழிபெயர்ப்பாக அழைக்கிறார். நம்மாழ்வார்திருவாய்மொழி யில்[3] 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா'என்றே 'ஸ்ரீதரன்' என்ற சொல்லை விளக்குகிறார்.
"ஸ்ரீ" என்ற கிரந்த எழுத்திற்கு மாற்றாக சிரீ என்றும் சிறீ என்றும் தமிழ் நடையில் எழுதும் வழக்கம் உள்ளது. உதாரணமாக, ஸ்ரீதரன் என்பதை ஆழ்வார்கள் சிரீதரன் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கோள்கள்
↑ பிரபந்த எண் 931. அமலனாதிபிரான். நாலாயிர திவ்ய பிரபந்தம். நயவுரை: முனைவர் ஜெகத்ரட்சகன். 1997.
↑ பிரபந்த எண் 1608. பெரிய திருமொழி. நாலாயிர திவ்ய பிரபந்தம். நயவுரை: முனைவர் ஜெகத்ரட்சகன். 1997.
↑ பிரபந்த எண் 3559. நாலாயிர திவ்ய பிரபந்தம். நயவுரை: ஜெகத்ரட்சகன். 1997.