திருவாய்மொழித் திருவிழா

அத்யயணோற்சவம் அல்லது திருவாய்மொழித் திருவிழா அல்லது நாலாயிர திவ்யப்பிரபந்தத் திருவிழா என்பது வைணவத் திருத்தலங்களான திவ்வியதேசங்களில் கொண்டாடப்பெறும் விழாவாகும். சமஸ்கிருத வேதங்களுக்கு நிகராக ஆழ்வார்கள் இயற்றிய திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை முன்நிறுத்த இராமானுஜர் அவர்களால் இவ்விழா திருவரங்கத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பெற்றது. பின்பு அனைத்துத் திவ்ய தேசங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா மார்கழி மாதத்தில் பத்து நாள் விழாவாகக் கொண்டாப்படுகிறது.[1] வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'பகல் பத்து' அல்லது 'திருமொழித் திருநாள்' எனவும் வைகுண்ட ஏகாதசியை அடுத்த பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'இராப் பத்து' அல்லது 'திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.[2]

அயணங்களில் உத்தராயணம் தேவருலகின் பகற்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப்பொழுதாகவும் கணக்கிடப்படும். தை முதல் ஆனி முடிய உள்ள 6 மாத காலம் உத்திராயணமாகும். இதில் நமது ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு நாளாகும். உத்திராயணம் தை மாதம் துவக்கம் என்பதால் அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் (பகல் பொழுதுக்கு முன்பாக உள்ள) பிரம்ம முகூர்த்தம் எனப்படும் முகூர்த்த நேரம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். எனவே தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதத்தில் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தாளம் சேர்ந்த இன்னிசையுடன் இசைப்பது பலன் தருவது என்பதனால் இவ்விழா மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. இவ்வயண காலத்தில் இசைக்கப்படுவதால் இது அத்யயண உற்சவம் என அழைக்கப்பட்டது.

23 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் வளர்பிறை முதல்நாள் தொடங்கி முதல் பத்தாம் நாள்(தசமி) முடிய 10 நாள் விழாவிற்கு பகல் பத்து என்று பெயர். இதில் திருப்பல்லாண்டு முதலாயிரம், மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகிய இரண்டாயிரம் பாசுரங்கள் இசைக்கப்படும்.

தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு இராப் பத்து என்று பெயர். இதில் நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். இதற்கு மறுநாளான இருபத்தியோராவது நாள் ஏனைய ஆழ்வார்கள் இயற்றிய முதல், இரண்டு, மூன்று, நான்காம் திருவந்தாதிகள், திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, பெரிய திருமடல், சிறிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி முதலானவை அடங்கிய இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும்.[3]

காண்க

ஆதாரம்

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=687
  2. http://www.livermoretemple.org/hints/content/html/Adyayana%20UtsavamFlyer-2010.pdf
  3. நாலாயிர திவ்வியப் பிரபந்தம். சென்னை: திருவேங்கடத்தான் திருமன்றம். 1981. pp. முன்னுரைப்பக்கம்.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!