இந்து சமயத்தில்ருஷீகேசன் என்ற பெயர் காத்தல் கடவுளான விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பத்தாவது பெயராக வழங்கிவரும் சொல். பாரதப்போருக்குப் பின் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல்லி முடித்து முடிந்த முடிவாக கடவுளின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிடும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தோத்திரத்தை உபதேசித்தார். அதனில் 47-வது பெயராக வரும் சொல்தான் 'ருஷீகேசன்'. இது வடமொழியில் ஹ்ருஷீகேசன் எனப்படும்.
புலனமைப்பை ஆள்பவர்
ஹ்ருஷீகா என்ற வடமொழிச்சொல் மகிழ்வூட்டும் எதையும் குறிக்கும். மகிழ்ச்சி என்று பொருள் தரும் ஹர்ஷ என்ற சொல்லிலிருந்து வந்தது. குறிப்பாக இங்கு அச்சொல் மகிழ்வூட்டும் செவி, வாய், கண், காது முதலிய ஐம்பொறிகளையும் குறிக்கிறது. அவற்றின் உரிமையாளரும் அவற்றை ஆட்டுவிப்பவரும் ஜீவ வடிவிலுள்ள ஆண்டவனே. அவரது வசத்தில் பொறிகளனைத்தும் இயங்குகின்றன. கண்களில் ஆதவனாக, மனதில் மதியாக, இப்படிப்பல தேவதைகளாக இருந்து இயக்குபவர் ஆண்டவனே. இப்பொருள் மகாபாரதத்தில் மோட்ச தருமத்தில்[1] சொல்லப்பட்டிருக்கிறது.
ஒளிக்கதிர்களைத் தன்னுள் கொண்டவர்
சூரியன், சந்திரன் முதலிய ஒளிமண்டலங்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவரது விளக்கங்களே. இவைகளே உலகிற்கு ஒளியூட்டுகின்றன. இவைகளால் மகிழும் உலகு தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்து போவதும் இவைகளால் தான். இப்படி மகிழ்விக்கும் (ஹ்ருஷீ) ஒளிக்கதிர்களை (கேச) தன்னுரிமைப் பொருளாகக் கொண்டவர் ஆண்டவன். இப்பொருள் வேதத்திலிருந்தே கிடைக்கிறது.[2]