மூளையுறை அழற்சி (Meningitis) என்பது மனித மூளை மற்றும் முள்ளந்தண்டு வடம் ஆகியவற்றைச் சுற்றியிருக்கும் [தண்டுவட-மூளைச் சவ்வுகள் (meninges)[1]] பாதுகாப்புச் சவ்வுகளில் ஏற்படும் தீவிரமான அழற்சியைக் குறிக்கிறது. இத்தகு அழற்சி, தீ நுண்மங்களினாலோ, பாக்டீரியாக்களினாலோ, அல்லது பிற நுண்ணுயிரிகளினாலோ, அரிதாகச் சில மருந்துகளினாலோ உண்டாகலாம்[2]. மூளையுறை அழற்சியில் மூளை மற்றும் தண்டுவடத்திற்கருகில் அழற்சி ஏற்படுவதால் உயிருக்கு அபாயம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, இந்நிலை மருத்துவ நெருக்கடி நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது[1][3].
மூளையுறை அழற்சியின் பொதுவான அறிகுறிகளாக தலைவலி, கழுத்து விறைப்பு ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல், மனக்கலக்கம் அல்லது சுய நினைவு மாறுபடுதல், வாந்தி, வெளிச்சம், ஒலியைச் சகிக்கும் தன்மைக் குறைவு [ஒளியச்சம் (photophobia), ஒலியச்சம் (phonophobia)] ஆகியவற்றைக் கூறலாம். இந்நோயுள்ள குழந்தைகள் சாதரணமாக குறிப்பிடப்படாத நோய் உணர்குறிகளானஎரிச்சல், தூக்கக் கலக்கம் ஆகியவற்றை மட்டுமே வெளிப்படுத்தலாம். வங்குநோய் (சொறி) காணப்பட்டால் ஒரு குறிப்பிட்ட மூளையுறை அழற்சி நோய் உருவாகுவதற்கான காரணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதலாம்; உதாரணமாக, மூளையுறைமணிய பாக்டீரியாவினால் (meningococcal bacteria) உண்டாகும் மூளையுறை அழற்சியின்போது குறிப்பிடும்படியான சொறி நோய் வடிவம் காணப்படலாம்[1][4].
முதுகுத் தண்டுவட துளையிடுதல் சோதனை மூலமாக மூளையுறை அழற்சி உள்ளதா அல்லது இல்லையா எனத் தீர்மானம் செய்யப்படுகிறது. முள்ளியக்கால் வழியாக ஒரு ஊசி செலுத்தப்பட்டு மூளை, தண்டுவடத்தைச் சுற்றியுள்ள மூளை முதுகுத் தண்டுவட நீரின் (cerebrospinal fluid) பதக்கூறு பெறப்படுகிறது. மருத்துவ அறுதியீட்டு ஆய்வகங்களில் முதுகுத் தண்டுவட நீர் பரிசோதிக்கப்படுகிறது[3]. தீவிரமான மூளையுறை அழற்சிக்கான முதல் சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளோ, அல்லது சிலநேரங்களில் தீநுண்ம எதிர்ப்பிகளோ கொடுக்கப்படுகிறது. அழற்சியினால் ஏற்படும் அதிகப்படியான சிக்கல்களைக் களைய கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன[3][4]. உடனடியாகச் சிகிச்சையளிக்காவிட்டால், கேள்விக் குறைபாடு, கால்-கை வலிப்பு, மண்டை வீக்கம் (hydrocephalus), உணரறிவியக் குறைபாடுகள் (cognitive deficits) போன்ற கடுமையான நெடுங்கால விளைவுகள் மூளையுறை அழற்சியினால் ஏற்படுகின்றன[1][4]. பாக்டீரியா, தீநுண்மங்கள் மூலம் ஏற்படும் சில வகையான மூளையுறை அழற்சிகள் நோயெதிர்ப்புத்திறனூட்டல் மூலம் தடுக்கப்பட இயலும்[1]. மூளையுறை அழற்சியினால் 1990 - ல் ஏற்பட்ட 464,000 இறப்புகளைக் காட்டிலும் குறைவாக, 2013 - ல் 303,000 இறப்புகள் ஏற்பட்டன[5].
↑ 4.04.14.2van de Beek D, de Gans J, Tunkel AR, Wijdicks EF (January 2006). "Community-acquired bacterial meningitis in adults". The New England Journal of Medicine354 (1): 44–53. doi:10.1056/NEJMra052116. பப்மெட்:16394301.