சைட்டோக்கைன்கள் (அ) உயிரணுத் தொடர்பிகள்/செயலூக்கிகள் (Cytokines) என்பவைச் செல் சமிக்ஞைகளுக்குத் தேவைப்படும் சிறிய (~5–20 கிலோ டால்டன்) புரதங்களாகும். உயிரணுக்களால் வெளியிடப்படும் இப்புரதங்கள் பிற செல்களைப் பாதிக்கின்றன (பக்கச்சுரப்புத் தாக்கம்). சில நேரங்களில் இவை வெளியிடும் செல்களையும் பாதிப்படையச் செய்கின்றன (தன்சுரப்புத் தாக்கம்). உயிரணு இயக்கி/ஈர்ப்பிகள் (chemokines), தீநுண்ம எதிர்ப்பிகள், வெள்ளையணு தொடர்பி/செயலூக்கிகள் (Interleukines), நிணநீர்ச் செல் தொடர்பி/செயலூக்கிகள் (lymphokines), கழலை நசிவுக்காரணி போன்றவை சைட்டோக்கைன்கள் என்றாலும் பொதுவாக இவை இயக்குநீர்களோ (அ) வளர் காரணிகளோ இல்லை. நோயெதிர்ப்புச் செல்களான பெருவிழுங்கிகள், பி உயிரணுகள், டி உயிரணுகள் மற்றும் அடிநாட்டக்கலங்கள் (mast cells), அகவணிக்கலங்கள் (endothelial cells), நாரியற்செல்கள் (fibroblasts), இழையவலைச் செல்கள் (stromal cells) போன்ற பலவிதமான உயிரணுக்கள் சைட்டோக்கைன்களை உருவாக்குகின்றன; ஒன்றிற்கும் மேற்பட்டச் செல் வகைகள் ஒரு சைட்டோக்கைனை உருவாக்கலாம்[1][2][3].
நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் இன்றியமையாப் பணிகளை செய்யும் இப்புரதங்கள் உயிரணுக்களின் மேற்பரப்பிலுள்ள இவற்றின் ஏற்பிகள் மூலமாகச் செயற்படுகின்றன; தாதுசார் நோயெதிர்ப்புத்திறன் (humoral immunity), உயிரணுசார் நோயெதிர்ப்புத்திறன் (cell-mediated immunity) ஆகியவற்றிற்கிடையேயான சமநிலையை சைட்டோக்கைன்கள் ஒழுங்குப்படுத்துகின்றன. மேலும், குறிப்பிட்டச் செல்களின் முதிர்வு, வளர்ச்சி, ஏற்புத்தன்மை ஆகியவற்றை முறைப்படுத்துகின்றன. சில சைட்டோக்கைன்கள் சிக்கலான வழிமுறைகளில் பிற சைட்டோக்கைன்களின் செயற்பாட்டை அதிகரிக்கவோ, தடுக்கவோ செய்கின்றன[3]. பிற செல் சமிக்ஞை மூலக்கூறுகளான இயக்குநீர்கள் சுழல் பாய்மத்தில் மிகக் குறைவான செறிவு, குறிப்பிட்டச் சில செல் வகைகளால் உருவாக்கப்படுவது போன்ற காரணிகளால் சைட்டோக்கைன்களிலிருந்து வேறுபடுகின்றன.
உடல் நலம், நோய்வாய்ப்படுதல் ஆகிய இரண்டிலும் சைட்டோக்கைன்கள் இன்றியமையாப் பணிகளைக் கொண்டுள்ளது; குறிப்பாக நோய்த்தொற்றுக்கெதிரான ஒம்புயிரின் துலங்கல்கள், நோயெதிர்ப்புத் திறன்கள், அழற்சி, பேரதிர்ச்சி, இரத்த நச்சுப்பாடு (sepsis), புற்றுநோய், இனப்பெருக்கம் ஆகியவற்றைக் கூறலாம்.