தசை

தசை
எலும்புத் தசையின் விளக்கப்படம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்musculus
MeSHD009132
TA21975, 1994
FMA32558
உடற்கூற்றியல்

தசை (muscle) என்பது உடலிலுள்ள சுருங்கத்தக்க இழையம் ஆகும். தசைக் கலங்கள் ஒன்றின்மேல் ஒன்று நகரக்கூடியனவும், கலத்தின் அளவை மாற்றக்கூடியனவுமான இழைகளால் ஆனவை. இவை, எலும்புத்தசை/ வன்கூட்டுத் தசை, இதயத்தசை, மழமழப்பான தசை என மூன்றுவகையாக உள்ளன. இவற்றின் பணி விசையை உருவாக்கி இயக்கத்தைக் கொடுப்பதாகும்.

தசைகள், உயிரினத்தின் இடப்பெயர்ச்சிக்கு அல்லது அதன் உறுப்புக்களின் அசைவுக்குப் பயன்படலாம். இதயத் தசைகளிலும், மழமழப்புத் தசைகளிலும் நகர்வு தன்னியக்கமாக நடைபெறுகிறது. இது உயிரினத்தின் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாததாகும். இதயத்தின் துடிப்பும், சமிபாட்டுத் தொகுதியில் இடம்பெறும் அலைவியக்கமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். விருப்பத்தின் பேரில் சுருக்கி விரிக்கக்கூடிய எலும்புத் தசைகள் உடலை அசைப்பதற்கு அவசியமானவை. இவற்றைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும்.

தசைகளின் வகைகள்

தசைகள் இடைத்தோற்படை/ இடைமுதலுருப்படை உற்பத்திக்குரியன. தசைகள் அவற்றின் சுருங்கித் தளரும் இயல்பு காரணமாகத் தொழிற்படுகின்றன. தசைநார்களில் தசைமுதலுரு எனப்படும் விசேட குழியவுரு உள்ளது. தசைகளில் சிலவற்றை நம் இச்சைக்கமைய கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக கை, கால், வாய், நாக்கு, பிரிமென்றகடு போன்றவற்றிலுள்ள வன்கூட்டுத் தசைகளை நம் விருப்பத்துக்கேற்றபடி கட்டுப்படுத்தலாம். மழமழப்பான தசையையும், இதயத் தசையையும் நம் இச்சைக்கேற்றபடி கட்டுப்படுத்த முடியாது. இவை சுயமாக சுருங்கித் தளரும் இயல்புடைய தசையிழையங்களாகும்.

கலச்சுவாசத்தில் கார்போவைதரேட்டு மற்றும் கொழுப்பை முழுமையாக ஆக்சிசனைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றுவதன் மூலம் கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தி தசைக்கலங்கள் வேலை செய்கின்றன. எனினும் உடல் அதிக ஆக்சிசன் பயன்படுத்தும் போது (உதாரணமாக மிகப்பழுவான உடற்பயிற்சியின் போது) தசைக்கலங்களுக்கான ஆக்சிசன் கிடைக்குமளவு குறைவடையும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தசைக்கலங்கள் காற்றின்றிய சுவாசத்தைப் பயன்படுத்தியும் சக்தியைப் பெற்றுக்கொள்ளும்.

தசைக்கலங்களின் சுருக்கத் தளர்வில் அக்தின், மயோசின் ஆகிய இரு முக்கிய புரதங்கள் பங்கு கொள்கின்றன. பொதுவாக தசையிழைங்களுக்கு நல்ல குருதி விநியோகமும் நரம்பு விநியோகமும் இருக்கும். எனினும் இதயத் தசை வழமையாக நரம்புகளால் தூண்டப்படுவதில்லை.

உடற்கூற்றியல்

தசையிழையின் வகைகள்

தசையிழையம் விலங்குகளின் பிரதான நான்கு வகை இழையங்களுள் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து முள்ளந்தண்டுளிகளிலும் மூன்று வகையான தசையிழையங்கள் உள்ளன.

  • வன்கூட்டுத் தசையிழை (அ) வரியுடைத்தசைகள்
  • மழமழப்பான தசை (அ) மென்தசையிழை (அ) வரியற்றத்தசைகள்
  • இதயத் தசையிழை

வன்கூட்டுத் தசைகளிலும், இதயத்தசையிலும் தசை நார்களைச் சூழ குறுக்கு வரிகள் உள்ளன.

வன்கூட்டுத் தசை

வன்கூட்டுத் தசையிழையம்

வன்கூட்டுத் தசையிழையமானது நமது இச்சையால் கட்டுப்படுத்தக்கூடிய தசையிழையங்கள். எலும்புகளுடன் தசை நாண்களினால் பிணைக்கப்பட்டுள்ளதால் இது எலும்புத்தசையிழையம் எனவும் வழங்கப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தியே நம் நினைவுக்குட்பட்ட காரியங்களைப் புரிகின்றோம். சில வேளைகளில் இச்சையின்றிய வழியிலும் தூண்டப்படலாம்.

தசைக்கலங்கள் ஒன்றாக அடுக்கப்பட்டு தசைநார்க்கட்டை ஆக்கும்.[1] முழுவளர்ச்சியடைந்த மனித ஆணின் நிறையில் 42% வன்கூட்டுத் தசையாகும். பெண்களில் 36% ஆகும். இவ்விழையம் நீண்ட, உருளை வடிவான கிளைகளற்ற கலங்களாலானது. ஒவ்வொரு கலத்திலும் சுற்றயலுக்குரிய பல கருக்கள் உள்ளன.

வன்கூட்டுத் தசை நார்களைச் சூழ குறுக்கு வரிகள் பல உள்ளன. இத்தசையை மண்டையோட்டு மற்றும் முன்னாண் நரம்புகளால் கட்டுப்படுத்தலாம். இத்தசைகள் மூலம் பலம் பொருந்திய விரைவான சுருக்கத்தை ஏற்படுத்தி விரைவான அசைவை ஏற்படுத்தலாம். இத்தசைகள் அனுசேப சக்தியைப் பயன்படுத்திச் சுருங்கித் தளரும் போது இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள எலும்புகளும் அசையும். இதன் மூலம் குறிப்பிட்ட அங்கத்தை நம் இச்சைப்படி அசைக்கலாம். இத்தசை விரைவான அசைவுக்குச் சிறத்தலடைந்திருந்தாலும், இவை விரைவில் ஆற்றலை இழந்து களைப்படையக்கூடியன.

தசை நார்களும், தசை நார்க்கட்டுக்களும் சிற்றிடைவெளித் தொடுப்பிழையங்களால் மூடப்பட்டுள்ளன. இவை அக, சுற்று மற்றும் மேல்த் தசையங்களாக உள்ளன. ஒவ்வொரு வன்கூட்டுத் தசை நார்க்கலத்தினுள்ளும் பல தசைப்புன்னார்கள் உள்ளன. மனித உடலில் கிட்டத்தட்ட 650 வன்கூட்டுத் தசைகள் உள்ளன.

மழமழப்பான தசை

நினைவுக்கு உட்படாத அனிச்சை அசைவுகளை ஏற்படுத்த மழமழப்பான தசைகள் உதவுகின்றன. களம், இரைப்பை, குருதிக் குழாய்கள், குடல், சிறுநீர்ப்பை, கருப்பை, சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் மழமழப்பான தசைகள் உள்ளன. இத்தசைகள் செயற்படுவது நம் நினைவுக்கு உட்படாத செயற்பாடாக இருக்கும்.

உதாரணமாக குடலினுள் உணவு, நீர் கொண்டு செல்லப்படுதலும், உடல் வெப்பநிலைக்கேற்ப குருதிக் குழாய்கள் சுருங்கி விரிவதும் நம் நினைவுக்குட்படாத அசைவுகளாகும். இவ்விழையம் தனித்தனியான கதிர்வடிவமான கலங்களாலானது. கலங்கள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு கலத்திலும் ஒரு கரு மத்தியில் காணப்படும். மழமழப்பான தசையால் மெதுவான நீடித்த சுருக்கத்தை வழங்க முடியும். இவ்விழையம் மெதுவாகவே களைப்படையும்.

இதயத் தசை

இதுவும் மழமழப்பான தசை போல அனிச்சை சுருங்கல், தளர்வை ஏற்படுத்தும் தசை வகையாகும். இது இதயத்தில் மாத்திரமே உள்ளது. இதயத் தசை கிளை கொண்ட, குறுகிய, உருளை வடிவக் கலங்களாலானது. கலங்களுக்கிடையே இடைபுகுந்த வட்டத்தட்டு காணப்படும்.

ஒவ்வொரு கலத்திலும் ஒரு கரு உள்ளது. இதயத்தசையில் வன்கூட்டுத் தசையைப் போல குறுக்கு வரிகள் உள்ளன. இதன் சுருக்கங்கள் நரம்புகளினால் தூண்டப்படாவிட்டாலும் இதனுள் ஊடுருவி உள்ள தன்னாட்சி மற்றும் பரிபரவு நரம்புகளினா இதயத் தசைச் சுருக்கத்தைக் கூட்டிக் குறைக்க முடியும். உதாரணமாக வேகமாக ஓடும் போது இந்நரம்புகளால் இதயத் தசை வேகமாகச் சுருங்கத் தூண்டப்படுகின்றது.

அதிரினலீன் போன்ற ஓமோன்களாலும் சுருக்க வேகத்தை மாற்ற முடியும். இதயத் தசை ஒரு போதும் களைப்படைவதில்லை- இவ்வியல்பு இதயத் தசையின் சிறப்பியல்புகளுள் குறிப்பிடத்தக்கதாகும்.

தசை வகைப்பாடு

தசையானது தசையிழைகளின் அடிப்படையிலான வகைப்படுத்தல் மட்டுமின்றி, அமைப்பு, செயல்திறன், இருப்பிடம் ஆகியனவற்றின் அடிப்படையில் தசைகள் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. [2]

அளவு

  • பெருந்தசை (அ) மேஜர்
  • சிறுதசை (அ) மைனர்
  • நீள்தசை (அ) லாங்கஸ்
  • அகன்றதசை (அ) லாட்டிஸ்மஸ்

தசை முனைகள்

  • இருதலைத் தசைகள் (அ) பைசப்ஸ்
  • முத்தலைத் தசைகள் (அ) ட்ரைசப்ஸ்
  • நான்குதலைத் தசைகள் (அ) குவாட்ரிசெப்ஸ்

இயக்கம்

  • நீட்சித்தசை (அ) எக்ஸ்டென்சார்
  • மடக்குத்தசை (அ) ப்ளெக்சார்
  • சுருக்குத்தசை (அ) கன்ஸ்டிரிக்டர்

பரப்பு நிலை

  • மேல் பரப்புத்தசை (அ) சூப்பர்பிசியாலிஸ்
  • உட்பரப்புத்தசை (அ) இன்டர்னஸ்
  • ஆழத்தசை (அ) புரோபன்டஸ்

வடிவம்

  • முக்கோணத்தசை (அ) டெல்டாயிடு
  • நாற்கோணத்தசை (அ) குவாடிரேட்டஸ்
  • மெலிந்த தசை (அ) கிரேசிலிஸ்

தசை நுண்கட்டமைப்பு

வன்கூட்டுத் தசையின் நுண்கட்டமைப்பு

வன்கூட்டுத் தசையின் நுண்கட்டமைப்பு
மேலே தளர்வான தசையின் தசைப்பாத்து. கீழே சுருக்கமடைந்துள்ள தசையின் தசைப்பாத்து. தசைப்பாத்து சுருங்கும் போது Z பட்டிகள் அருகருகே அசைகின்றன; I பட்டிகள் சுருக்கமைகின்றன.

வன்கூட்டுத் தசைகளின் அடிப்படை கட்டமைப்பலகு தசை நார்க்கலங்களாகும்.

ஒவ்வொரு தசை நார்க்கலமும் கிட்டத்தட்ட 35 cm நீளமும் 100 μm விட்டமும் உடைய கலங்களாகும். தசை நார்கள் பொதுமைக்குழிய அமைப்பை உடையன. ஒவ்வொரு தசை நார்க்கலத்திலும் பல கருக்கள் உள்ளன. இவை தசை நாரிற்கு சுற்றயலாக நாருறையினுள் (கல மென்சவ்வு) உள்ளன.[3] தசைக்கலங்களின் கருக்கள் தட்டையானவையாக உள்ளன. நீண்ட கலத்தினுள் சீராக மரபணுத் தகவல் பரம்பலடைவதற்காகவே இவ்வாறு அதிகளவில் கருக்கள் உள்ளன.

குழியவுருவில் (தசை முதலுருவில்) ஏராளமான இழைமணிகளும், கிளைக்கோஜன் சிறுமணிகளும் உள்ளன. ஒக்சிசனை சேமிக்கக்கூடிய மயோகுளோபின் நிறப்பொருள் உள்ளது. Ca2+ சேமிப்புக்காகச் சிறத்தலடைந்த தசைமுதலுருச் சிறுவலைகளும் தசை நார்க்கலத்தினுள் தசைச்சிறுநார்களைச் சூழ உள்ளன. தசைக் கலங்கள் நரம்பிலிருந்து வரும் கணத்தாக்கத்துக்கமைய செயற்பட Ca2+ அயன் இன்றியமையாததாகும். வன்கூட்டுத் தசை நார்க்கலம் ஒன்றினுள் பல தசைச்சிறுநார்கள் உள்ளன. இவற்றின் இரு Z பட்டிகளுக்கிடைப்பட்ட பிரதேசம் தசைப்பாத்து எனப்படும்.

இதுவே வன்கூட்டுத் தசையின் தொழிற்பாட்டலகாகும். இத்தசைப்பாத்தினுள் உள்ள மெல்லிய அக்தின் இழைகள் மற்றும் தடிப்பான மயோசின் இழைகளின் அசைவினாலேயே தசைச் சுருக்கம் மற்றும் தளர்வு ஏற்படுத்தப்படுகின்றது. தசைச் சுருக்கத்தின் போது மெல்லிய அக்தின் இழை தடித்த இழையின் மேல் நகர்ந்து H வலயம் சுருக்கமடையும். இவ்வாறு ஆயிரக்கணக்கான தசைப்பாத்து அலகுகளில் ஏற்படும் அசைவால் முழுத் தசையின் அசைவு தோற்றுவிக்கப்படுகின்றது. தசை அசைவில் கல்சியம் அயன்களை பம்புவதற்கும் புரத இழைகளை அசைப்பதற்கும் ATP வடிவில் சக்தி தேவைப்படுகின்றது.

சிறிய களைப்பை ஏற்படுத்தாத அசைவுகளின் போது சக்தியை உற்பத்தி செய்ய இழைமணியில் காற்றுள்ள சுவாசம் நிகழ்த்தப்பட்டு குளுக்கோசு அல்லது கொழுப்பமிலம் முழுமையாக ஒக்சியேற்றப்படுகின்றது. மிகவும் பழுவான உடற்பயிற்சிகளின் போது ஆக்சிசன் தட்டுப்பாடடைவதால் காற்றின்றிய சுவாசமும் மேற்கொள்ளப்படும்.

உடற்செயலியல்

தசைகளின் பணிகள்

  • இச்சைக்குட்பட்ட (அ) தன்னிச்சையான இடம் பெயர்தல்.
  • எலும்புகளின் நிலைத்தன்மை, இதர உடல் உறுப்புகளின் பாதுகாப்பு.
  • குருதி மண்டலத்தின் செயற்பாட்டிற்கு இதயத்தசை சுருங்கி விரிவதன் மூலம் சுழற்சி சீராக இருக்க உதவுகிறது.
  • மென்தசைகள் பெரும்பாலான உள்ளுறுப்புகளின் இயக்கத்திற்கு உதவுகிறது. சுவாசம், சமிபாடு, கழிவு, பார்வை போன்ற முக்கியப்பணிகளில் மென்தசைகளின் பணி இன்றியமையாதது.[4]

ஆற்றல் நுகர்வு

உயிரினங்களின் அசைவானது தசைகளின் இயக்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. தசைகளின் உயிரணுக்கள் அடினோசின் முப்பொசுபேற்றை (ATP) உற்பத்தி செய்கின்றன. இவை மயோசின் புரதத்தை அசைக்கும் சக்தியளிக்கிறது.

நரம்புத்தொகுதியின் கட்டுப்பாடு

வெளிசெல்லும் புறநரம்புத் தொகுதியின் தசைக்கட்டுப்பாடு

தசை, உடல் உறுப்புகளுக்கு புறநரம்புத் தொகுதியின் வெளிச்செல் நரம்புகள் மூளை பிறப்பிக்கும் கட்டளைகளைக் கடத்துகின்றன. இதன் மூலம் தசைகளின் இயக்கத்தை மூளை கட்டுப்படுத்துகிறது.

உட்செல் புறநரம்புத் தொகுதியின் தசைக்கட்டுப்பாடு

தோல் உள்ளிட்ட பிற தொடு உணர் உறுப்புகளிலிருந்து மூளைக்கு தகவல்களைக் கொண்டு செல்வதன் மூலம் இவுட்செல்லும் புற நரம்புத்தொகுதியானது தசைகளின் இயக்கம் மற்றும் செயல்களைத் தூண்டுதல் மூலம் அனிச்சையாக்குகின்றன.

உடல் நலம்

உடற்பயிற்சி

உடல்நிலையையும், உடல் நலத்தையும் மேம்படுத்த உதவும் உடற்செயல்பாடு உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சிக்கு தசைகளின் இயக்கம் இன்றியமையாததாகும். தசைகள் அதிகப் பயிற்சியின் மூலம் முறுக்கேறுகின்றன. இதனால் அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளும் இருபாலரும் கட்டுடல் வனப்பும், வலுவானத் தசை அமைப்பும் பெறுகின்றனர்.

நோய்கள்

தசைக் களைப்பு (அ) தசைச்சோர்வு

தசைக் களைப்பு (அ) மயஸ்தீனியா கிராவிஸ் [5] என்பது நரம்பு மற்றும் தசை சார்ந்த நோயாகும். தசைக்களைப்பானது முக்கிய வேளை நேரங்களில் களைப்படைந்து, ஓய்வு நேரங்களில் அதீத மேம்பாடு அடைவனவாகும். இதனால் தசைப்பகுதி பலவீனமடைகிறது. இது கண்ணசைவு, உணவு விழுங்கல், மெல்லுதல், பேசுதல் போன்ற முக்கிய உடற்பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தசை வீக்கம்

தசை வீக்கம் (அ) மயோசைடிஸ் என்பது புறக்காரணிகளால் தசையில் ஏற்படும் அழற்சி, வலியுடன் கூடிய, செல் பெருக்கமில்லாத வீக்கம் (அ) புடைப்பு ஆகும்.

பரிணாம வளர்ச்சி அல்லது கூர்ப்பு

தாவரங்களிலிருந்து விலங்கினங்கள் வேறுபடுவதே அதன் விரைவான தசை இடம்பெயர்வு முறைமை ஆகும். இவ்விடம்பெயர்வே அதன் முக்கிய தேவைகளான உணவு, உறைவிடம், இனப்பெருக்கம் போன்ற காரணிகளால் அவைகளின் பரிணாம வளர்ச்சிக்கு அடிகோலியிருக்கிறது.[6]

தசைகளின் பரிணாம வளர்ச்சியானது விலங்குகளின் பரிணாம மாற்றத்தின் அடிப்படையாக இருந்திருக்கக் கூடும். குறிப்பாக முதுகெலும்புள்ளவைகளில் வலுத்தசைகள் மற்றும் மெல்லிய தசைகளின் கூர்ப்பு புதிரானதாகவே உள்ளது. சான்றாக, பன்னாட்டு அறிஞர் குழுமத்தால் {[பாட்ரிக் ஸ்டெய்ன்மெட்ஸ் (Patrick Steinmetz), ஜொஹன்ன க்ராஸ் (Johanna Kraus) மற்றும் அல்ரிச் டெக்னவ் (Ulrich Technau) போன்றோர்]} விலங்குகளின் மரபணுத்தொகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் சார்பாக தசையிழையின் பரிணாமத்தில் கடற் சாமந்தி, ஜெல்லி மீன், மற்றும் கடற்பஞ்சுகளின் தசைத்தொகுப்பு பலசெல் உயிரிகளின் சிறந்த ஒப்பீடாக உள்ளது.[7]

மனிதரில் தசைத்தொகுதி

தசைத் தொகுதி என்பது ஒரு தனி மனித உடலில் காணப்படும் அனைத்துத் தசைகளினதும் கூட்டான அமைப்பாகும். மனித உடலில் அண்ணளவாக 650 வன்கூட்டுத் தசைகள் உள்ளன[8] எனக் கூறப்படுகிறது. ஆயினும் மிகச் சரியான எண்ணிக்கையைக் கூறுவது கடினம். பொதுவாகத் தசைகளின் தொழிற்பாடு அசைவுக்கு உடந்தையாக இருத்தல். இந்தத் தொழிலுக்கு எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், மற்றும் அசைவுக்குத் தேவையான ஏனைய அமைப்புக்கள் அனைத்தும் சேர்ந்து இயங்க வேண்டும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. MacIntosh, BR; Gardiner, PF; McComas, AJ (2006). "1. Muscle Architecture and Muscle Fiber Anatomy". Skeletal Muscle: Form and Function (2nd ed.). Champaign, IL: Human Kinetics. pp. 3–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7360-4517-1.
  2. http://www.innerbody.com/image/musfov.html
  3. Marieb, EN; Hoehn, Katja (2010). Human Anatomy & Physiology (8th ed.). San Francisco: Benjamin Cummings. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8053-9569-3.
  4. "5 Functions of the Muscular System". பார்க்கப்பட்ட நாள் 9 மே 2017.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-10-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
  6. https://www.sciencedaily.com/releases/2012/06/120628145626.htm
  7. http://www.en.uni-muenchen.de/news/newsarchiv/2012/2012_woerheide.html
  8. Poole, RM, ed. (1986). The Incredible Machine. Washington, DC: National Geographic Society. pp. 307–311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87044-621-5.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!