தருமர்அந்தணர் வடிவத்தில் கங்கன் எனும் பெயரில் விராட மன்னரின் அரசவை உறுப்பினராகவும் மற்றும் விராடனுடன் சொக்கட்டான் மற்றும் சதுரங்கம் ஆடும் பணியிலும் சேர்ந்தார்.[1][2]
பாண்டவர்களின் வனவாசத்தின் 13வது ஆண்டு நிறைவுறும் காலத்தில், பாண்டவர்கள் விராட நாட்டில் தலைமறைவாக இருப்பதை ஒற்றர்கள் மூலம் உணர்ந்த துரியோதனன், விராட நகரத்திலிருந்து பாண்டவர்களை குறிப்பாக அருச்சுனனை வெளிக் கொணர, கர்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் தலைமையில் பெரும்படையுடன் விராட நாட்டின் எல்லையில் மேய்ந்து கொண்டிருந்த ஆநிரைகளை கவர்ந்தனர்.
இச்செய்தி இடையர்கள் மூலம் விராட மன்னருக்குச் சென்ற போது, கௌரவரப் படைகளை எதிர்கொள்ள, தன் சிறு வயது மகன் உத்தரனை அனுப்ப முயற்சிக்கையில், உத்தரனின் தேரோட்டியாக பிருகன்னளையை நியமிக்க சைரந்திரி வேண்டுகோள் விடுத்த யோசனையை கங்கனும் ஆமோதித்தார்.
போர்க் களத்தில் கௌரவர்களைக் கண்ட உத்தரன் நடுக்கம் கொண்டான். எனவே உத்தரன் தோரோட்ட, பிருகன்னளை, பீஷ்மர் முதலான கௌரவர்களை வென்று, விராட நகரத்திற்குத் திரும்பும் போது பிருகன்னளை தேரோட்டிக் கொண்டு வந்தார்.
கங்கனின் நெற்றிக் குருதி
போரில் தன் மகன் உத்தரன் வெற்றி பெற்றதாக கருதி, உத்தரனைப் புகழ்ந்தும், பிருகன்னளையைத் தாழ்த்தியும் பேசிய விராட மன்னரை நோக்கி கங்கன், உண்மையில் போரில் வென்றது பிருகன்னளை எனக் கூற, கடுஞ்சினத்துடன் விராட மன்னர் கங்கன் மீது சொக்கட்டான் காய்களை வீசி எறிந்தார். காய்கள் கங்கனின் நெற்றியில் பட்டு, குருதி நிலத்தில் விழும் வேளையில், சைரந்திரி தன் சீலைத் தலைப்பால் தருமரின் குருதி நிலத்தில் விழாது பிடித்துக் கொண்டாள்.
இச்செயலைக் கண்டு வியந்த விராடன், ஏன் குருதியை நீ கீழே விழாவண்ணம் சேலைத் தலைப்பால் தாங்கினாய் எனக் கேட்டதற்கு, சைரந்திரி கங்கன் உண்மையில் பாண்டவர்களில் மூத்தவனான தருமர் எனும் உண்மையைக் கூறினாள். தருமரின் இரத்தம் விராட அரண்மனையில் சிந்தினால், அவரது உடன்பிறப்புகள் விராட நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பதால், குருதியைச் சேலைத் தலைப்பில் பிடித்துக் கொண்டேன் எனக் கூறினாள்.
விராடன் தன் தவறை உணர்ந்து கங்கனிடம் (தருமரிடம்) மன்னிப்புக் கோரினார். பின் மாறுவேடத்தில் மற்ற பாண்டவர்களான வீமன் முதலானவர்கள் விராட அரண்மனையில் தங்கியிருப்பதை கங்கர் மூலம் விராடன் அறிந்து கொண்டு, அனைவருக்கும் உரிய சிறப்புகள் செய்தான்.