அந்தணரையும் பார்ப்பாரையும் இன்றைய பொதுமக்கள் ஒரே இனத்தவர் எனக் கொள்கின்றனர். பண்டைய இலக்கியங்கள் இவர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
அந்தணர்
அந்தணர், அந்தணாளர், மறைகாப்பாளன் என்னும் சொற்கள் ஒருசார் மக்களைக் குறிப்பன.
- அந்தணர் அசை போடுவர். தலைவனுடன் செல்லும் தலைவி தான் செல்வதைத் தன் தாய்க்குச் சொல்லுமாறு அந்தணரை வேண்டுகிறாள். [1]
- அந்தணர் அறம் செய்யச்சொல்லும் வேதம் ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர். [2]
- அந்தணர் வெயிலுக்குக் குடை பிடித்துக்கொண்டு செல்வர். ஒரு கையில் தொங்கும் சொம்பாகிய கரகம் எடுத்துக்கொண்டு செல்வர். மற்றுரு கையில் முக்கோல் வைத்திருப்பர். தோளை அசைத்துக்கொண்டு கொளைநடை (குந்து நடை) போட்டுக்கொண்டு செல்வர். குறிப்பறிந்து உதவுவர்.[3]
- மறைகாப்பாளர் ஆபுத்திரனைத் துன்புறுத்திய கதை ஒன்று உண்டு. [4]
- அந்தணன் எரிதீயை வலம்வருவான். [5]
- முருகன் ‘அந்தணர் வெறுக்கை’ (அந்தணர் செல்வம்) எனப் போற்றப்படுகிறான். [6]
- மதுரையில் இருந்த அந்தணர் தெருவில் மலையைக் குடைந்தது போன்ற மாடி வீடுகளில் அந்தணர் வாழ்ந்தனர். அவர்கள் வேதத்தை விளங்கும்படி பாடுவர். விழுமிய ஒழுக்கம் உடையவர்கள். இந்த உலகத்திலேயே உயர்நிலை உலகம் எய்தியவர். அறநெறி பிறழாதவர்கள். அன்பு நெஞ்சம் கொண்டவர்கள். [7]
- பார்ப்பான், அந்தணர் வேறுபாடு
பார்ப்பனர்
பார்ப்பனரையும் அந்தணரையும் திருக்குறள் வேறுபடுத்திக் காட்டுகிறது.
- பார்ப்பானரின் பிறப்பொழுக்கம் வேதம் ஓதுதல், நேரம் மற்றும் நாள் பார்த்தல். [8]
- அறவழியில் வாழ்வோர் அனைவரும் அந்தணர். செந்தண்மை என்பது செவ்விய ஈரம். புன்செய் உழவுக்கு ஏற்ற நிலத்து ஈரம். அந்தணர் மற்றவர்களுக்கு உதவும் வகையில் பூண்டொழுகும் ஈரம் இப்படிப்பட்டது. இந்தச் செந்தண்மைதான் ‘அந்தண்மை’. இப்படிப்பட்ட செந்தண்மை பூண்டு வாழ்பவர் அந்தணர். [9]
- பார்ப்பனர் என்பது பிறப்பால் வரும் பெயர். அந்தணர் என்பது நடத்தையால் வரும் பெயர். அந்தணரைத் திருக்குறள் நீத்தார் எனக் குறிப்பிடுகிறது.
காண்க
அடிக்குறிப்புகள்
- ↑ அசைநடை அந்தணார் – ஐங்குறுநூறு 384
- ↑ அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம் புரி கொள்கை அந்தணிர் – ஐங்குறுநூறு 387
- ↑
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
செறிப்படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர் – கலித்தொகை 9
- ↑ மணிமேகலை 13 ஆபுத்திரன் திறம் கேட்ட காதை
- ↑ கலித்தொகை 69-5
- ↑ திருமுருகாற்றுப்படை 263
- ↑
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நுலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளி
- ↑ மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். திருக்குறள்.
- ↑ அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள்