2 மில்லியன் பொதுமக்கள் போரின் காரணமாக ஏற்பட்ட வறட்சி மற்றும் பஞ்சத்தாலும், பிளேக் நோயாலும் இறந்தனர்.
முகலாய-மராத்தியப் போர்கள் அல்லது தக்காணப் போர்கள் (Mughal–Maratha Wars or Deccan War or The Maratha War of Independence), முகலாயப் பேரரசுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1680-ஆம் ஆண்டு முதல் 1707-ஆம் ஆண்டு முடிய 27 ஆண்டுகள் நடைபெற்ற போர்களைக் குறிக்கும். இப்போர்கள் பெரும்பாலும் தக்காணப் பீடபூமியில் நடைபெற்றதால் தக்காணப் போர்கள் என்றும் மற்றும் தக்காணத்தில் மராத்தியர்கள் தன்னாட்சி நாட்டை அமைப்பதற்கான போர்கள் என்றும் அழைப்பர்.
முகலாயப் பேரரசின் தக்காணத் தலைமையகமான அவுரங்காபாத்தை அவுரங்கசீப் மாற்றினார். தக்காணத்தில் முகலாயப் படைகள் சுமார் 5,00,000 பேர் இருந்தனர்.[10]1681-ஆம் ஆண்டின் இறுதியில், முகலாயப் படைகள் நாசிக் நகரத்திற்கு வடமேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்சேஜ் கோட்டையை[11] முற்றுகையிட்டன. ஆனால் மராத்தியர்கள் இந்தத் தாக்குதலுக்கு அடிபணியவில்லை. இருப்பினும் முகலாயர்கள் ராம்சேஜ் கோட்டையைக் கைப்பற்ற ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.[12]
டிசம்பர் 1681 இல், சம்பாஜி, தற்கால ராய்கட் மாவட்டத்தின்ஜாஞ்சிராவைத் தாக்கினார், ஆனால் அவரது முதல் முயற்சி தோல்வியடைந்தது. அதே நேரத்தில் அவுரங்கசீப்பின் தளபதிகளில் ஒருவரான உசைன் அலி கான் வடக்கு கொங்கனைத் தாக்கினார். சாம்பாஜி ஜாஞ்சிராவை விட்டு வெளியேறி உசேன் அலி கானைத் தாக்கி அகமதுநகருக்குத் தள்ளினார். அதே நேரத்தில் ஔரங்கசீப் போர்த்துகீசியர்களின் வர்த்தகக் கப்பல்கள் கோவாவில் தங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயன்றார். இது கடல் வழியாக தக்காணத்திற்கு மற்றொரு விநியோக வழியைத் திறக்க வழிவகை செய்யும். இந்தச் செய்தி சாம்பாஜிக்கு எட்டியது. அவர் போர்த்துகீசியப் பகுதிகளைத் தாக்கி அவர்களை மீண்டும் கோவா கடற்கரைக்குத் தள்ளினார். இதற்குள் தக்காணத்தின் எல்லையில் பெரும் முகலாயப் படைகள் குவியத் தொடங்கிவிட்டன. தென்னிந்தியா ஒரு பெரிய, நீடித்த மோதலை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.
1683-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஔரங்கசீப் அகமதுநகருக்கு குடிபெயர்ந்தார். அவர் தனது படைகளை இரண்டாகப் பிரித்து, தனது இரு இளவரசர்களான ஷா ஆலம் மற்றும் ஆசம் ஷா ஆகியோரை ஒவ்வொரு பிரிவிற்கும் பொறுப்பாளராக நியமித்தார். ஷா ஆலம் கர்நாடக எல்லை வழியாக தெற்கு கொங்கனைத் தாக்க இருந்தார், அதே நேரத்தில் ஆசம் ஷா காந்தேஷ் பிரதேசம் மற்றும் வடக்கு மராட்டியப் பகுதியைத் தாக்குவார். பின்னர் இந்த இரண்டு பிரிவுகளும் மராட்டியர்களை தெற்கு மற்றும் வடக்கில் இருந்து சுற்றி வளைத்து அவர்களை தனிமைப்படுத்த திட்டமிட்டனர். இத்திட்டத்தின் துவக்கம் சரியாகச் சென்றது. ஷா ஆலம் கிருஷ்ணா ஆற்றைக் கடந்து பெல்காமுக்குள் நுழைந்தார். அங்கிருந்து கோவாவிற்குள் நுழைந்து கொங்கன் வழியாக வடக்கே அணிவகுத்துச் செல்லத் தொடங்கினார். அப்போது அவர் தொடர்ந்து மராட்டிய படைகளால் தாக்கப்பட்டார். மராத்தியப் படைகள் முகலாயப் படைகளின் விநியோகச் சங்கிலிகளைக் கொள்ளையடித்து, அவருடைய படைகளை பட்டினிக்குக் உள்ளாக்கினர். இறுதியாக ஔரங்கசீப் ருஹுல்லா கானை மீட்டு அஹமத்நகருக்கு அழைத்து வந்தார்.
1684-ஆம் ஆண்டின் பருவமழைக்குப் பிறகு, அவுரங்கசீப்பின் படைத்தலைவர் ஷாபுதீன் கான், மராட்டிய தலைநகரான ராய்கட் கோட்டையை நேரடியாகத் தாக்கினார். மராட்டியப் படைத்தலைவர்கள் ராய்காட் கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்தனர். போரில் ஷாபுதீன் கானுக்கு உதவியாக ஔரங்கசீப், படைத்தலைவர் கான் ஜெஹானை உதவிக்கு அனுப்பினார். ஆனால் மராட்டியப் படையின் தளபதியான ஹம்பிராவ் மோஹிதே, பட்டாடியில் நடந்த கடுமையான போரில் அவரை தோற்கடித்தார். மராட்டியப் படையின் இரண்டாம் பிரிவு பச்சாட்டில் ஷாபுதீன் கானைத் தாக்கி, முகலாயப் படைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
1685-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஷா ஆலம் மீண்டும் தெற்கே தார்வாடு வழியாகத் தாக்கினார், ஆனால் சம்பாஜியின் படைகள் அவரை வழியில் தொடர்ந்து துன்புறுத்தியது. ஏப்ரல் 1685-ஆம் ஆண்டில், ஔரங்கசீப் தனது போர் உத்தியை மாற்றினார். கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பிஜப்பூர் சுல்தானகம் ஆகிய முஸ்லீம் இராச்சியங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதன் மூலம் தெற்கில் தனது அதிகாரத்தை பலப்படுத்த அவர் திட்டமிட்டார். ஆனால் அந்த இரு சுல்தான்களும் ஔரங்கசீப்பின் வருகையை விரும்பவில்லை. எனவே ஔரங்கசீப் இரு சுல்தான்களின் மீது படையெடுத்து தாக்கினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மராத்தியர்கள் வடக்கு கடற்கரையில் தாக்குதலைத் தொடங்கி பரூச் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் முகலாய இராணுவம் குறைந்தபட்ச சேதத்துடன் திரும்பியது. மராத்தியர்கள் இராஜதந்திரத்தின் மூலம் மைசூரை வெல்ல முயன்றனர். சர்தார் கேசோபாந்த் பிங்கிள் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தார். இதற்குள் ஆனால் பீஜப்பூர் முகலாயர்களிடம் வீழ்ச்சியடைந்தது. நிலைமைகள் மாறியது. இதனால் மைசூர் இராச்சியத்தினர் மராட்டியர்களுடன் சேர தயங்கினர். ஆனால் மராட்டியப் படையில் சேர, சாம்பாஜி பல பீஜப்பூர் சர்தார்களை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இறுதியில் சம்பாஜி முகலாயப் படைகளுக்கு எதிரானப் போரில் தலைமை தாங்கினார். ஆனால் சம்பாஜி முகலாயர்களால் பிடிக்கப்பட்டார். மேலும் அவரது மனைவி மற்றும் மகன் சாகுஜி ஔரங்கசீப்பால் சிறைபிடிக்கப்பட்டனர்.
சம்பாஜி மரணதண்டனை
கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பிஜப்பூர் சுல்தானங்கள் ஔரங்கசீப் வெற்றி கொண்ட பின்னர், மராத்தியர்கள் மீது தன் கவனத்தை திருப்பினார். சனவரி 1688-ஆம் ஆண்டில், தக்காணத்திலிருந்து அவுரங்கசீப்பை வெளியேற்றுவதற்கான இறுதி அடியை முடிவு செய்ய கொங்கண் பகுதியில் உள்ள சங்கமேஷ்வரில்[13] ஒரு மூலோபாய கூட்டத்திற்கு சாம்பாஜி தனது தளபதிகளை அழைத்தார். கூட்டத்தின் முடிவை விரைவாக நிறைவேற்ற, சாம்பாஜி தனது பெரும்பாலான தோழர்களை முன்னோக்கி அனுப்பினார் மற்றும் கேவி கலாஷ் உட்பட தனது நம்பிக்கைக்குரிய சிலருடன் தங்கினார். சாம்பாஜியின் மைத்துனர்களில் ஒருவரான கனோஜி சிர்கே, துரோகியாக மாறி, ஔரங்கசீப்பின் தளபதி முகராப் கானுக்கு, சாம்பாஜி இருக்கும்போதே சங்கமேஷ்வர் பகுதியை கண்டுபிடிக்கவும், அடையவும் மற்றும் தாக்கவும் உதவினார். ஒப்பீட்டளவில் சிறிய மராட்டியப் படைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் மீண்டும் போரிட்டன. சாம்பாஜி 1 பிப்ரவரி 1689 அன்று முகலாயப் படைகளால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மராத்தியர்களின் மீட்பு முயற்சி 11 மார்ச் 1689 அன்று முறியடிக்கப்பட்டது. அவர் ஔரங்கசீப்பை வணங்க மறுத்தார், அதனால் அவர் தலை துண்டிக்கப்பட்டார்.[14]ஜான் எஃப். ரிச்சர்ட்ஸின் கூற்றுப்படி, சாம்பாஜி முஸ்லிம்களைக் கொன்றதற்காகவும் கைப்பற்றியதற்காகவும் தூக்கிலிடப்பட்டார். இந்த தீர்ப்பு உலமா குழுவால் வழங்கப்பட்டது.[15]
சத்திரபதி இராஜராம் தலைமையில் மராத்தியர்கள் (1689 - 1700)
1689-ஆம் ஆண்டின் இறுதியில் மராத்தியப் படைகள் வீழ்ச்சியடைந்ததாக ஔரங்கசீப் கருதினார். சம்பாஜியின் மரணம், முகலாயப் படைகளுக்கு எதிராக மராட்டியப் படைகள் மீண்டும், சம்பாஜியின் இளைய சகோதரர் சத்திரபதி இராஜாராம்[16] தலைமையில் ஒன்று திரண்டது. மார்ச் 1690-ஆம் ஆண்டில், மராட்டிய தளபதிகள், சாந்தாஜி கோர்படேவின் தலைமையில் முகலாயப் படைகள் மீது மிகத் துணிச்சலான தாக்குதலைத் தொடுத்தனர். அவர்கள் இராணுவத்தைத் தாக்கியது மட்டுமல்லாமல், அவுரங்கசீப் படுத்திருந்த கூடாரத்தையும் தாக்கினர். அதிர்ஷ்டவசமாக ஔரங்கசீப் வேறு இடத்தில் இருந்தார், ஆனால் அவரது தனிப்பட்ட படை மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். இருப்பினும், இதைத் தொடர்ந்து மராத்திய முகாமில் ஒரு துரோகம் நடந்தது. சூர்யாஜி பிசால் செய்த துரோகத்தால் ராய்கட் கோட்டை வீழ்ந்தது. சாம்பாஜியின் மனைவி இராணி யேசுபாய் மற்றும் அவர்களது மகன் சாகுஜி ஆகியோர் முகலாயர்களால் கைது செய்யப்பட்டனர்.
சுல்பிகர் கான் தலைமையிலான முகலாயப் படைகள் பன்காலா கோட்டையைத் தாக்கினர். இருப்பினர் மராத்தியப் படைகள் பன்ஹாலா கோட்டையை பாதுகாத்து முகலாய இராணுவத்திற்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தினார். இறுதியாக ஔரங்கசீப் தலைமையிலான படைகள் வந்து பன்ஹாலா கோட்டையை கைப்பற்றியது.
முகலாயப் படைகள் விசால்காட்டை[17] கைப்பற்ற முயன்றதால், அமைச்சர்களின் ஆலோசனையின்படி, சத்திரபதி இராஜாராம் ம்ராத்தியப் பேரரசின் தலைநகரத்தை செஞ்சியில் உள்ள செஞ்சிக் கோட்டைக்கு மாற்றினார்.[18]அவுரங்கசீப் செஞ்சிக் கோட்டையில் நடக்கும் அரசியலை உளவு அறிய அனுப்பிய சிறு படைகளை, மராட்டியப் படைத்தலைவரகளான சாந்தாஜி கோர்படே மற்றும் தானாஜி ஜாதவ் ஆகியோர் சிதறடித்தனர்.
மேலும் தக்காணத்தில் மராட்டியப் படைத்தலைவர்களான இராமச்சந்திர பாவாதேக்கர், வித்தோஜி சவான் மற்றும் ராகோஜி போன்சலே ஆகியோர் மராட்டியப்ப்டைகளை மீண்டும் ஒருங்கிணைத்தனர். 1691-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராமச்சந்திர பாவாதேக்கர், பிரகலாத நீராஜி, தானாஜி மற்றும் சில முக்கியப் படைத்தலைவர்கள் மாவலில் ஒன்று கூடி புதிய போர் யுக்தி குறித்து ஆலோசித்தனர். அதே நேரத்தில் அவுரங்கசீப் நான்கு பெரிய கோட்டைகளை கைப்பற்றியிருந்தார். மேலும் சுல்பிகர் கான் தலைமையில் ஒரு படையை செஞ்சிக் கோட்டையை கைப்பற்ற அனுப்பினார். மராட்டியப் படைத்தலைவர்கள் முகலாலயப் படைகளை நாற்புறத்திலிருந்தும் தாக்கினர். போர் மால்வா முதல் கிழக்கு கடற்கரை வரை நடைபெற்றது. மராத்திய பிரதம அமைச்சர் இராமசந்திர பந்த் அமத்யா மற்றும் சங்கராஜி நீரஜ் போன்ற படைத்தலைவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கோட்டைகளை பாதுகாத்தனர். சாந்தாஜி கோர்படே மற்றும் தானாஜி ஜாதவ் போன்ற படைத்தலைவர்கள் முகலாயப் படைகளை வென்றனர். அதானிச் சண்டையில் முகலாயப் படைத்தலைவர் காசிம் கானை சாந்தாஜி கோர்படே வெற்றி கொண்டார்.
அவுரங்கசீப் தனது படைகளை மீண்டும் ஒருங்கிணைத்து, போர் முறையை மாற்றி அமைந்தார். செஞ்சிக் கோட்டை தாக்க சுல்பிகர் கான் மற்றும் தாவூத் கான் தலைமையில் பெரும் படையை அவுரங்கசீப் அனுப்பினார். அவுரங்கசீப் படைகளால் சனவரி 1698-ஆம் ஆண்டில் செஞ்சி முற்றுகை இடப்பட்டது. ஆனால் செஞ்சி கோட்டையிலிருந்து சாந்தாஜி கோர்படே மற்றும் தானாஜி ஜாதவ் ஆகியோர்களின் உதவியுடன் சத்திரபதி இராஜாராம் தப்பி தக்காணத்தின் விசால்காட் பகுதிக்கு மாறினார்.
மராத்திய சக்திகளின் மறுமலர்ச்சி
சத்திரபதி இராஜாராம் தானாஜி ஜாதவை மராத்தியப் படைத்தலைவராக நியமித்தார். இதனால் மராத்தியப் படைகள் மூன்று பிரிவாகப் பிரிந்தது. ஒரு பிரிவிற்கு ஜாதவும், இரண்டாம் பிரிவுக்கு பரசுரம் திரயம்பக் மற்றும் மூன்றாம் பிரிவுக்கு சங்கர் நாராயணன் தலைமை தாங்கினர். தானாஜி ஜாதவ், பண்டரிபுரத்தில் பெரிய முகலாயப் படைகளை தோற்கடித்தார். அதே போல் சங்கர நாராயணன் புனேவில் சர்ஜா கான் தலைமையிலான முகலாயப் படைகளை தோற்கடித்தார். ஜாதவின் துணைப்படைத்தலைவர் காந்தாராவ் தப்படே தலைமையிலான மராத்தியப் படைகள் நாசிக்க்கில் முகலாயப் படைகளை வென்றது. இதனால் கோபமுற்ற அவுரங்கசீப் பன்காலா மற்றும் சாத்தாரா நகரங்களை கைப்பற்றினார்.
மார்ச் 1700-ஆம் ஆண்டில் மராத்தியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் மறைந்த பிறகு, அவரது மனைவி தாராபாய், மராத்தியப் படைகளுக்கு தலைமை தாங்கியதுடன், தன் இளம் வயது மகன் இரண்டாம் சிவாஜியின் காப்பாட்சியாரக, அடுதத ஏழாண்டுகளுக்கு மராத்தியப் பேரரசை வழிநடத்தினார்.
சதரா சன்டைக்குப் பின்னர் அவுரங்கசீப் தக்காணப் பிரதேசத்திற்காக ஒவ்வொரு அங்குலத்திற்கும் பெரும் உயிரையும் பணத்தையும் செலவழித்து போரிட்டார். ஔரங்கசீப் மேற்கு நோக்கி தனது படைகளை வழிநடத்தினார். குறிப்பாக சதாராவை (மராட்டியத் தலைநகர்) கைப்பற்றி, ஐதராபாத் வரை விரிவுபடுத்தினர். ஔரங்கசீப் தக்காணத்தில் தொடர்ந்து இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக எந்தத் தீர்மானமும் இல்லாமல் தொடர்ச்சியான போரை நடத்தினார். இதனால் அவரது படையில் ஐந்தில் ஒரு பகுதியை இழந்தார்.
1701 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முகலாய முகாமில் பதற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டன. ஜுல்பிகர் கானின் தந்தை அசாத் கான், போரை முடித்துக் கொண்டு திரும்புமாறு ஔரங்கசீப்பிற்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பயணம் ஏற்கனவே பேரரசின் மீது திட்டமிட்டதை விட மிகப் பெரிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது, மேலும் 175 ஆண்டுகால முகலாய ஆட்சியானது வெற்றியடையாத போரில் ஈடுபட்டதன் காரணமாக சிதைவடையக்கூடும் என்று தோன்றியது.
1704-ஆம் ஆண்டு வாக்கில் ஔரங்கசீப் தோரணக் கோட்டை, ராய்கட் கோட்டை மற்றும் வேறு சில கோட்டைகளை பெரும்பாலும் மராட்டிய தளபதிகளுக்கு கையூட்டு கொடுத்து கைப்பற்றினார்.[19][20] ஆனால் இதற்காக அவர் நான்கு ஆண்டுகளை செலவிட்டார். 24 ஆண்டுகால தொடர்ச்சியான போருக்குப் பிறகு, மராட்டிய மாநிலத்தை இணைக்க அவர் வெற்றிபெறவில்லை என்பது அவுரங்கசீப்பிற்கு மெதுவாகத் தெரியவந்தது.
மராத்தியர்களுக்கு எதிரான அவுரங்கசீப்பின் தொடர்ச்சியான 20 ஆண்டு போரினால், முகலாயக் கருவூலம் வறண்டு போகத் துவங்கியது. 1705-ஆம் ஆண்டில், இரண்டு மராட்டிய இராணுவப் பிரிவுகள் நர்மதையைக் கடந்தன. ஒன்று, நேமாஜி சிண்டேயின் தலைமையில், போபால் வரை வடக்கே தாக்கியது; இரண்டாவது, கந்தேராவ் தபாடே தலைமையில், பரூச் மற்றும் மேற்குப் பகுதிகளைத் தாக்கியது. 8,000 படைகளுடன் ஆட்களுடன், தபாடே கிட்டத்தட்ட பதினான்காயிரம் பேர் கொண்ட முகமது கானின் படைகளைத் தாக்கி தோற்கடித்தது. இதனால் குஜராத் கடற்கரை முழுவதும் மராட்டியர்களுக்காக திறக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக முகலாய விநியோகச் சங்கிலிகளில் தங்கள் பிடியை இறுக்கினர். 1705-ஆம் ஆண்டின் இறுதியில், மராட்டியர்கள் மத்திய இந்தியா மற்றும் குஜராத்தின் முகலாயப் பகுதிகளில் ஊடுருவினர். நேமாஜி ஷிண்டே மால்வா பீடபூமியில் முகலாயர்களை தோற்கடித்தார். 1706 இல், முகலாயர்கள் மராட்டிய ஆதிக்கத்திலிருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
மகாராட்டிராவில், ஔரங்கசீப் விரக்தியடைந்தார். அவர் மராட்டியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். பின்னர் அவர்களை திடீரென வெட்டிவிட்டு சிறிய நாடான வாகிநரா மீது படையெடுத்துச் சென்றனர். அதன் நாயக்க ஆட்சியாளர்கள் விஜயநகரப் பேரரசின் பரம்பரையைக் கொண்டவர்கள். அவரது புதிய எதிரிகள் முகலாயர்களை ஒருபோதும் நேசித்ததில்லை மற்றும் மராட்டியர்களின் பக்கம் இருந்தனர். ஜாதவ் சயாத்திரியில் அணிவகுத்து, குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து பெரிய கோட்டைகளையும் வென்றார். அதே சமயம் சதாரா மற்றும் பராலியை பரசுராம் திம்பக் கைப்பற்றினார், மேலும் நாராயண் சிங்காட்டை கைப்பற்றினார்.
அவுரங்கசீப் இப்போது எல்லா நம்பிக்கையையும் விட்டுவிட்டு சுல்பிகர் கான் தலைமையிலான படைகளுடன் புர்ஹான்பூருக்கு பின்வாங்க திட்டமிட்டிருந்தார். அவுரங்கசீப் 21 பிப்ரவரி 1707 அன்று காய்ச்சலால் இறந்தார்[21]
போருக்குப் பின்னர்
1757-ஆம் ஆண்டில் மராத்தியப் படைகள் தில்லியை முழுமையாகக் கைப்பற்றியது. முகலாயப் பேரரசின் ஆட்சியின் நிலப்பரப்பு செங்கோட்டை வளாகம் அளவில் சுருங்கியது.
↑Robinson, Howard; James Thomson Shotwell (1922). "Mogul Empire and the Marathas". The Development of the British Empire. Houghton Mifflin. p. 106–132.