சிந்துதுர்க் கோட்டை (Sindhudurg Fort) என்பது மேற்கு இந்தியாவில் மகாராட்டிரக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் அரேபிய கடலில் ஒரு தீவை ஆக்கிரமித்துள்ள வரலாற்று கோட்டையாகும் . இந்த கோட்டையை பேரரசர் சத்ரபதி சிவாஜி கட்டினார். மும்பைக்கு தெற்கே 450 கிலோமீட்டர் (280 மைல்) தொலைவில் மகாராட்டிராவின் கொங்கண் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வான் நகரின் கரையில் இந்த கோட்டை அமைந்துள்ளது. [1] இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். [2]
வரலாறு
இந்தக் கோட்டை 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசின் ஆட்சியாளரான சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிநாட்டினரின் (ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு மற்றும் போர்த்துகீசிய வணிகர்கள்) அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்ப்பதும், ஜஞ்சிராவின் சித்திகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். [3] இதன் கட்டுமானத்தை 1664 இல் இரோஜி இந்தூல்கர் என்பவர் மேற்பார்வையிட்டார். குர்தே தீவு என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தீவில் இந்த கோட்டை கட்டப்பட்டது.
கட்டமைப்பு விவரங்கள்
சத்திரபதி சிவாஜி இந்த கோட்டையை கட்ட 200 வதேரா மக்களை அழைத்து வந்தார். 4,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட ஈயம் பயன்படுத்தப்பட்டது. மேலும், அடித்தள கற்கள் உறுதியாக போடப்பட்டன. 1664 நவம்பர் 25 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகளில் (1664-1667) கட்டப்பட்ட கடல் கோட்டை 48 ஏக்கர் பரப்பளவில், இரண்டு மைல் (3 கி.மீ) நீளமுள்ள கோபுரமும், 30 அடி (9.1 மீ) உயரமும் 12 அடி (3.7 மீ) தடிமன் சுவர்களும் கொண்டது. பிரம்மாண்டமான சுவர்கள் எதிரிகள் நெருங்காமல் இருப்பதற்கும் அரேபிய கடலின் அலைகளைத் தடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதான நுழைவாயில் யாரும் வெளியில் இருந்து உட்புக முடியாத வகையில் மறைக்கப்பட்டுள்ளது.
கோட்டையை கைவிட்டதிலிருந்து பல நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாததால் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்களது குடும்பம் கோட்டையில் உள்ளது. அதிக அலைகள் காரணமாக மழைக்காலங்களில் சுற்றுலா பயணிகளுக்காக கோட்டை மூடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள்
மேலும் காண்க
குறிப்புகள்