ஹரி பர்பத் (பொருள்: மைனாக்குன்று) அல்லது வட்டார வழக்கில் கோ-இ-மாரான் என்பது இந்திய மாநிலமான ஜம்மு கஷ்மீரின்ஸ்ரீநகரில்[1] அமைந்துள்ள மலைக்குன்று. துர்ரானிக் கோட்டையைக் கொண்டுள்ள இந்த மலைக்குன்று இந்து, முஸ்லிம், சீக்கியர்களுக்குச் சமயச்சிறப்புமிக்க இடம். இங்கு இந்துக் கோயிலும், சீக்கியகுருத்துவாராவும், உள்ளூர் இசுலாமியச் சமயப் பெரியோர்களின் நினைவிடங்களும் அமைந்துள்ளன.[2]
துர்ரானி கோட்டை
புதிய தலைநகர் உருவாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக முகலாயப் பேரரசரான அக்பர் இந்த மலைக்குன்றில் கோட்டைக்கான வெளிச்சுவரை 1590ஆம் ஆண்டில் கட்டினார். ஆயினும் அந்தத்திட்டம் முழுமையடையவில்லை. தற்போது உள்ள கோட்டையை 1808ஆம் ஆண்டில் ஷுஜா ஷா துர்ரானி என்பவர் கட்டி முடித்தார்.
ஷாரிகா கோயில்
குன்றின் மேற்குப்புறச்சரிவிலுள்ள சக்தி வழிபாட்டிற்காக ஒரு கோவிலைக் கொண்டிருப்பதால் இக்குன்று காஷ்மீரிப் பண்டிதர்களால் புனிதமாகக் கருதப்படுகின்றது. ஜகதம்பா ஷாரிகா பகவதி அல்லது பொதுவாக ஷாரிகா என்ற பெயருடைய சக்தி, பதினெட்டுக்கைகள் கொண்டு தானே உருவான ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஷாரிகா தேவி ஸ்ரீநகரின் காவல்தெய்வமாகக் கருதப்படுகின்றாள்[3]
இசுலாமிய புனிதத் தலம்
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபி ஞானியான ஹம்சா மக்தூன் என்ற சமயப் பெரியாரின் நினைவாக மலைக்குன்றின் தெற்குப் பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.[4][5] பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷா பதக்ஷி என்ற சூபி ஞானியின் நினைவிடமும் இங்குள்ளது.
குருத்வாரா சட்டி பட்ஷாஹி
சட்டி பட்சாஹி என்ற குருத்வாரா இங்குள்ளது. இது காஷ்மீர் பகுதியில் உள்ளவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சீக்கியர்களின் ஆறாம் குருவான குரு ஹர்கோவிந்த் இங்கு வந்து சிலநாட்கள் தங்கியிருந்ததாக நம்பப்படுகின்றது.[6]