பத்மநாபபுரம் அரண்மனைகன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது கேரளா அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது, கேரள அரசின் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படுகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான வேளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த அரண்மனையானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் பொ.வ 1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும், தற்போது உள்ள முழு அரண்மனையும் அவரால் கட்டப்பட்டதல்ல. அரண்மனையின் முகப்பில் இருக்கும் தாய் கொட்டாரம் என அழைக்கப்படும் பகுதி மட்டுமே அவரால் கப்பட்டடதாக கூறப்படுகிறது. அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவரின் மருகமனான அனிழம் திருநாள் மாராத்தாண்ட வர்மா காலத்தில் இந்த அரண்மனை விரிவுபடுத்தப்பட்டது. கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தக் கட்டமானது காலம்காலமாக புதுப்பிக்கபட்டுவந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையின் எல்லா பகுதிகளிலும் இயற்கை ஒளியை பயன்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் சீன பாணியிலான சிம்மாசனம் உள்ளது. இது அங்கிருந்து தருவிக்கப்படதாகவோ அல்லது அன்பளிப்பாக தரப்படதாகவோ இருக்கலாம்.[1]
இந்த அரண்மனையில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் உள்ளது. இது அரண்மனையின் கொடையை பறைசாற்றுவதாக உள்ளது. ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் அமர்ந்து உணவு உண்ணும் இடவசதியுடன் இந்தக் கூடம் அமைந்துள்ளது. இந்த உணவுக் கூடத்தில் சீனச்சாடிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை உணவுப் பொருட்களை வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.[1]
பொ.வ 1795 ஆம் ஆண்டு தலைநகரம் இவ்வரண்மனையிலிருந்து (பத்மனாபபுரம்) திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் உள்ளது.[2]
பூமுகம்
அரண்மனையின் நுழைவு கட்டடமானது கேரள பாரப்பரியத்தின்படி பூமுகம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பூமுகவாயிலானது மரவேலைப்பாடுகளுடன் கூடிய இரட்டைக் மரக்கதவைவும் கருங்கல் துணையும் உடையது. இந்தக் கதவில் 90 வகைத் தாமரைகள் செதுக்கப்பட்டுள்ளன. பூமுகத்தில் கேரள பாரம்பரிய தொங்கும் விளக்கு உள்ளது.[1]
தாய்க் கொட்டாரம்
இந்த அரண்மனையின் மிகப் பழமையான பகுதி இந்த தாய் கொட்டாரம் ஆகும். இது பொ.வ 1550 ற்கு முன் கட்டப்பட்டது. இது கேரள நாலுகெட்டு வீடு பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேலு இரு படுக்கையறைகள் உள்ளன.[1]
மந்திர சாலை
மந்திர சாலை என்பது மன்னரின் அரசவையாக இருந்த கட்டடம் ஆகும். இது பிரம்மாண்டமானதாக இல்லாமல் எளிமையானதாக உள்ளது. இந்த மந்திர சாலை முழுக்க மரத்தால் கட்டப்பட்டுள்ளது.[1]
உப்பரிகை மாளிகை
இது நான்கடுக்கு மாளிகையாக உள்ளது. இது அரண்மனையின் மையத்தில் அமைந்துள்ளது. முதல் தளத்தில் அரசரின் படுக்கை அறைகள் அமைந்துள்ளன. இதில் மருத்துவ குணம் கொண்ட கட்டிலொன்று உள்ளது. அறையின் சுவர்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் அரசர் படிப்பதற்கான அறைகளும் உபவாசம் இருப்பதற்கான அறைகளும் உள்ளன. மேல் தளத்தில் பூஜை அறை அமைதுள்ளது. இந்த பூசை அறையில் இந்து தொன்மவியிலை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[1]
நவராத்திரி மண்டபம்
இது கேரள கட்டக்கலையில் இருந்து மாறுபட்டு விஜயதகர கட்டடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதன் தளபானது தேங்காய்கூடு, முட்டையின் வெள்ளைக்கரு, கற்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கபட்டுள்ளது எனப்படுகிறது. இந்த மண்டபத்தில் நவராத்திரி காலங்களில் நடன நிகழ்ச்சிகள் நடக்கும். அரசர்கள் மண்டபத்தில் உள்ளே அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பர். அரச மளிர் இந்த நடாட்டிய நிகர்ச்சிகளைக் கண்டு ரசிக்க ஏதுவாக, மண்டபத்தை ஒட்டியே தெற்குப்பக்கமாக ஒரு அறைகள் அமைக்கபட்டுள்ளன. இந்த அறைகளில் இருந்து மரத் துளைகளின் வழியாக நடன நிகழ்ச்சிகளை கண்டு இரசிக்கமுடியும். என்றாலும் மண்டபத்தில் உள்ளவர்களால் அவர்களைப் பார்க்க முடியாது.[1]
பிற முக்கிய கட்டிடங்கள்
ஹோமபுரம் - சடங்குகள், யாகங்கள் செய்யும் பகுதி.
இந்திரவிலாசம் - விருந்தினர் இல்லாமாக செயல்பட்டது. இது மேற்கத்திய சாலைக் கொண்டதாக உள்ளது.
நாடக சாலை
தெற்குக் கொட்டாரம் -தாய்க் கொட்டாரத்தினைப் போன்றே பழமையானது. தற்போது அருங்காட்சியமாக செயல்படுகிறது.