இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
போபமின் பிராட்வே என்பது தமிழ் நாட்டின், சென்னை மாநகரம், ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதன்மைச் சாலையாகும்.[1] தெற்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை வடக்கில் இப்ராஹிம் சாகேப் தெருவுடன் இணைக்கும் இந்தச் சாலை தென்-வடலாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1676 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட கறுப்பர் நகரம் முத்தியால் பேட்டை மற்றும் பெத்த நாயக்கன் பேட்டை என்ற இரண்டு பகுதிகளை உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. பின்னாளில் இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது.[2] போபாம்ஸ் பிராட்வே சாலை ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த இரண்டு பகுதிகளுக்கும் நடுவே அமைக்கப்பட்டது.
அட்டப்பள்ளம் கால்வாய்
இரண்டு பேட்டைகளுக்கும் நடுவே ஒரு வடிகால் கால்வாய் ஓடியது. சற்று ஆழமான இந்தக் கால்வாயின் இரு புறமும் கரைகள் இருந்தன. இந்தக் கால்வாய்க்கு அட்டப்பள்ளம் (ஆழ்ந்த பள்ளம் அல்லது ஆழமான பள்ளம்) என்று பெயர். தேவையற்ற இந்தக் கால்வாய் பிராட்வே பகுதியின் விரிவாக்கத்திற்குத் தடையாக இருந்தது. அட்டபள்ளம் கால்வாயைச் சுற்றி இருந்த பெரும்பகுதி நிலம் ஸ்டீபன் போபம் என்பவருக்கு சொந்தமானதாகும்.[1][4][5]
ஹாக் ஹில் மண்மேடு
இன்று சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனை, மெட்ராஸ் யுனைடெட் கிளப் மற்றும் பூங்கா நகர் அஞ்சல் அலுவலகம் இருக்கும் பகுதி அன்று நரிமேடு என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் "ஹாக் ஹில்" என்று அழைத்தனர். ஆங்கிலேயர்கள் இந்த மண் மேட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதினர். எனவே இந்த மண்மேட்டை சமன் செய்ய முடிவு செய்தனர்.[1][4][5][6]
ஸ்டீபன் போபம்
பிரித்தானிய அரசியல்வாதியும் வழக்கறிஞருமான ஸ்டீபன் போபம் ஐரிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியா வந்த இவர், வங்காளத்தின் அட்வகேட் ஜெனரலான சர் ஜான் டேயின் (Sir John Dey) செயலாளராக கல்கத்தாவில் பணியாற்றினார். 1778 ஆம் ஆண்டில், இவர் அதிகாரப்பூர்வ விசாரணைக்காக டேயுடன் சென்னை நகரத்திற்குச் வந்தார். டேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னையிலேயே தங்கிவிட்டார். பிளாக்டவுனில் ஒரு இடத்தை வாங்கி சென்னை நகரத்தில் குடியேறினார். தொடர்ந்து அருகிலுள்ள நிலத்தை வாங்கி, அப்பகுதியில் வடிகால் கால்வாயை அமைத்தார். 1781 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஹாக் ஹில் மண்மேட்டை சமன் செய்தபோது, அங்கிருந்து அகற்றப்பட்ட மண்ணை வாங்குவதற்கு போபம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் கிடைத்த மண்ணைக் கொண்டு அட்டப்பள்ளம் கால்வாயின் பள்ளத்தை நிரப்பி சமன் செய்து விரிவான சாலையை அமைத்தார். இந்தச் சாலை "போபமின் பிராட்வே என்று பெயரிடப்பட்டது.[4][5][6]
குடிமை நலன்கள்
ஸ்டீபன் போபம் அன்றைய மெட்ராஸ் நகரத்திற்கான, குறிப்பாக ஜார்ஜ் டவுன் பகுதிக்கான பல குடிமை நலன்களை மேற்கொண்டார். அன்றைய ஜார்ஜ் டவுனின் ஒவ்வொரு தெருவிலும் நேரடி மற்றும் குறுக்கு வடிகால் அமைக்கவும், தெருக்களில் விளக்குகள் அமைக்கவும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் மதுபான கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு உரிமம் வழங்கவும் இவர் பரிந்துரைத்தார். மெட்ராஸ் நகருக்கான நிரந்தர போலீஸ் படையை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்பித்தவரும் இவரே.
இறப்பு
இவர் 1795 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி, காஞ்சீவரத்தில், தனது குதிரை பூட்டிய இரு சக்கர வண்டியில் பயணம் செய்தபோது, வண்டியிலிருந்து தவறி விழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 53 மட்டுமே. நாளடைவில் இவர் பெயர் படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போனது.[1][5]
பிரகாசம் சாலை: பெயர்க்காரணம்
தற்போது இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமருமான (முதல்வர்) ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் பெயரால் பிரகாசம் சாலை என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்தச் சாலையின் எண்: 40 பிராட்வே, காந்திநகர் என்ற முகவரியில் பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா பிரஸ்' என்ற அச்சகமும், ஸ்வராஜ்யா பத்திரிக்கை அலுவலகமும் இருந்தது. திறமையான உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பிரகாசம், சுயராஜ்யா பத்திரிகையில் ஒத்துழையாமை கொள்கை குறித்து எழுதி வந்தார். எனவே இவர் நினைவாக பிரகாசம் சாலை என்று பெயரிடப்பட்டது.[1]
↑ 6.06.1Madras: Tracing the Growth of the City Since 1639, ed. 1.. Narasiah, K.R.A. Palaniappa Brothers, Chennai, 2016. பக் 232. isbn = 978-81-8379-687-3