அரண்மனைக்காரன் தெரு (Armenian Street, உள்ளூர் மக்களால் Aranmanaikaran Street, என அழைக்கப்படுகிறது) என்பது சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் உள்ள வணிக மையமாகவும் வரலாற்று சிறப்பு கொண்ட தெருக்களில் ஒன்றான ஆர்மீனியன் தெரு என அழைக்கப்பட்டு, பின்னர் அரண்மனையரன் தெரு என்று அழைக்கப்படும் ஒரு தெரு ஆகும். இந்தத் தெரு வடக்குத் தெற்காக வட சென்னையில் உள்ளது. இது வடக்கில் மண்ணடியையும் தெற்கில் சைனா பஜாரையும் இணைக்கும் விதத்தில் உள்ளது. இத் தெருவில் நூற்றாண்டு பழமையான பல வரலாற்றுக் கட்டடங்கள் காணப்படுகின்றன.
இத்தெருவானது ஆர்மீனியர்களின் பெயரால் அழைக்கப்பட்டது. அவர்கள் சென்னை நகரத்தில் குடியேறிய இனமக்களில் ஒருவராவர். இம்மக்களில் பலர் 1750களில் ஜார்ஜ் டவுனை ஒட்டிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதியில் குடியேறினர். இதனால் ஆரிமீனியன் தெரு என அழைக்கப்பட்ட இத்தெருவானது, பிற்காலத்தில் அரண்மனைக்காரன் தெரு என திரித்து அழைக்கப்பட்டது.
வரலாறு
பொ.ஊ. 780 ஆம் ஆண்டு கேரளத்தின் மலபார் கடற்கரையில் தாமஸ் கானாதான் இந்தியாவில் கால் பதித்த முதல் ஆர்மேனியர் ஆவார். அவரது மூலம் அல்லது பணி பற்றி அதிகம் அறியப்படவில்லை. சென்னையில் ஆர்மேனியர்கள் 1600-களில் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. சென்னை பரங்கிமலைக்கு அருகில் 1663-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட கோஜா டேவிட் மார்கர் என்பவரின் கல்லறை அதற்குச் சான்று. சென்னை ஆர்மீனியர்கள்தான் பரங்கி மலை மீது உள்ள புனித தாமஸ் கல்லறையைக் கண்டுபிடித்தவர்கள் என்றும் ஆர்மீனியர்களே 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களை இங்கு அழைத்துவந்தவர்கள் என நம்பப்படுகிறது. பரங்கிமலைக்கு மேலிருந்த அந்தப் பழமையான தேவாலயம்தான் ஆர்மேனியக் கப்பல்களுக்கும் போர்த்துகீசிய கப்பல்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்துள்ளது. ஆர்மீனியர்களின் வர்த்தகத்தில் பட்டு, மசாலா பொருட்கள் இரத்தினக் கற்கள் இடம்பெற்றன. சென்னையில் வசித்த கடைசி ஆர்மேனியரின் பெயர் மைக்கேல் ஸ்டீபன். அவர் சென்னையை விட்டுச் சென்றுவிட்டார்.[1]
தெருவில் உள்ள பழமையான கட்டிடங்கள்
இந்த நீண்ட, குறுகலான தெருவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்கள் உள்ளன. நகரில் உள்ள ஆர்மீனியன் தேவாலயம் ஒரு குறிப்பிடத்தக்க ஆர்மீனிய நினைவுச்சின்னமாகும். இது 1712 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, பின்னர் பிரெஞ்சு முற்றுகையால் ஏற்பட்ட சேதத்துக்குப் பிறகு 1772 இல் மீண்டும் கட்டப்பட்டது. இன்று சென்னை உயர் நீதிமன்றம் இருக்கும் இடத்தில் ஆர்மீனியர்கள் தங்கள் முதல் தேவாலயத்தைக் கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதியுடன் கட்டினர். இந்தத் தேவாலயமானது முழுவதும் மரத்தால் கட்டியுள்ளனர். அந்தத் தேவாலயப் பராமரிப்புக்காக அங்கு வசித்த ஆர்மேனியர்களுக்கு 50 பவுண்டுகளைக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியுள்ளது. அது பிற பகுதிகளில் வசித்த ஆர்மேனியர்களையும் அங்கு வசிக்கத் தூண்டியுள்ளது.[2]
↑முகமது ஹுசைன் (29 ஏப்ரல் 2018). "அரண்மனைக்காரன் தெரு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)