உலக ஆய்வக விலங்குகள் நாள் விலங்குரிமை குழுக்களாலும் சில ஐக்கிய நாடுகளின் துணை அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இது ஐக்கிய நாடுகளால் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப் படுவதில்லை.
உலக ஆய்வக விலங்குகள் நாள் (ஆங்கில மொழி: World Day For Animals In Laboratories/World Lab Animal Day)[1] என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது.[2]
உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் பலவகையான விலங்குகள்ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றன. இவ்விலங்குகள் மீது உயிர்மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் விலங்குகள் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
வரலாறு
1979ஆம் ஆண்டில், அமெரிக்க, தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் ஆய்வக விலங்குகளுக்கான உலக தினத்தை ஏப்ரல் 24 அன்று—அதாவது லார்ட் ஹக் டவுடிங்கின் பிறந்தநாளின் போது—தோற்றுவித்தது. இந்த உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உடற்கூறாய்வு எதிர்ப்பாளர்களால் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.[3]
தற்பொழுது இந்த நிகழ்வானது, விலங்குகளை ஆராய்ச்சியில் பயன்படுத்துவதை எதிர்க்கும் குழுக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளால் குறிக்கப்படுகிறது.[4][5] ஏப்ரல் 2010-ல், எதிர்ப்பாளர்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்து, ஆராய்ச்சியில் விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரினர். இதேபோன்ற அணிவகுப்பு 2012-ல்[6] பர்மிங்காமிலும் 2014-ல் நாட்டிங்ஹாமிலும் நடைபெற்றது.[7]
ஆய்வக விலங்குகளுக்கான உலக தினம் மற்றும் உலக வாரம் ஆகியவை ஆராய்ச்சியில் விலங்குகளைப் பயன்படுத்துவதைப் பாதுகாக்கும் விஞ்ஞான குழுக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.[8] 22 ஏப்ரல் 2009 அன்று விலங்குகள் மீதான உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆதரவாக ஒரு பேரணியை நடந்தது. விலங்குகளை துன்புறுத்துவதற்கு எதிராக கண்டனக் குரல்களும் எழுந்தன.[9][10]
தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் மற்றும் விலங்கு ஆராய்ச்சியை எதிர்க்கும் பிற குழுக்கள், ஆய்வகங்களில் உள்ள விலங்குகளுக்கான உலக தினம் ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தப்போதிலும்,[1][11][12] இது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ பட்டியலில் சேர்க்கப்படவில்லை.[13]