பட்டுப்புழு வளர்ப்பு

பட்டு நெய்யும் சொங் அரசப் பெண்கள்

பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்கள் இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பாம்பிக்ஸ் மோரி (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, யப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலக பட்டுத் தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

எந்த உயிரினத்தையும் வதைக்காமல் அகிம்சை வழியில் கூட்டுப்புழுக்களை வேக வைக்காமல் பட்டெடுத்து அகிம்சைப் பட்டு உற்பத்தியைச் செய்ய காந்தி வலியுறுத்தினார்.[1][2][3] பல சமூக அமைப்புகளும் கூட்டுப்புழுவை வேகவைப்பதை எதிர்க்கின்றனர். 21ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் என்கிற அமைப்பு பட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.[4]

வரலாறு

தொல்பொருள் ஆராய்ச்சிப்படி பொ.ஊ.மு. 5000–3000 வாக்கில் பட்டு தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டாலும் கன்பூசியஸ் குறிப்பின்படி சுமார் பொ.ஊ.மு. 2700 லேயே கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிருக்கிறது.[5] 1977இல் நான்சின் நகரில் கண்டெடுக்கப்பட்ட பட்டுப்புழு வடிவம் கொண்ட 5400–5500 ஆண்டுகள் பழமையான செராமிக் கல்லே மிகப்பழமையான பட்டுவளர்ப்பிற்கான ஆதாரமாகும்.[6] பொ.ஊ.மு. 2450–2000 சேர்ந்த பட்டுநூல்கள் சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தெற்காசியாவில் பட்டு பரவலாகப் பயன்பட்டதாகக் கருதலாம்.[7][8] முதல் நூற்றாண்டின் முதல் பாதியில் தற்போதைய ஈரான் பகுதியான கோடான் பேரரசிற்குப் பட்டு சென்றுள்ளது அதன்பிறகு தொடர்ந்து பட்டுப்பாதையில் பட்டு வணிகம் நிகழ்ந்துள்ளது[9] பொ.ஊ. 140ல் இந்தியாவில் பட்டுதயாரிப்பு முறை அறிமுகமானது.[10] பட்டுப்புழு முட்டை கடத்தல் மூலம் 6ஆம் நூற்றாண்டு வாக்கில் மத்திய நிலக்கடல் பகுதியான பைசாந்தியப் பேரரசிற்கு (கிழக்கு ரோமப்பகுதி) அறிமுகமாகிறது, அதன் பின்னர் பைசாந்தியப் பட்டு பல நூற்றாண்டுகளாக ஏகபோகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1147இல் சிசிலியின் இரண்டாம் ரோஜர் (1095–1154) தலைமையில் இரண்டாம் சிலுவைப் போரில், பட்டு உற்பத்திக்கான இரண்டு முக்கிய நகரங்களான கொரிந்த் மற்றும் திபேஸ் நகரைத் தாக்கி பட்டு நெசவாளார்கள் மற்றும் பட்டுதயாரிப்பு எந்திரங்களைக் கைப்பற்றி பலெர்மோ மற்றும் கலபிரியாவில் புதிய பட்டு ஆலைகள் உருவாக்கப்பட்டன.[11] இதன்பிறகு மேற்கு ஐரோப்பாவிலும் பட்டு உற்பத்தி பரவியது.

பட்டு உற்பத்தி

பட்டுப்புழு குடம்பிகளுக்கு முசுக்கொட்டை இலைகளைத் தீனியாகக் கொடுக்கப்படுகிறது, நான்காவது உருமாற்றத்திற்குப் பின் அருகே உள்ள கிளைகளில் ஏறி கூட்டுப்புழுக்களை உருவாக்குகிறது. பட்டு என்பது இளம்புழுவின் தலையிலுள்ள இரு உமிழ்நீர்ச் சுரப்பி வழியாக உருவாகும் இழைப்புரதம், புரதம் கொண்ட ஓர் இழையாகும். செரிசின் என்ற பசையின் மூலம் பட்டு இழையானது பிணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டை சுடுநீரில் இட்டு செரிசினை நீக்கி பட்டு இழையை மட்டும் பிரித்தெடுக்கிறார்கள்.[12] இவ்வாறு சுடுநீரில் இடுவதால் பட்டுக் கூட்டுப்புழு இறக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பட்டு இழையும் இறுக்கத்துடன் பின்னப்பட்டு பட்டுநூல் நூற்கப்படுகிறது. இந்த நூல் பின்னர் நூல்கட்டில் சுற்றப்பட்டு, உலர்த்தப்பட்டு, தரம்வாரியாகப் பிரிக்கப்பட்டு பொதி செய்யப்படுகிறது.

உற்பத்தி நிலைகள்

பட்டு உற்பத்திக்கான நிலைகள் பின்வருவன:

  1. பட்டுப்பூச்சி ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகிறது.
  2. பட்டுப்பூச்சியின் முட்டையிலிருந்து கம்பளிப்புழு இனமான குடம்பி என்ற பட்டுப்புழுக்கள் உருவாகின்றன.
  3. பட்டுப்புழுக்களுக்கு முசுக்கொட்டை இலைகள் உண்ண வழங்கப்படுதல்
  4. பலமுறை உருமாறும் புழுவானது பட்டு இழைகளைக் கொண்டே கூட்டை உருவாக்குகிறது.
  5. முன்னும் பின்னும் தனது எச்சில் கொண்டு பட்டு இழைகளை ஒட்டி வலையை உருக்குகிறது
  6. காற்று பட்டு எச்சியானது காய்ந்து பட்டாக உருமாறுகிறது.
  7. சராசரியாக ஒரு புழுவானது ஒரு மைல் நீளத்திற்கு இழைகளை இரண்டு மூன்று நாட்களில் தனது கூட்டில் உருவாக்குகிறது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தத்தக்க பட்டானது ஒரு கூட்டிலிருந்து கிடைக்கிறது. எனவே 2500 பட்டுப்புழுக்கள் சேர்ந்தால்தான் ஒரு பவுண்ட் பட்டு உருவாக்க முடியும்.[13]
  8. ஒட்டியிருக்கும் கூடுகளைச் சுடுநீரில் இட்டு புழுக்கள் கொள்ளப்படுகின்றன.
  9. சேதமாகாத வெளிப்புற கூட்டைத் தேய்ப்பதன் மூலம் இழையின் ஒருமுனை அறியப்படுகிறது.
  10. பின்னர் அந்த முனை கொண்டு பட்டு இழை சுற்றப்படுகிறது. ஒரு கூடானது சுமார் 1000 யார்ட் நீளப் பட்டு இழைகளைக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பக்குவப்படாத பட்டு எனப்படுகிறது. ஒரு நூலானது 48 தனித்தனியான பட்டு இழைகளால் உருவாக்கப்படுகிறது.

மல்பெரி சாகுபடி

மல்பெரி இனங்கள்

எம்.ஆர்.-2 , எஸ்-36 மற்றும் ,வி-1 ஆகிய இனங்களும் அதிக விளைச்சலைக் (மகசூலைக்) கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இனங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளர, இந்த இனங்கள் நல்ல சத்தான இலைகளைக் கொடுக்கின்றன.

எம்.ஆர்.-2(Mildew Resistant Variety –2) இனம்

இந்த இனம் 1970 ல் தமிழ்நாடு பட்டுவளர்ச்சிதுறையிணரால் மேன்மை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, வறட்சியான நிலபகுதிகளுக்கு ஏற்றது. ஒரு வருடத்தில் 10,000 – 12,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்.[14]

எஸ்-36 (S-36) இனம்

இலைகள் இதயவடிவில், தடிமனாகவும், இளம்பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் அதிகமான ஈரப்பதத்தையும், சத்துக்களையும் பெற்றிருக்கும். ஒரு ஏக்கரில், வருடத்திற்கு 20,000 – 24,000 கிலோ தரமான இலைகள் உற்பத்தியாகும்.

வி-1 (V-1) இனம்

இந்த இனம் 1997ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பிரபலமான இனம் ஆகும். இலைகள் நீள்வட்ட வடிவமாகவும், அகலமாகவும், அடர்பச்சையாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும். ஓர் ஏக்கருக்கு, ஒரு வருடத்தில் 20,000 – 24,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்.[15]

மல்பரி நடவு முறை

இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால், தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியைக் காட்டிலும், (90 + 150) செ.மீ X 60 செ.மீ இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். இதனால்,

  • ஓர் ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.
  • சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால், ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்
  • தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும்.

வேதியியல் உரம் மற்றும் தொழு உரமிடுதல்

20 டன் தொழு உரத்தை, சமமாக இரண்டாகப் பிரித்து இருமுறை இடவேண்டும். ஒரு வருடத்திற்கு, வி1 இனத்திற்கு 350:140:140 கிலோ/எக்டர் என்ற அளவிலும் எஸ்36 இனத்திற்கு 300:130:120 கிலோ/எக்டர் என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தைச் சமமாகப் பிரித்து 5 முறை இடவேண்டும்.

நீர் மேலாண்மை

80-120 மி.மீ அளவிற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம் முறையைப் பின்பற்றி 40 சதவீதம் நீரைச் சேமிக்க முடியும்.

களை நீக்குதல்

அதிகப்படியான களைகளால் தோட்டத்தில் உள்ள உரம் வீணாவதோடு மல்பரி இலைகளில் பூச்சிதாக்குதல் நேரிடும்.இலை அறுவடை முடிந்து அடிவெட்டுக்கு பின் மண்வெட்டியால் மண்ணை கொத்திவிட வேண்டும்.கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்படின் கிளைபோசேட் இரசாயன களைக்கொல்லியை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். சுற்றுசூழல் மாசு படாத வகையில் நவீன களை வெட்டும் இயந்திர உபயோகம் மிகுந்த பலன் தரும்.

நோய்த்தாக்குதல்

முசுக்கொட்டை இலைகளில் பூச்சி இனப்பெருக்க காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் அதிக அளவு புழுத்தாக்குதலினால் இலைச்சேதம் ஏற்படும். சேதத்தைக் கட்டுப்படுத்த டைக்குளோர்வோஸ் (Dichclorvos) இரசாயன பூச்சி கொல்லி மருந்தினை 1லி தண்னீரில் 2மிலி மருந்து என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் (30 நாட்கள்) முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10-12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5-6 முறை மல்பரி இலை அறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60-70 நாட்கள் ஆகும்.

பட்டுப்புழு கலப்பினங்கள்

இரு சந்ததி கலப்பினம் D1 x CSR2 (A multivoltine x bivoltine) மற்றும்

இருவழி வீரிய ஒட்டு CSR2 x CSR4 (மிதமான துணை வெப்ப மண்டல பகுதிகள்) மேலும்

இளம்புழு வளர்ப்பு

முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றை சிறந்தமுறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதிர்ந்த புழுக்களை வளர்க்குமிடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஒர் அறை வைத்திருக்க வேண்டும். ஓர் ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பும், நான்கு பக்கமும் ஜன்னல்கள் கொண்ட வளர்ப்பறைத் தேவை. வளர்ப்பறை 15 X 10 X 16 என்ற அளவில் அமைக்க வேண்டும்.

இளம்புழு வளர்ப்பு சாதனங்கள்

3 X 2 அடி அளவுள்ள நெகிழித் (பிளாஸ்டிக்) தட்டுகளைத் தாங்கிகளில் வைத்துப் புழுக்களை வளர்க்க வேண்டும்.

முட்டை பொரிப்பு முன்னேற்பாடுகள்

இளம்புழு வளர்ப்பறை மற்றும் புழு வளர்ப்புத் தளவாடங்களை 2.5 சதம் குளோரின் டை ஆக்ஸைடு திரவம் கொண்டு கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

பட்டுப்புழு முட்டையைப் பாதுகாத்தல்

வித்தகத்திலிருந்து பட்டுப்புழு முட்டையைத் துளையிட்ட காகிதத்தில் சுற்றி வெயில் படாதவாறு காலை நேரத்தில் எடுத்துச்செல்ல வேண்டும். கிருமிநீக்கம் செய்யப்பட்ட அறையில் இளம்புழு வளர்ப்பு தட்டுகளில் பட்டுப்புழு முட்டையை ஒவ்வொன்றும் தனியாக இருக்குமாறு பரப்பி வைக்கவேண்டும் (தகுந்த வெப்ப தட்ப நிலையில்) முட்டையிட்ட தேதியிலிருந்து ஒருவார காலத்தில் முட்டையில் கரும்புள்ளி தோன்ற ஆரம்பித்ததும் (முட்டை பொரிப்பதற்கு 48 மணி நேரம் முன்பு) முட்டைகளில் கருவின் தலை உருவாகி நீல நிறம் அடையும் நிலையில் பட்டுப்புழு முட்டையை வெளிச்சம் படாதவாறு கருப்புதாளில் (கருப்புப்பெட்டி) சுற்றி இரண்டு நாட்கள் அடைகாக்க வேண்டும்.

கறுப்புப்பெட்டி அடைகாத்தல்

பட்டுப்புழு முட்டைகள் 25 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 80 சத ஈரப்பதம் கொண்ட சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும். இதனால் முட்டை பொரிப்பது சீராக இருக்கும்.முட்டைகளின் மேல் கறுப்புக் காகிதம் மூடி இருளில் வைப்பதால் கரு முழுமையாகச் சீராக வளர்ச்சியடையும்.

முட்டை பொரிப்பு

பருவ நிலைக்கேற்ப முட்டைகள் 8 முதல் 10 நாட்களில் பொரித்து விடுகின்றன. முட்டைகள் பொரிக்கும் நாளன்று, காலைபொழுதில் கறுப்புப்பெட்டியை திறந்து பட்டுப்புழு முட்டையை ஒவ்வொன்றும் தனியாக இருக்குமாறு பரப்பி வைக்க வேண்டும். ஒன்றிரண்டு புழுக்கள் வெளிவருவதைக் கண்டவுடன், வெளிச்சத்தின் தூண்டுதலால் சீராக முட்டைகள் பொரித்து விடும்.

முட்டைகளிலிருந்து புழுக்களைப் பிரித்தல்

முட்டை அட்டையிலிருந்து, புழுக்கள் சீராகப் பொரித்து வந்தவுடன் புதிதாகப் பறிக்கப்பட்ட இளம் மல்பெரித் தழைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி இலைத் துணுக்குகளைப் பரவலாகத் தூவுதல் வேண்டும். முட்டை அட்டைகளின் மேல் ஒட்டியிருக்கும் ஒன்றிரண்டு புழுக்களை மெதுவாக இறகால், புழு வளர்ப்புத் தட்டுகளுக்கு மாற்றுதல் வேண்டும்.

இலையின் தரம்

மல்பெரிச் செடியின் துளிரின் கீழே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது இலைகள் இளம்புழு வளர்ப்பிற்கேற்ற வகையில் புரதம் மற்றும் மாவுச்சத்து மிக்கதாய் உள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் போதிய அளவு இயற்கை உரம் அளிப்பதால் சத்து மிக்க இலைகள் கிடைக்கின்றன. இளம்புழு வளர்ப்பில் தழைகளின் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மல்பெரித் தழைகளை எப்போதும் இளங்காலை அல்லது மாலை நேரங்களில் பறிக்க வேண்டும். தழைகளைத் தகுந்த இலைப் பாதுகாப்பு பெட்டிகளில் வைத்துச் சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடிப் பாதுகாக்க வேண்டும்.

உணவளித்தல்

பருவ நிலைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறை இளம்புழுக்களுக்கு சீரான கால இடைவெளியில் உணவளிக்க வேண்டும். புழுக்களின் வளர்ச்சிக்கேற்ப இலைத் துணுக்குகளின் அளவை அதிகமாக்கிக் கொள்ளலாம்.

சுத்தம் செய்தல்

தோலுரிப்பின் போது இளம்புழுக்களைக் தகுந்த முறையில் கையாள்வது அவசியம். இளம்புழுக்கள் மூன்று நாட்கள் கழித்து தோலுரிப்பும். அதற்கடுத்த மூன்று தினங்களில் இரண்டாம் தோலுரிப்பும் முடிந்து மூன்றாம் பருவத்தை அடையும். தோலுரிப்பு சமயத்தில் வளர்ப்பு படுக்கைகளை நன்கு உலர வைக்க வேண்டும். தோலுரிப்பின் போது நல்ல காற்றோட்டமாகவும். சலனமடையாமலும் வைத்திருக்க வேண்டும்.

கிருமி நாசினி

புழுக்களுக்குத் தகுந்த இடைவெளியும், காற்றோட்டமும், சுகாதாரச் சுழலும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு தோலுரிப்பின் போதும் உணவளிக்கும் முன் படுக்கை கிருமி நாசினித் தூளைத் தூவ வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளின் தொற்று பரவாது.

வளர்ந்த புழு வளர்ப்பு

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைப்புழுக்கள் முதிர்ந்த புழுக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இப்பருவத்தில் வெப்பநிலை 25 செல்சியஸ் அளவிலும் ஈரப்பதம் 70 வீதமும் இருக்க வேண்டும். வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணும்.

வளர்ப்பு மனை

மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-28 சி வெப்பமும் 70-80% ஈரப்பதமும் தேவை.

நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு மனையின் கூறை அமைக்கும் போதும், கட்டிடத்தை வடிவமைக்கும் போதும், குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளைச் சேமிப்பதற்கும், இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும், தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏற்றவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும்.

பட்டுபுழு வளர்ப்பின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 700 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).

புழு வளர்ப்புத் தாங்கிகள்

முதிர்ந்த புழுக்களை வளர்ப்பதற்கு, மர சட்டங்களால் ஆன தாங்கிகள் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தாங்கிகளில் வலைகளைக் கொண்ட 50 செ.மீ. இடைவெளில் மூன்று படுக்கைகளை, கட்டில் போன்று பின்ன வேண்டும்.]

வளர்ப்புச் சாதனங்கள்

அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின் வெப்பத்தைக் குறைக்கவும், புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம்.

கிருமி நீக்கம் செய்தல்

வளர்ப்பு மனையையும், வளர்ப்புச் சாதனங்களையும் இருமுறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் 5% பிளீச்சிங் பவுடரிலும், அடுத்து வளர்ப்பு தொடங்கும் 2 தினங்களுக்கு முன் 2.5% சேனிடெக் கொண்டும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

தண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி

இம்முறையில், கடைசி மூன்று பருவங்களில் உள்ள புழுக்களுக்கு இலைகளைத் தண்டோடு அறுவடை செய்து உணவளித்துப் புழு வளர்க்கலாம். தண்டு வளர்ப்பில் 40% வேலையாட்கள் குறைவதற்கு இது சிக்கன வழியாகும். இத்திட்டத்தின் பிற நன்மைகள்,

  • புழுக்களைக் கையால் தொடுவது குறைவதால் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.
  • புழுக்களும், இலைகளும் புழுக்களின் கழிவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால், இரண்டாம் நிலைத் தொற்று நோய் பரவலைத் தடுக்க முடிகிறது நல்ல சுகாதாரமான சூழல் பராமரிக்கப்படுகிறது.
  • இலைகளின் தரம், அறுவடையின் போதும், புழுப்படுக்கையிலும் நன்கு காக்கப்படுகிறது.
  • புழுப்படுக்கையில் நல்ல காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது.
  • புழுக்கள் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து நன்கு வளர்வதால் தரமான கூடுகள் கிடைக்கின்றன.
  • இம்முறையில் செலவுகள் குறைகிறது.

உணவளித்தல்

50-55 நாட்கள் வயதுடைய 3/4 அடி உயரத்தில் உள்ள தண்டுகளைக் காலையில் குளிர்ச்சியான சமயத்தில் அறுவடை செய்த தண்டுகளை நிழற்பாங்கான, குளிர்வான, ஈரப்பதம் உள்ள இடத்தில், சுத்தமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட கோணிப்பைகளைக் கொண்டு போர்த்திப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் தண்டுகளைப் படுக்கைகளில் நீளவாக்கில் போட வேண்டும். தண்டுகளின் நுனிகள் எதிரெதிராக அமையுமாறு மாற்றி அடுக்குவதால் அனைத்துப் புழுக்களுக்கும் தரமான இலை கிடைக்க ஏதுவாகிறது. தினமும் மூன்று முறை உணவளிக்க வேண்டும்.முற்றிய இலைகளையோ அல்லது மண்ணுடன் உள்ள இலைகளையோ கொடுக்கக்கூடாது. புழுக்களைப் படுக்கையில் சீராகக் கிடக்கச் செய்ய வேண்டும்.100 நோயற்ற முட்டைத் தொகுதிக்கு, 5 ஆம் பருவ கடைசியில் 700 சதுரஅடி இடம் தேவைப்படும்.

புழு படுக்கைகளைச் சுத்தம் செய்தல்

ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது, நோய் பரவுவதைத் தடுக்க, எடைகுறைவான புழுக்களையும், நோய் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய புழுக்களைப் பற்றுக் குச்சிக்கொண்டு அகற்ற வேண்டும். பொறுக்கிய புழுக்களை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் நீர்த்த சுண்ணாம்பில் போட வேண்டும். படுக்கையில் உள்ள கழிவுகளைத் தரையில் போட்டுவிடக்கூடாது. ஈரப்பதம் மூன்றாம் பருவத்திற்கு 80 சதவீதமும், நான்கு மற்றும் ஐந்தாம் பருவத்திற்கு 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும். வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தேவைக்கேற்ப பராமரிக்க வேண்டும். குளிர் சாதன பெட்டி, வெப்பக்கருவி, கரிஅடுப்பு, ஈரக்கோணிப்பை, கொண்டு தேவைக்கேற்ப வெப்பத்தையோ, குளிர்ச்சியையோ பெறமுடியும். மேலும் கூரைமீது நீர் தெளித்தும், ஈரமணல் கொண்டும் பராமரிக்க முடியும். குறுக்காகக் காற்றோட்ட வசதி செய்து புழுக்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை

தோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றி இருக்க வேண்டும். புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன், படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும். திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும், அதிவேகமான காற்றையும், அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும். 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவளிக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் பராமரிப்பு

  • வளர்ப்பு மனைக்குள் செல்வதற்கு முன்பு, கை, கால்களைக் கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். *முதலில் சோப்பு போட்டுக் கழுவிய பின்பு கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும் (2.5 சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்பு கரைசல்)
  • நோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும், படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும், உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமி நாசினிக் கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும்
  • நோய்தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்.
  • பட்டுப்புழு வளர்ப்பின் போது, வளர்ப்பு மனையைச் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும்.

புழுப்படுக்கை கிருமிநாசினி பயன்படுத்துதல்

விஜேதா, விஜேதா கிரீன், அங்குஷ் ஆகியவற்றை புழு படுக்கையில் மற்றும் புழுக்களின் மேல் தூவியும் நோய்களைத் தடுக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். ஒவ்வொரு தோலுரிப்பிற்குப் பின்பும், 5 ஆம் பருவத்தில் 4 ஆம் நாளும் புழுப்படுக்கையின் மீது ஒரு சதுர அடிக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி ஒரே சீராக எல்லா புழுக்களின் மீதும் படும்படி தூவவேண்டும்.

முதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்

ஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றி, உணவு உண்பதை நிறுத்திக் கூடு கட்ட இடம் தேடும். நல்ல தரமான கூடுகளைப் பெற, முதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில், தரமான கூடு கட்டும் தட்டுகளில், விடவேண்டும். கூடு கட்டு தட்டின் அளவை மீறிப் புழுக்களைத் தட்டியில் விடக்கூடாது. புழுக்கள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் போது. 24சி வெப்பமும் 60-70 சதவீதம் ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை.

பட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்

கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்ய வேண்டும். நலிந்த கூடுகளை அகற்ற வேண்டும். பின்பு கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். குளிர் காலத்தில் 1 நாள் தாமதித்து அறுவடை செய்ய வேண்டும்.

விற்பனை

அறுவடை செய்த கூடுகளைக் குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக்கூடிய நைலான்/சணல் வலைப்பைகளில் காற்றோட்டமாக நிரப்பி, அறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.

பட்டுப்புழு கூடு மகசூல்

100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Mahatma Gandhi: 100 years", 1968, p. 349
  2. Silk Moths Fly Free[தொடர்பிழந்த இணைப்பு] Kusuma Rajaiah's Ahimsa project.
  3. Silk saree without killing a single silkworm Another article about Rajaiah and his methods.
  4. "Down and Silk: Birds and Insects Exploited for Fabric". விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள். பார்க்கப்பட்ட நாள் 6 January 2007.
  5. Barber, E. J. W. (1992). Prehistoric textiles: the development of cloth in the Neolithic and Bronze Ages with special reference to the Aegean (reprint, illustrated ed.). Princeton University Press. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-00224-8. பார்க்கப்பட்ட நாள் 6 November 2010.
  6. http://sjzntv.cn/news/ms/2015/10/2015-10-29240509.html பரணிடப்பட்டது 2018-02-08 at the வந்தவழி இயந்திரம் 1977年在石家庄长安区南村镇南杨庄出土的5400-5500年前的陶质蚕蛹,是仿照家蚕蛹烧制的陶器,这是目前发现的人类饲养家蚕的最古老的文物证据。
  7. GOOD, I. L., et al. "New Evidence for Early Silk in the Indus Civilization." Archaeometry, vol. 51, no. 3, June 2009, pp. 457-466. EBSCOhost, doi:10.1111/j.1475-4754.2008.00454.x.
  8. Vainker, Shelagh (2004). Chinese Silk: A Cultural History. Rutgers University Press. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-3446-1.
  9. Hill, John E. 2003. "Annotated Translation of the Chapter on the Western Regions according to the Hou Hanshu." 2nd Draft Edition. Appendix A.
  10. "History of Sericulture" (PDF). Governmentof Andhra Pradesh (India) – Department of Sericulture. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  11. Muthesius, "Silk in the Medieval World", p. 331.
  12. Bezzina, Neville. "Silk Production Process". Sense of Nature Research. Archived from the original on 29 June 2012.
  13. "Silk Making: How to Make Silk". TexereSilk.com. Archived from the original on 26 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  14. http://www.tnsericulture.gov.in/prototype2/Mulvarieties.htm
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.

வெளியிணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sericulture
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

பட்டுக்கூடு அன்றாட விலை நிலவரம்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!