இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அணிகளால் விளையாடப்படுகின்றது. இத்தொடர் 2008ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டதாகும். ஐபிஎல் தொடர், ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் தனி விதிவிலக்கைப் பெற்றுள்ளது, அதன்படி ஏப்ரல்-மே மாதங்களில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை.
ஐபிஎல், உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். மேலும் 2014ஆம் ஆண்டு அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் சராசரி வருகையின் அடிப்படையில் ஐபிஎல் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2010ஆம் ஆண்டில், ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உலகின் முதல் விளையாட்டு நிகழ்வாக ஆனது. 2018ஆம் ஆண்டில் ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று டஃப் & பெல்ப்ஸ் தெரிவித்துள்ளது.[1] 2015 ஐபிஎல் பருவமானது இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 பில்லியன் ரூபாய் அளவிற்குப் பங்களித்திருந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.[2]
2007இல் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிதியுதவியுடன் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) நிறுவப்பட்டது.[4] இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ (பி.சி.சி.ஐ) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையோ (ஐ.சி.சி) ஏற்றுக்கொள்ளவில்லை,[5] பி.சி.சி.ஐ தனது குழு உறுப்பினர்கள் ஐ.சி.எல் நிர்வாகக் குழுவில் இணைந்ததில் உடன்படவில்லை. மேலும் ஐ.சி.எல் தொடரில் வீரர்கள் இணைவதைத் தடுக்க, பி.சி.சி.ஐ தங்கள் சொந்த உள்நாட்டு போட்டிகளில் பரிசுத் தொகையை அதிகரித்ததுடன், தங்களுக்குப் போட்டியாகக் கருதப்படும் ஐ.சி.எல் தொடரில் சேரும் வீரர்கள் மீது வாழ்நாள் தடையும் விதித்தது.[6][7]
தொடக்கம்
செப்டம்பர் 13, 2007 அன்று, இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் உரிமைக்குழுவை அடிப்படையாகக் கொண்ட இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரைத் தொடங்குவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது, அதன் முதல் பருவம் ஏப்ரல் 2008இல் புதுதில்லியில் ஒரு "உயர்தர விழாவில்" தொடங்கத் திட்டமிடப்பட்டது. ஐபிஎல் திட்டத்தை செயலாற்றியவராகக் கருதப்படும் பி.சி.சி.ஐ.யின் துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் போட்டித் தொடரின் வடிவம், பரிசுத் தொகை, உரிமைக்குழு வருவாய் அமைப்பு, அணியின் வடிவம் குறித்த விதிகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார். முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகளை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட ஆளும் குழுவால் ஐபிஎல் நடத்தப்படும் என்றும், தொடரின் முதல் இரு அணிகள் அந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடருக்குத் தகுதி பெறும் என்றும் தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளாக தாங்கள் இந்த யோசனையைச் செய்து வருவதாகவும், ஐ.சி.எல்-க்கு எதிர்வினையாக ஐபிஎல் தொடங்கப்படவில்லை என்றும் லலித் மோடி தெளிவுபடுத்தினார்.[8] இதன் வடிவம் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் அமெரிக்காவின் என்.பி.ஏ போன்று இருந்தது.
ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களைத் தீர்மானிப்பதற்காக, ஜனவரி 24, 2008 அன்று ஏலங்கள் நடத்தப்பட்டன. உரிமையாளர்களின் மொத்த அடிப்படை விலை ஏறத்தாழ 400 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஏலத்தின் முடிவில், வென்ற ஏலதாரர்களின் பெயர்களும் அவர்களது அணிகள் அமைந்திருக்கும் நகரங்களான பெங்களூர், சென்னை, தில்லி, ஐதராபாத்து, செய்ப்பூர், கொல்கத்தா, மொகாலி, மும்பை ஆகியவையும் அறிவிக்கப்பட்டன. இறுதியில், உரிமைக்குழுக்கள் அனைத்தும் மொத்தம் 723.59 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டன. பிறகு 2008இல் இந்திய கிரிக்கெட் லீக் வழக்கொழிந்துப் போனது.[9]
விரிவாக்கங்களும் செயலிழப்புகளும்
மார்ச் 21, 2010 அன்று, புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா ஆகிய இரண்டு புதிய உரிமைக்குழுக்கள் 2011ஆம் ஆண்டு ஐபிஎல்லின் நான்காவது பருவத்துக்கு முன்பு தொடரில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[10] சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் குழுமம் புனே உரிமையை 370 மில்லியன் டாலருக்கும், ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனம் கொச்சி உரிமையை 333.3 மில்லியன் டாலருக்கும் வாங்கியது. இருப்பினும், ஒரு வருடம் கழித்து, பி.சி.சி.ஐ.யின் நிபந்தனைகளை மீறியதால் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா அணி செயலிழக்கப்படும் என்று 11 நவம்பர் 2011இல் அறிவிக்கப்பட்டது.[11]
பின்னர், செப்டம்பர் 14, 2012 அன்று, புதிய உரிமையாளர்களைக் கண்டறிய இயலாமல் போனதைத் தொடர்ந்து, 2009 வாகையாளர்களான டெக்கான் சார்ஜர்ஸ் அணி செயலிழக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.[12] பிறகு அக்டோபர் 25 அன்று, மாற்று உரிமைக்குழுவின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய ஏலம் நடைபெற்றது. ஐதராபாத் உரிமைக்குழுவுக்காக நடைபெற்ற ஏலத்தில் சன் டிவி நெட்வொர்க் வென்றது.[13] அந்த உரிமைக்குழுவின் அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்று பெயரிடப்பட்டது.[14]
பி.சி.சி.ஐ உடனான நிதி வேறுபாடுகள் காரணமாக புனே வாரியர்ஸ் இந்தியா 21 மே 2013 அன்று ஐ.பி.எல்லில் இருந்து விலகியது.[15] தேவையான வங்கி உத்தரவாதத்தை வழங்கத் தவறியதால் அந்த உரிமைக்குழு 26 அக்டோபர் 2013 அன்று பிசிசிஐயால் முறையாக செயலிழக்கப்பட்டது.[16]
14 ஜூன் 2015 அன்று, இரண்டு முறை வாகை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தொடக்கப் பருவத்தில் வாகை சூடிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் சூதாட்டத்தில் பங்குபெற்றதற்காக அடுத்துவரும் இரண்டு பருவங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[17] பின்னர், 8 டிசம்பர் 2015 அன்று, ஏலத்தைத் தொடர்ந்து, புனே மற்றும் ராஜ்கோட் ஆகிய இரு உரிமைக்குழுக்களும் சென்னை மற்றும் ராஜஸ்தானுக்கு மாற்றாக இரண்டு பருவங்களுக்கு செயல்படும் என்று தெரியவந்தது.[18] இரு அணிகளுக்கும் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு மற்றும் குஜராத் லயன்சு என்று பெயரிடப்பட்டது மற்றும் 2018ஆம் ஆண்டில் இறு அணிகளும் கலைக்கப்பட்டது மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் திரும்பி வந்தன.[19][20]
அமைப்பு
வீரர்கள் ஒப்பந்த முறை, அணியின் அமைப்பு, வருமானம்
ஆண்டுதோறும் நடைபெறும் வீரர்கள் ஏலம், மற்ற அணிகளுடன் வீரர்களை வர்த்தகம் செய்தல், கிடைக்காத வீரர்களுக்கு மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்தல் ஆகிய மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒரு அணியால் வீரர்களைப் பெற முடியும். பொதுவாக ஐபிஎல்லில் பங்குபெற விரும்பும் வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்து, தங்களது அடிப்படை விலையையும் நிர்ணயிக்கின்றனர். பிறகு அவர்களை ஏலத்தின் மூலம் அணிகள் வாங்குகின்றன. ஏலத்தில் விற்கப்படாத வீரர்கள் மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்யத் தகுதிபெறுகின்றனர். வர்த்தக முறையில், ஒரு வீரரின் ஒப்புதலுடன் மட்டுமே அவரை மற்ற அணிக்கு வர்த்தகம் செய்ய முடியும், பழைய மற்றும் புதிய ஒப்பந்தங்களின் விலைகளுக்கிடையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அந்த விலையை குறிப்பிட்ட வீரரின் அணியே செலுத்தும். புதிய ஒப்பந்தம் பழையதை விட அதிகமாக இருந்தால், வீரருக்கும் வீரரை விற்கும் உரிமையாளருக்கும் விலை வித்தியாசம் பகிரப்படும். பொதுவாக ஏலத்திற்கு முன்பு இரண்டு மற்றும் ஏலத்திற்குப் பிறகு ஒன்று என மூன்று விதமான வர்த்தக முறைகள் உள்ளன. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு. வர்த்தக முறையில் வீரர்களை வர்த்தகம் செய்ய இயலாது. ஆனால் போட்டிகளுக்கு முன்பாகவோ அல்லது இடையிலோ மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இயலும்.
அணி அமைப்பு குறித்த ஒருசில விதிகள் (2020 பருவத்தின் படி) பின்வருமாறு:
அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இருக்க வேண்டும், அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம்.
அணி வீரர்களின் மொத்த ஒப்பந்தத் தொகை 850 மில்லியனை ($12 மில்லியன்) விட அதிகமாக இருக்கக்கூடாது.[21]
முதல் தரம் அல்லது பட்டியல் அ போட்டிகளில் விளையாடி இருந்தால் மட்டுமே 19 வயதுக்குட்பட்ட வீரர்களைத் தேர்வு செய்ய முடியும்.
ஒரு அணி தனது ஆடும் பதினொருவரில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்க முடியும்.[22]
போட்டி விதிகள்
ஐபிஎல் விளையாட்டுகள் தொலைக்காட்சி நேரத்தை பயன்படுத்துகின்றன, எனவே அணிகள் தங்கள் ஆட்டப்பகுதியை முடிக்க வேண்டிய குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை. இருப்பினும், இந்த சலுகையை தவறாகப் பயன்படுத்துவதாக நடுவர்கள் கருதினால் அபராதம் விதிக்கப்படலாம். ஒவ்வொரு ஆட்டப்பகுதியிலும் ஒவ்வொரு அணிக்கும் இரண்டரை நிமிட இடைவேளை வழங்கப்படும். இதை பந்துவீசும் அணி 6 மற்றும் 9வது நிறைவுகளுக்கு இடையிலும் மட்டையாடும் அணி 13 மற்றும் 16வது நிறைவுகளுக்கு இடையிலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.[23]
2018 பருவத்தில் இருந்து, அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் நடுவர் முடிவு மீளாய்வு முறைமை பயன்படுத்தப்படுகிறது, அதன்படி ஒவ்வொரு அணிக்கும் களத்திலுள்ள நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒரு ஆட்டப்பகுதிக்கு ஒன்று என்ற விகிதத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.[24]
ஆரஞ்சு தொப்பி- தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளருக்கு வழங்கப்படுகிறது
ஊதா தொப்பி- தொடரில் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய பந்துவீச்சாளருக்கு வழங்கப்படுகிறது
ஒளிபரப்பு
2008இல் இந்தியாவின் சோனி தொலைக்காட்சி நிறுவனமும் சிங்கப்பூரின் வேர்ல்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு 10 வருட ஒப்பந்தமாக ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.026 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். உள்நாட்டில் சோனி நிறுவனமும் பன்னாட்டு அளவில் வேல்ர்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் போட்டிகளை ஒளிபரப்பின.
செப்டம்பர் 2018இல் ஐபிஎல் போட்டிகளின் 5 வருட உலகளாவிய ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். துடுப்பாட்ட வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒளிபரப்பு ஒப்பந்தமான இது முந்தைய ஐபிஎல் ஒப்பந்தத்தை விட 158% அதிகமானதாகும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலமாகவும் இணையதளத்தில் ஹாட்ஸ்டார் என்ற செயலி மூலமாகவும் ஐபிஎல் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. ஹாட்ஸ்டார் செயலியில் சந்தா செலுத்திய பயனர்களால் மட்டுமே போட்டிகளைக் காண இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.[58]
ஐபிஎல் தொடரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐபிஎல் ஆளுங்குழு பொறுப்பேற்கிறது. ஜனவரி 2016இல் இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா குழுவானது, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டிற்கும் தனித்தனியே ஆளுங்குழுக்களை அமைக்கப் பரிந்துரைத்தது. அதன்படி ஐபிஎல் ஆளுங்குழு உருவானது.
↑"Law 15 – Intervals". Indian Premier League. Archived from the original on 17 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 20 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)