இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் மட்டையாட வழங்கப்படுகின்றது.
ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான உணர்வை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது இந்திய துடுப்பாட்ட அணி வெற்றியப் பெற்றது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன.[1] 2009 நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வெற்றியைப் பெற்றது.[2]
இந்த போட்டிகளில் முதல் 6 நிறைவுகள் 'பவர் பிளே' என அழைக்கப்படுகிறது. இந்த 6 நிறைவுகளில் வெளிபுற மைதானத்தில் இரண்டு வீரர்கள் மட்டுமே இருக்க முடியும். இரண்டு அணிகளும் தங்களது இன்னிங்சை முடித்த பின்னர். எந்த அணி அதிக ஓட்டங்கள் எடுத்து உள்ளதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவடையும். மழை போன்ற காரணங்களால் ஆட்டம் தடைப்பட்டால் டார்க் வெர்த் லீவீஸ் முறை மூலம் முடிவு அறிவிக்கப்படும். இதில் டி.எல்.எஸ் ஸ்கோரை இரண்டாவது மட்டையாடும் ஆணி கடந்திருந்தால் அல்லது அதே அளவு ஒட்டங்களை எடுத்திருந்தால் அவ்வணியே வெற்றி பெறும்.
அதை எடுக்காவிட்டால் முதலாவதாக மட்டையாடிய அணியே வெற்றி பெறும். முதல் அணி மட்டையாடும் போதே ஆட்டம் கைவிடப்பட்டால், ஆட்டம் ரத்து செய்யப்படும்.
இரண்டு அணிகளும் தங்களது இன்னிங்சை முடித்த பிறகும் சமமான ஓட்டங்கள் எடுத்து இருந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதில் இரண்டு அணிகளும் ஒரு நிறைவு ஆட வேண்டும். அதில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும். அதிலும் சம ஓட்டங்கள் எடுத்து இருந்தால் ஆட்டம் சமன் ஆனதாக அறிவிக்கப்படும்.
உலகக் கிண்ண இருபது20 தொடர்
இப்போட்டிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் 12 அணிகள் போட்டியிடுகின்றன. இப்போட்டிகள் இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. இத்தொடர் முதன்முறையாக 2007இல் நடைபெற்றது.