ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி (First Lady of the United States, FLOTUS),[1] அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மனைவிக்கு, அவரது பணிக்காலத்துடன் இணைந்து, வழமையாக வழங்கப்படும் முறைசாரா பட்டமாகும். வரலாற்றில், குடியரசுத் தலைவருக்கு மனைவி இல்லாவிடினோ அல்லது அவரது மனைவியால் இப்பொறுப்பேற்க இயலாவிடினோ, தனது பெண் உறவினர் அல்லது நண்பரை வெள்ளை மாளிகை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கக் கேட்டுக் கொள்கிறார்.
இந்தப் பொறுப்பு அலுவல்முறையில் அமையாதது; எந்த அலுவல்முறை பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. இருப்பினும், வழமையாக கூட்டரசில் முதல் சீமாட்டிகள் கூடுதலாகத் தென்படும் இடத்தில் உள்ளனர்.[2] கடந்த நூற்றாண்டுகளில் முதல் சீமாட்டியின் பங்கு தெளிவுற்று வந்துள்ளது. முதலும் முடிவுமாக முதல் சீமாட்டி வெள்ளை மாளிகையின் அழைப்பாளர் ஆவார்.[2] அரசின் அலுவல்முறையான விருந்துகளையும் விழாக்களையும் ஒருங்கிணைப்பது இவரே; மற்ற அரசுகள் வழங்கும் விருந்துகளிலும் விழாக்களிலும் குடியரசுத் தலைவருடனோ அல்லது அவருக்கு மாற்றாகவோ வருகை புரிவதும் இவரேயாகும்.
தற்போதைய முதல் சீமாட்டியாக மிசெல் ஒபாமா உள்ளார். தற்போது வாழ்ந்துவரும் முன்னாள் முதல் சீமாட்டிகளாக நால்வர் உள்ளனர்: ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோசலின் கார்ட்டர்; ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் மனைவி பார்பரா புஷ்; பில் கிளின்டன் மனைவி இலரி கிளின்டன்; மற்றும் ஜார்ஜ் வாக்கர் புஷ் மனைவி இலாரா புஷ்.