ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.
ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.
ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.
முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.
தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]
அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8], எக்குவடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.