புரூணை (மலாய் மொழி: Negara Brunei Darussalam; ஆங்கிலம்: Brunei Darussalam; சாவி: Jawi: نݢارا بروني دارالسلام) என்பது போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.[2] இதன் வடக்கில் தென் சீனக் கடல் உள்ளது. இதர பாகங்களில் மலேசியாவின்சரவாக் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்த நாடு 1984 சனவரி 1-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலைப் பெற்றது.
சரவாக் மாநிலத்தின் லிம்பாங் மாவட்டத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோவில் ஒரே இறையாண்மை கொண்ட நாடு புரூணை மட்டுமே. போர்னியோ தீவின் எஞ்சிய பகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.
புரூணை அரசாங்கம் அதன் சுல்தானால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சியாகும். யாங் டி-பெர்துவான் என்று அழைக்கப்படுகிறார். இந்த நாடு ஆங்கில பொதுச் சட்டம்; சரியா சட்டம் மற்றும் பொது இசுலாமிய நடைமுறைகளின் கலவையைச் செயல்படுத்துகிறது.
பொது
புரூணை பேரரசின் உச்சத்தில், சுல்தான் போல்கியா (1485-1528 ஆட்சி) போர்னியோவின் பெரும்பாலான பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்றைய சரவாக் மற்றும் சபா, அத்துடன் போர்னியோவின் வடகிழக்கு முனையில் உள்ள சுலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago) உட்பட பல பகுதிகள் புரூணை பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியும் இந்தப் பேரரசின் கீழ் இருந்தது.[3]
மேலும் அது சபா மாநிலத்தைப் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திடம்(British North Borneo Chartered Company) ஒப்படைத்தது. தன்னுடைய நிலப் பகுதிகளை புரூணைவிட்டுக் கொடுத்ததனால் காலப் போக்கில் வீழ்ச்சி அடைந்தது.
சுல்தான் அசனல் போல்கியா
1888-இல், புரூணை நாடு பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1959-இல் ஒரு புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டது. 1962-இல், முடியாட்சிக்கு எதிரான ஒரு சிறிய ஆயுதக் கிளர்ச்சி நடந்தது. ஆங்கிலேயர்களின் உதவியுடன் அந்தக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1967-ஆம் ஆண்டு முதல் சுல்தான் அசனல் போல்கியாவால் (Hassanal Bolkiah) புரூணை வழிநடத்தப்பட்டு வருகிறது. 1984 சனவரி 1-ஆம் தேதி, பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.