ரொபேர்டோ ரெமிகோ பெனினி (Roberto Remigio Benigni) பிறப்பு அக்டோபர் 27 ,1952) என்பவர் இத்தாலியநடிகர், நகைச்சுவைநடிகர், திரைக்கதைஎழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் லைஃப் இஸ் பியூட்டிபுல் எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி , நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதும், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதமி விருதும் கிடைத்தது. ஜிம் ஜார்முஷ் எனும் இயக்குநருடன் இணைந்து 1986 இல் டவுன் பை லா, 1991 இல் நைட் ஆன் எர்த், 2003 இல் காஃபி அண்ட் சிகரட்ஸ் ஆகிய மூன்று திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
1970 ஆம் ஆண்டில் இத்தாலியில் வெளிவந்த ஓன்டா லிபேரா எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இவர் பரவலாக அறியப்படுகிறார். இந்தத் தொலைக்காட்சித் தொடரை ரென்சோ அர்போர் என்பவர் தயாரித்தார். இவரின் முதல் திரைப்படம் பெட்ரோலூசி இயக்கிய பெர்லின்குவர் ஐ லவ் யூ ஆகும் . இது 1977 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
1976 இல் அல்பேரா டொமினிக்கொ எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்த போது இவரின் புகழ் இன்னும் அதிகமானது. இதில் ஒரு சோம்பேறியான விமர்சகராக அதாவது படமே பார்க்காமல் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் நபராக சித்தரிக்கப்பட்டிருப்பார். பின் பெர்னார்டோ பட்ரோலுசியின் இயக்கத்தில் லா லுனா எனும் திரைப்படத்தில் நடித்தார்.
1980 களில்
1980 ஆம் ஆண்டில் இத்தாலியின் வடக்கு பகுதியான செசனேட்டைச் சார்ந்த நிகோலத்தா பிராச்சி என்பவரைச் சந்தித்தார். பின் அவரைத் திருமணம் புரிந்தார். பிற்காலத்தில் பெனினி இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இவரின் மனைவியான நிகோலத்தா நடித்துள்ளார். ஜூன், 1983 இல் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பொது விளக்கக் கூட்டத்தில் பங்கெடுத்தார். இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் து மி டர்பி (யூ அப்சட் மீ) ஆகும். இது 1983 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிராசியுடன் முதன்முறையாக இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்.1984 ஆம் ஆண்டில் நத்திங் லெஃப்ட் டு டூ பட் கிரை எனும் திரைப்படத்தில் வரைகதைநடிகரானமசிமோ துரோசி என்பவருடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.
கௌரவங்கள்
பெனினி சர்வதேச அளவில் பல பல்கலைக்கழகங்களிலிருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இசுரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பிரிவில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். 2002 இல் இத்தாலியில் உள்ள பொலோக்னா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. 2015 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள தொராண்டோ பல்கலைக்கழகம் இவருக்கு சட்டவியலில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[4]