தேசிய நெடுஞ்சாலை 87 (தே. நெ. 87) தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பாம்பன் தீவு நுழைவதற்கு முன்பு பாம்பன் பாலத்தை (அன்னை இந்திரா காந்தி பாலம்) கடக்கிறது. இதன் மொத்த நீளம் 154 km (96 mi) கிமீ (96 மைல்) ஆகும்.[1] முகுந்தராயர் சத்திரத்திற்கும் தனுசுகோடிக்கும் இடையேயான 5 கி. மீ. சாலை 1964 சூறாவளியின் போது அழிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு புதிய சாலையை நிர்மாணித்தது. 2015ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பணிகள் பிப்ரவரி 2017 அன்று 250 மில்லியன் ரூபாய் செலவில் சில வாகனக் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. அதே நேரத்தில், மதுரை-இராமேசுவரம் இடையேயான சாலை இரு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. பின்னர் மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 17 சூலை 2015 அன்று மதுரையில் ரூ. 1,387 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 927 கோடி ஆரம்ப ஒதுக்கீடு (மே 2019) செய்யப்பட்டு, 1,387 கோடி ரூபாய்க்கு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மதுரை பரமக்குடி வரையிலான முதல் 75 கி. மீ. நீளமுள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், பரமக்குடி இராமநாதபுரம் வரையிலான மீதமுள்ள 39 கி. மீ நீளமுள்ள சாலைகளை இரண்டு வழிச் சாலைகளாக அகலப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் மதுரையிலிருந்து மேலூர் வரைச் செல்லும் புறவழிச்சாலை ஒன்றும் (விராகனூர் வளைய சாலை) அமைக்கப்பட்டது. இப்பாதை புலியங்குளம்-சிலைமான் வழியாகச் செல்லும் பாதையினைத் தவிர்த்து அமைக்கப்பட்டது. இச்சாலை திருப்புவனம், திருப்பாச்சி, ராஜகம்பிராம், பரமக்குடி (9.4 கி.மீ. நீளமுள்ள தெலிசாநல்லூர் வந்தோணி இணைப்புச்சாலை) போன்ற பல இடங்களில் புறவழிச்சாலைகளுடன் உள்ளது. இது இராமநாதபுரம் (தேவிப்பட்டினம் அருகே அச்சுந்தன்வயாள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலையில்) இணைக்கிறது. இதன் மூலம் இந்த நகரங்களில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இராமேசுவரத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். பழைய தேசிய நெடுஞ்சாலை-49-ன் கீழ் வரும் இந்த திட்டம், சமீப காலங்களில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழ்நாட்டில் முடிக்கப்பட்ட மிகப்பெரிய பசுமை வழித்தடங்களில் ஒன்றாகும்.