விரைவுவழி (expressway) என்பது அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.[1] இங்கு அணுக்கம் என்பது எவ்வாறு பிற சாலைகளிலிருந்து போக்குவரத்து விரைவுவழிக்கு மாறுகிறது என்பதாகும்; சுங்க கட்டணத்துடன் குழம்பக் கூடாது. விரைவுவழிகள் சுங்கம் இன்றி இலவசச்சாலைகளாகவும் இருக்கலாம். விரைவுவழிக்கு செல்லவும் வெளியேறவும் சாலை வடிவமைப்பின்போதே தனி பக்கச்சாலைகள் அமைந்திருக்கும். இது மணிக்கு அதிகபட்சம் 120கீ.மீ வேகத்தில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் விரைவாகச் செல்லும் போக்குவரத்திற்கு தடங்கலின்றி விரைவுவழிக்குள் செல்லவும் வெளியேறவும் இயலும். இந்தியப் போக்குவரத்து வலையமைப்பில் இவையே மிக உயர்ந்தநிலை சாலைகளாகும். இவை ஆறு அல்லது எட்டு தடவழிச் சாலைகளாக உள்ளன. இந்தியாவில் 600 கிமீ நீளமுள்ள விரைவு வழிகள் உள்ளன.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் ஏறத்தாழ 10,000 km (6,200 mi) சுங்கம் பெறும் நான்குவழி நெடுஞ்சாலைகள் உள்ளன; கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் இல்லாமையால் இவற்றை விரைவுவழிகள் என்ற கூறவியலாது. தற்போது பெரும் திட்டமொன்று இந்த நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசும் மேலும் 18,637 km (11,580 mi) விரைவுவழிகளை 2022க்குள் சேர்த்திட திட்டமிட்டுள்ளது.[2] இந்தச் சாலைகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் நான்கு அல்லது ஆறு தடவழிகளைக் கொண்டவையாகவும் இருக்கும். 3,530 km (2,190 mi) நீள சாலைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வரவுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றே இந்திய தேசிய விரைவுவழி ஆணையம் உருவாக்கிட நடுவண் அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்பாட்டைத் துவக்கி உள்ளது.[3]
இந்தியாவின் மொத்த விரைவு வழிகளின் நீளம் வருடந்தோறும்
ஏப்ரல் 2021 நிலவரப்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் எட்டு அதிவேக நெடுஞ்சாலைகள் தேசிய அதிவேக நெடுஞ்சாலையாக (NE) அறிவிக்கப்பட்டுள்ளன.