மினமாட்டா என்பது ஜப்பான் நாட்டின் கியூஷூ தீவில் மினமாட்டா விரிகுடாவின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறு கடலோர கிராமமாகும். இங்கு பாதரச நச்சேற்றத்தால் ஏற்பட்ட நரம்பியல் நோய் மினமாட்டா நோய் அல்லது மினமாட்டா கொள்ளை நோய் என்று அழைக்கப்படுகிறது.
நோயின் அறிகுறிகள்
பொதுவானவை
தள்ளாட்டம்; கை, கால்பாதங்களில் உணர்வின்மை; தசை பலவீனம்; பார்வைக் குறைபாடு; கேட்டல், பேச்சுக் குறைபாடு (நாக்குழறல்).
மிகவும் தீவிரமான நிகழ்வுகளில்
பித்துநிலை; பக்கவாதம்; நினைவிழத்தல்; இறப்பு.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
மார்ச் 2001 நிலவரப்படி, 2,265 பேர் பாதிப்பிற்கு உள்ளானதாகவும் அதில் 1,784 பேர் இறந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது;[1] மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இழப்பீட்டு நிதி பெற்றதாகவும் கூறப்பட்டது.[2] 2004 நிலவரப்படி, சிஸ்ஸோ நிறுவனம் அளித்துள்ள இழப்பீட்டுத் தொகை 86 மில்லியன் டாலர்களாகும்.
நோய்க்கான காரணங்கள்
மீத்தைல் மெர்க்குரி எனப்படும் வேதிப்பொருளால் மாசடைந்த துடுப்பு மீன், ஓட்டு மீன் ஆகியவற்றை உணவாக உட்கொண்டதால்தான் இந்நோய் மக்களைத் தாக்கியது; இது பாதரச நச்சேற்றத்தின் ஒரு அங்கமாகும். சிஸ்ஸோ நிறுவனம் (Chisso Corporation) என்ற வேதித் தொழிற்சாலையினால் வெளியேற்றப்பட்டு மினமாட்டா விரிகுடாவிலும் சிரானுயி கடலிலும் கலந்த மீத்தைல் மெர்க்குரியினால் விளைந்ததே இந்த மினமாட்டா நோய்; இந்நிறுவனம் 1932 முதல் 1968 வரை தொடர்ந்து விரிகுடாவை மாசடையச் செய்த போதிலும் அரசோ நிறுவனமோ மாசடைதலைக் கட்டுப்படுத்தவில்லை.
உயிரிவேதியல் காரணம்
சிஸ்ஸோ நிறுவனம் பிளாஸ்டிக் தயாரிப்பில் தேவைப்படும் அசிட்டால்டிஹைடு என்ற சேர்மத்தைத் தயாரித்தது; அதில் கரிமப்பாதரச சேர்மங்கள் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்பட்டன; இதனால் தொழிற்சாலைக் கழிவுகளில் பாதரச அயனிகள் காணப்பட்டன. இக்கழிவு மினமாட்டா நதியில் கலந்து கியூஷு என்னும் இடத்திலுள்ள மினமாட்டா விரிகுடாவை அடைந்து கடலோடு கலந்தது.
பாதரச அயனிகள் உள்ளபடியே நச்சற்றவை தாம்; ஆனால் கடலோர சேற்றுப்பகுதியில் உயிர் வாழும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் மீத்தைல் என்னும் வேதிப்பொருளை பாதரச அயனிகளுடன் இணைத்து அவற்றை நச்சுத்தன்மை வாய்ந்த மீத்தைல் மெர்க்குரியாக மாற்றுகின்றன; இவ்வாறு உணவுச்சங்கிலியில் மீத்தைல் மெர்க்குரி நுழைவதற்கு உயிரிவேதியல் காரணம் கூறப்படுகின்றது.[3]
பாதரச நச்சேற்றத்தின் இயங்குமுறை
உயிரிமீத்தைல் சேர்ப்பு, உயிரி உருப்பெருக்கம் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்து பாதரச நச்சேற்றத்தின் இயங்குமுறையைப் புரிந்து கொள்ளலாம்: பாதரசத்தின் நச்சுத்தன்மை 1. அதன் குறிப்பிட்ட வேதிநிலை, 2. அதன் கரைதிறன் ஆகியவற்றைப் பொருத்தது.
திரவ நிலையில் பாதரசம் நச்சுத்தன்மையற்றது; ஆனால் ஆவி நிலையில் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு மூளையைச் சேதப்படுத்துவதால் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. அதேபோல், மெர்க்குரசு குளோரைடும் (Hg2Cl2) மெர்க்குரிக் சல்ஃபைடும் (HgS) கரையாத்தன்மை வாய்ந்ததால் நச்சற்றவை ஆகும்; ஆனால் மீத்தைல் சேர்க்கப்பட்ட பாதரச சேர்மங்களான மீத்தைல் மெர்க்குரி (CH3Hg+) கொழுப்பில் கரையக்கூடிய தன்மை உடையதால் நச்சுத்தன்மை மிக்கதாய் உள்ளது. கொழுப்பில் கரையும் திறன் இருப்பதால் அது மூளையைச் சென்றடைகிறது; தாயிடமிருந்து நச்சுக்கொடியின் வாயிலாக கருப்பையில் வளரும் சேயையும் அது சென்றடைகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ Official government figure as of March 2001. See "Minamata Disease: The History and Measures, ch2"
- ↑ See "Minamata Disease Archives" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Frequently asked questions, Question 6
- ↑ சுற்றுச்சூழலியல் - தங்கமணி & சியாமளா தங்கமணி - பிரணவ் சிண்டிகேட் பதிப்பகம் - பக். 105
- ↑ சுற்றுச்சூழலியல் - தங்கமணி & சியாமளா தங்கமணி - பிரணவ் சிண்டிகேட் பதிப்பகம் - பக். 106
கலைச்சொற்கள்
பாதரச நச்சேற்றம் = mercuric poisoning; நரம்பியல் நோய் = neurological disease; கரிமப்பாதரச சேர்மங்கள் = organomercuric compounds; அயனி = ion; விரிகுடா = bay; தள்ளாட்டம் = ataxia; துடுப்பு மீன் = fin fish; ஓட்டு மீன் = shell fish; உயிரிவேதியல் காரணம் = biochemical cause; உயிரிமீத்தைல் சேர்ப்பு = biomethylation; உயிரி உருப்பெருக்கம் = biomagnification; நச்சுக்கொடி = placenta; இயங்குமுறை = mechanism;