அவசர மருத்துவம் என்பது கடிய நோய்கள், காயங்கள், நீண்டகால நோய் ஒன்றினால் திடீரென்று தோன்றும் உயிர்கொல்லி நிலைமை முதலிய சந்தர்ப்பங்களால் பாதிப்படைந்திருக்கும் அனைத்துத் தரப்பு நோயாளிகளுக்கும் உயிரைக் காக்கவென உடனடியாக வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைமையாகும். இது மருத்துவத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக அடங்குகின்றது.[1] அவசர மருத்துவம் ஒரு அவசர சிகிச்சை தேவையான நோயாளிக்கு முதன்முதலில் கொடுக்கப்படும் மருத்துவ முறைமையாகும். [2]
இம்மருத்துவ முறையில் பொதுவாக நீண்ட காலத்துக்கு அல்லது தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படாது. அவசர மருத்துவ நிபுணர்கள் நோயாளியின் நிலைமையைத் துரிதமாக அறிந்து, நோய் வகைகளை உடனடியாக அறுதியிட்டு, அதற்குரிய சிகிச்சையைத் தாமதமின்றி ஆரம்பித்து நோயாளியை மீள் நிலைக்குக் கொண்டுவருதல் அவசர மருத்துவத்தின் முக்கிய நோக்கமாகும். அவசர மருத்துவம் பல்வேறுபட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது: மருத்துவமனையில் உள்ள அவசர மருத்துவப் பிரிவும் தீவிர கண்காணிப்புப் பிரிவும், மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டுவர முன்னர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் அவசர மருத்துவச் சேவையகம், போர்க்காலம் அல்லது விபத்து போன்ற சில சந்தர்ப்பங்களில் நோய் அல்லது காயம் ஏற்பட்ட இடம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் உடனடிச் சிகிச்சை வழங்கப்படாதவிடத்து உயிருக்கு கெடுதி ஏற்படலாம். நெஞ்சு வலி, வயிற்று வலி, மூச்சுத் திணறல், இதயத்துடிப்பு ஒழுங்கின்மை மற்றும் பல சந்தர்ப்பங்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும். எடுத்துக்காட்டாக, கடிய வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி இருக்கும் ஒருவருக்கு குடல்வாலழற்சி ஏற்பட்டிருக்கலாம். உடனடியான அறுவைச்சிகிச்சை வழங்கப்படாதவிடத்து வயிற்றறையுறை அழற்சி ஏற்படும்; உயிருக்குக் கெடுதி ஏற்படுத்தும் நிகழ்வாக இது அமைகின்றது.