இறைவாக்கினர் யோவேல் (ஆங்கில மொழி: Joel; /ˈdʒoʊ.əl/; எபிரேயம்: יואל) என்பவர் கி.மு. 8 முதல் 5ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோவேல் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் இரண்டாமவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெத்துவேல் ஆவார்.[1]கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் அக்டோபர் 19 ஆகும்.
பெயர்
யோவேல் என்னும் பெயர் மூல மொழியாகிய எபிரேயத்தில் יואל (yoèl) எனவும், கிரேக்கத்தில் Ιωήλ, (ioél) எனவும், இலத்தீனில் Ioel எனவும் ஒலிக்கப்படும். இப்பெயருக்கு யாவே இறைவனை கடவுளாகக் கொண்டவர் என்பது பொருள்.[2]
வரலாற்று சுருக்கம்
யோவேல் இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. இந்நூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள் மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக யோவேல் கருதுகின்றார். மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதி மொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர் மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருளுவார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இவரின் நூல் கூறுகிறது.