கும்பமேளா

2013 ஆம் வருடம் மகா கும்பமேளா நடைபெறும் காட்சி

கும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Kumbh Mela) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உச்சைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.

திரிவேணி சங்கமம்

திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடைபெறுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண) கும்பமேளா அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிக அளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.

வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.

வானியலும் கும்பமேளாவும்

2001 ஆம் வருடம் மகா கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் கோள்களின் அமைவு

கும்பமேளாத் திருவிழா பிரயாக்கில் (அலகாபாத்) மகா மாதத்தில் நடைபெறுகின்றது. அதாவது (ஜனவரி / பெப்ரவரி). பலர் அமாவாசை நாளில் நீராடுவது மிகுந்த பலனை அளிப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார்கள். வியாழன் கோள் ரிசப இராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மகர இராசியில் இருக்கின்றன. இவ்வமைப்பே அமாவாசை நாளாகும்.

ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் (பெப்ரவரி / மார்ச் / ஏப்ரல்), சூரியன் மேச இராசியில் செல்லும் பொழுது சந்திரன் தனுசு இராசியிலும் வியாழன் கும்ப இராசியிலும் உள்ள போது கும்பமேளா நடைபெறுகின்றது.

உஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா வைகாசி மாதத்தில் அதாவது மே மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கோள்கள் துலா ராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மேச இராசியிலும் வியாழன் கோள் சிம்ம இராசியிலும் இருக்கும்.

நாசிக் பகுதியில் நடைபெறும் கும்பமேளாவானது ஸ்ரவணா மாதத்தில் அதாவது ஜூலையில் சூரியனும் சந்திரனும் கடக ராசியில் உள்ளபோது வியாழன் கோள் விருட்சிக இராசியில் உள்ள பொழுது நிகழும்.

மேலும் ஒருவகை போதைச்சுவை கொண்ட இனிய பானம் விண்ணுலகு அதாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து பூமியில் விழுகின்றது எனக்கூற்றுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புராணக் கூற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டி பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது.

கும்பமேளா

ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. இது அலகாபாத்திலும் ஹரித்துவாரிலும் மட்டும் நடைபெறும்.

நாகா சாதுக்கள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் முழு (பூர்ண) கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் மறைநதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்தபடி நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என்று கூவி மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவர்.

கும்பமேளா 2003

2003 ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோதாவரி நதிக் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளா 2010

ஹரித்துவாரில் மகர சங்கிராந்தி நாளான சனவரி 14 அன்று கும்பமேளா துவங்கியது.குளிர் நடுக்கும் அதிகாலையில் கங்கை ஆற்றின் பிரம்மகுண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த இந்துக்கள் நீராடினர்.

கும்பமேளா 2013

2013 நடைபெற்ற கும்பமேளாவில் பெப்ரவரி 10 ல் (தை அமாவாசை அன்று) சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடினர்[1]

விபத்து

1954 ல் நடைபெற்ற கும்பமேளாவில் கட்டுக்கடங்காத மக்கள்கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான மக்கள் நசுங்கி இறந்தனர். (1954 கும்பமேளா விபத்து : ஆங்கிலத்தில்)

2013 பெப்ரவரி 10 ல் நடைபெற்ற மகாகும்பமேளாவில் அலகாபாத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 36 பக்தர்கள் பலியாயினர்[2][3][4]

மேற்கோள்கள்

  1. http://dinamani.com/india/article1459987.ece
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/allahabad-stampede-toll-36/article4405705.ece
  3. http://www.thehindu.com/todays-paper/tp-in-school/36-killed-as-stampede-mars-kumbh/article4405463.ece
  4. http://www.bbc.co.uk/news/world-asia-india-21406879

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!