ரேவா மாவட்டம் (Rewa District) மத்திய இந்தியாவின்மத்தியப் பிரதேசமாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரேவா ஆகும். இந்த மாவட்டம் ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது. ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உத்தரப் பிரதேச மாநில எல்லை ஓரம் அமைந்துள்ளது. இந்திய விடுத்லைக்கு முன்னர் இம்மாவட்டம் ரேவா சமஸ்தானத்தில் இருந்தது.
ரேவா மாவட்டம் ஹுஜூர், மன்கவா, சிர்மௌர், நய்கர்கி, ஜாவா, தியோந்தர், குர்க், அனுமனா, ராய்ப்பூர் கர்சுலியன் மற்றும் மௌகஞ்ச் என பத்து வருவாய் வட்டங்களை கொண்டது. மாவட்டத் தலைமையிடமான ரேவா நகரம் ஹூஜூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
இம்மாவட்டம் ஜாவா, தியோந்தர், சர்மௌர், கங்கதேவ், அனுமனா, மௌகஞ்ச், நய்கர்கி, ரேவா, ராய்பூர் கர்சுழியான் என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய, கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய தூபிகள் இம்மாவட்டத்தின் தியோகோத்தார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. கியோட்டி நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் உள்ளது.
பொருளாதாரம்
சுண்ணாம்புக் கல் மற்றும் நிலக்கரி கனிம வளங்கள் கொண்டதால், இம்மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகள் அதிகம் கொண்டுள்ளது.
இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்தியாவின் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாகவும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் 51 மாவட்டங்களில், பின் தங்கிய 24 மாவட்டங்களில் ரேவா மாவட்டமும் ஒன்று. இதனால் இம்மாவட்டம் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் நிதியுதவி பெறுகிறது.[1]
போக்குவரத்து
அலகாபாத் வழியாக மும்பை - கொல்கத்தாவை இணைக்கும் சத்னா தொடருந்து நிலையம் ரேவா நகரத்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வாரனாசி - கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 7,
ரேவா வழியாக மிர்சாபூர், கட்னி, ஜபல்பூர், நாக்பூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களை சாலை வழியாக இணைக்கிறது.
ராஞ்சி - குவாலியர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 27 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 ரேவா வழியாக செல்கிறது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6,240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரேவா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23,63,744 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 1968257 மக்களும்; நகரப்புறங்களில் 395487 மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1224918 ஆண்களும் மற்றும் 1138826 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் வீதம் உள்ளனர். 6,240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 374 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 73.42% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.67% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 62.49% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 294393 ஆக உள்ளது.
[2]
சமயம்
இம்மாவட்ட மக்கள் தொகையில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை பெரும்பான்மையாகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை கனிசமாகவும் உள்ளது.
மொழிகள்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.