பிரித்தானிய இந்தியாவில் மன்னர் அரசு அல்லது சமஸ்தானம் (Princely state) என்பது ஒரு நிருவாகப் பிரிவு. பெயரளவில் இறையாண்மை பெற்றிருந்த மன்னர் அரசுகள், காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவற்றில் ஒருவித மறைமுக ஆட்சியே நிலவியது. ஒரு இந்திய அரசர் பெயரளவில் இவற்றை ஆட்சி செய்தாலும், உண்மையில் நிருவாக மற்றும் கொள்கைக் கட்டுப்பாடு பிரித்தானிய அரசின் கைகளில் தான் இருந்தது. இவற்றின் இந்திய ஆட்சியாளர்கள் மகாராஜா, ராஜா, நிசாம், வாலி, தாக்குர் போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தனர்.[1][2][3]
1947 இல் இந்தியா விடுதலை அடையும் போது மொத்தம் 565 சமஸ்தானங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் மிகப்பெரும்பாலானவை வரி வசூல் மற்றும் பொது நிருவாகத்தை இந்திய அரச பிரதிநிதியிடம் (வைஸ்ராய்) ஒப்படைத்திருந்தன. 21 சமஸ்தானங்கள் மட்டுமே தனிப்பட்ட அரசு எந்திரமும், நிருவாகத்துறையும் கொண்டவையாக இருந்தன. இவற்றில் மைசூர், ஐதராபாத், பரோடா அரசு, திருவாங்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டுமே பெரிய நிலப்பகுதிகள் கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் இவற்றிற் பெரும்பாலானவை விடுதலை இந்தியாவுடன் இணைந்து விட்டன. ஐதராபாத் போன்ற அரசுகளுக்கு எதிராக இந்தியா போரிட்டு, அவற்றை ஆக்கிரமிப்பின் மூலமே இணைத்துக் கொண்டது.
இச்சுதேச சமஸ்தானங்களின் அன்றாட ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்கும், பிரித்தானிய இந்திய அரசிடம் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கிலம் கற்ற, நிர்வாகத் திறன் கொண்டவர்களை திவான் எனும் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர்.