ஜான் போர்பசு கெர்ரி (John Forbes Kerry, பிறப்பு: திசம்பர் 11, 1943[1]) அமெரிக்க மேலவை (செனட்)டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் தோற்றவர். அமெரிக்க செனட்டவையில் 23 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளார். மேலும் மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநராக மைக்கேல் துகாகிசின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார். திசம்பர் 21, 2012 அன்று அதிபர் பராக் ஒபாமா கெர்ரியை இலரி கிளின்டனுக்கு அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்துள்ளார்.[2][3][4]
கெர்ரி கொலராடோவிலுள்ள அவுரோராவில் திசம்பர் 11, 1943 அன்று பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்திலும் பாசுட்டன் சட்டக் கல்லூரியிலும் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் முடித்தார். 1970இல் ஜூலியா தோம் என்பவரை மணந்து 1988இல் பிரிந்தார். 1995 முதல் தெரெசா எயின்சு என்பவருடன் இல்லறம் நடத்தி வருகிறார். இவருக்கு இரு மக்களும் இரண்டாம் மனைவியின் மூன்று மக்களும் உள்ளனர். தற்போது பாசுட்டனில் வாழ்ந்து வருகிறார்.