வரகுண வர்மன் கி. பி. 862 முதல் 880 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் என்ற பெயரையும் பெற்றிருந்த இம்மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான்[1]. பாண்டியன் சீவல்லபனின் முதலாம் மகனான இவன் தனது தந்தை கி. பி. 862 ஆம் ஆண்டு இறந்த பின்னர் பட்டம் பெற்றான். சீவல்லபன் இறக்கும்போது மதுரை மாயப்பாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு பாண்டியப் பேரரசை மாயப்பாண்டியனிடமிருந்து மீட்டுக் கொண்டான்[1]. பல்லவ மன்னனான நிருபதுங்கவர்ம பல்லவனுடனான நட்பின் காரணமாக பாண்டிய, பல்லவப் போர் இவன் காலத்தில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரகுண வர்மன் ஆற்றிய போர்கள்
கி. பி. 880 ஆம் ஆண்டில் பெரும்படையுடன் வரகுணவர்மன் சோழநாட்டின் மீது படையெடுத்து அங்கு காவிரியின் வடக்கே உள்ள மண்ணி நாட்டில் இடவை என்ற நகரை வென்றான். ஆதித்த சோழனுடன் போர் புரிந்து அவனை வெற்றி கொண்டான். இடவை நகரில் தன் பாட்டன் கட்டிய அரண்மனையினைக் கைப்பற்றினான். அபராசித வர்ம பல்லவன் வரகுண வர்மனை வெல்ல நினைத்து ஆதித்த சோழனுடனும், கங்க நாடன் பிருதிவிபதியுடனும் வந்தான். திருப்புறம்பியம் போரில் கங்கன் இறந்து சோழ, பல்லவ மன்னர்கள் வெற்றி பெற்றனர்[1]. பாண்டியன் தோல்வியுற்றான். கங்க மன்னனுக்கும். பல்லவ மன்னன் ஒருவனுக்கும் உதிரப்பட்டியிலும், கச்சியாண்டவர் கோயிலிலும் நடுகற்கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரகுண வர்மன் ஆற்றிய கோயில்பணிகள்
இவன் ஆற்றிய கோயில்பணிகள் பின்வரும் கல்வெட்டுகளில் அடக்கம்.
- வரகுணவர்மன் எட்டாம் ஆட்சி ஆண்டான சகம் 792 ஆம் ஆண்டு மதுரை ஐவர்மலையில் உள்ளது. கி. பி. 870 ஆம் ஆண்டில் இது பொறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- சின்னமனூர்ச் செப்பேடு; குரைகழற்கால் அரை சிறைஞ்சக்குவலயதலந்த் தனதாக்கினவரை புரையும் மணி நெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மன் எனச் சிறப்பித்துக் கூறுகின்றது.
மேற்கோள்கள்